பிப்ரவரி 4-மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்
உடன்பிறந்த நிலை மெய் நிகர் கூட்டத்தில் திருத்தந்தை
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 06 Feb, 2021
"நாம் உடன்பிறந்தோராய் இருக்கிறோம், அல்லது, ஒருவர் ஒருவரை அழிக்கிறோம்" என்ற உணர்வுப்பூர்வமான சொற்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகில், முதல்முறையாக சிறப்பிக்கப்படும் ’மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாள்’ மெய் நிகர் கூட்டத்தில் உரையாற்றினார்.
பிப்ரவரி 4ம் தேதியை ’மனித உடன்பிறந்த நிலையின் அனைத்துலக நாளாக’ சிறப்பிக்க ஐ.நா. நிறுவனம் எடுத்த முடிவின்படி, இந்த அகில உலக நாள், முதல் முறையாகக் கொண்டாடப்பட்டது.
உடன்பிறந்த நிலையை உருவாக்க முயற்சிகள்
இந்தக் கொண்டாட்டம், இணையவழி மெய் நிகர் கூட்டமாக, பிப்ரவரி மாதம் 4 ஆம் தேதி உரோம் நேரம் 2.30 மணிக்கு, இக்கூட்டத்தில் உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உடன்பிறந்த நிலையை உருவாக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை தன் உரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.
2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 4ஆம் தேதியன்று, அபு தாபியில், அல் அசார் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களும், தானும் இணைந்து, கையெழுத்திட்ட ’உலக அமைதிக்காகவும், இணைந்து வாழ்வதற்காகவும் மனித உடன்பிறந்த நிலை’ என்ற அறிக்கை உருவாக உழைத்த பலருக்கு திருத்தந்தை நன்றி தெரிவித்தார்.
இந்த அறிக்கையில் கையெழுத்திடும் நிகழ்வை அபு தாபியில் ஏற்பாடு செய்த இளவரசர் ஷேக் முகமத் பின் சையத், இந்த அறிக்கையின் உருவாக்கத்தில் மிகப்பெரும் அளவில் உழைத்த நீதிபதி அப்தெல் சலாம் ஆகியோர், உடன்பிறந்த நிலை இவ்வுலகில் சாத்தியம் என்பதை உணர்ந்து இந்த முயற்சியை மேற்கொண்டனர் என்று திருத்தந்தை தன் உரையில் கூறினார்.
உடன்பிறந்த நிலை என்பது...
உடன்பிறந்த நிலை என்பது, நாம் வாழும் இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் சவால் என்று தன் உரையில் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்கறையற்று வாழ்வதற்கோ, பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் வண்ணம் கரங்களைக் கழுவிவிடுவதற்கோ தற்போது நேரம் இல்லை என்று எடுத்துரைத்தார்.
உடன்பிறந்த நிலை என்பதன் பொருளை பல்வேறு செயல்பாடுகள் வழியே விளக்கிக்கூற முயன்ற திருத்தந்தை, உடன்பிறந்த நிலை என்பது, கரங்களை நீட்டுதல், மதிப்பளித்தல், செவிமடுத்தல் என்ற செயல்கள் வழியே வெளிப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
பல்வேறு நாடுகளின் குடிமக்களாக நாம் இருந்தாலும், ஒரே இறைவனின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் குடியுரிமை, மரபுகள், கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் பெரும் மதிப்பு கொண்டிருக்கும் அதே வேளையில், அடுத்தவரின் குடியுரிமை, மரபுகள், கலாச்சாரம் ஆகிய அனைத்தின் மீதும் மதிப்பு காட்ட அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை நினைவுறுத்தினார்.
உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களுக்கு நன்றி
உடன்பிறந்த நிலையை நோக்கி, தன்னுடன் பயணித்துவரும் உயர் குரு அகமத் அல்-தய்யெப் அவர்களுக்கு நன்றி கூறிய திருத்தந்தை, உடன்பிறந்த நிலையைக் குறித்து உலக மக்களின் கவனத்தை ஈர்க்க, இந்த முதல் உலக நாளை உருவாக்கிய ஐ.நா. நிறுவனத்திற்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
இந்த முதல் உலக நாள் நிகழ்வுகளின்போது, சையத் (Zayed) விருதினைப் பெறுகின்ற லத்திஃபா இபின் ஷியாட்டன் என்ற பெண்மணிக்கும், ஐ.நா. நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர், அந்தோனியோ கூட்டேரஸ் அவர்களுக்கும் தன் பாராட்டுக்களை வழங்கி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் உரையை நிறைவு செய்தார்.
இறைவனின் குரலையும், அயலவரின் குரலையும் கேட்பதால் உருவாகும் நல்லிணக்கம், உலகளாவிய உடன்பிறந்த நிலையை உருவாக்குவதாக என்ற விண்ணப்பத்துடன் திருத்தந்தை தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.
Comment