No icon

திருத்தந்தை பிரான்சிஸ்-மூவேளை செப உரை

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர்ந்திட....

இறைவார்த்தையின் முழு வலிமையை உணர உங்களை அனுமதியுங்கள் என இஞ்ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செப உரையின்போது  திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்பு விடுத்தார்.

ஒய்வு நாள்களில் இயேசு தொழுகைக்கூடத்திற்குள் சென்று கற்பித்துவந்தார், எனத் துவங்கும் அன்றைய நற்செய்தி வாசகத்தை (மாற் 1: 21-28) மையமாக வைத்து, தன் நூலக அறையிலிருந்து நண்பகல் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவைப் பின்பற்றவும், அவருக்கு செவிமடுக்கவும், நம் வாழ்வில் மீட்பின் அருங்குறிகளைக் கண்டுகொள்ளவும், திறந்த மனதுடையவர்களாக நற்செய்தியை வாசிக்க முன்வருவோம் என்ற அழைப்பை முன்வைத்தார்.

மறைநூல் அறிஞரைப் போலன்றி, அதிகாரத்தோடு மக்களுக்கு இயேசு கற்பித்து வந்தார் என்பதையும், அதே தொழுகைக்கூடத்தில் தீய ஆவி பிடித்த ஒருவரிடமிருந்து தீய ஆவியை இயேசு விரட்டியதையும் குறித்துப் பேசும் இந்நாளின் நற்செய்தியிலிருந்து கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இயேசுவின் இரு முக்கியப் பணிகளான கற்பித்தலையும், குணப்படுத்தலையும் இப்பகுதி நமக்கு உணர்த்துகிறது என்று கூறினார்.

இறை அதிகாரத்தோடு இயேசுவின் போதனை

அவர் தொழுகைக்கூடத்தில் அதிகாரத்துடன் கற்பித்ததே இங்கு முக்கிய கருத்தாக முன்னிறுத்தப்படும்வேளை, தீய ஆவியை விரட்டியது, அவரின் தனிப்பட்ட அதிகாரத்தை உறுதிப்படுத்தும் ஒன்றாக உள்ளது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.

முந்தைய பாரம்பரியங்களையும், சட்டங்களையும் மீண்டும் எடுத்துரைக்கும் மறைநூல் அறிஞர்களைப்போல் அல்லாமல், தனக்குள்ள தனிப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு தன் கோட்பாடுகளைக் கற்பிக்கும் இயேசு, அதே அதிகாரத்தோடு, ஒரே வார்த்தையால் தீய ஆவியையும் ஓட்டுகிறார் என்பதை விளக்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அவரின் வார்த்தை உடனடிப் பலனைக் கொணர்வதை நாம் காண்கிறோம் என்றார்.

இவ்வுலகின் தீமைகளை வெற்றிகாண்பவர் இயேசு

மனித குலத்திலும், உலகிலும் காணப்படும் தீமைகளை வெற்றிகாண உதவுவதே இயேசுவின் போதனை, ஏனெனில் ,இயேசுவை எதிர்கொண்ட தீய ஆவி, ’எங்களை ஒழித்துவிடவா வந்தீர்?’, என இயேசுவை நோக்கிக் கேட்பதிலிருந்தே இது தெளிவாகின்றது, என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.

இயேசுவும், தீய ஆவியும் ஒருவருக்கொருவர் நேர் எதிரானவர்கள் என்பதையும், அவர்களின் திட்டங்கள் வேறுபட்டவை என்பதையும், தீய ஆவியை உலகிலிருந்து விரட்டவே இயேசு வந்தார், அதற்கு உரமூட்டுவதாகவே இயேசுவின் போதனை உள்ளது என்பதையும், இஞ்ஞாயிற்றுக்கிழமை நற்செய்தியில் வாசிக்கின்றோம் என்றும் திருத்தந்தை கூறினார்

விவிலியத்தை எடுத்துச் செல்லுங்கள்

ஒய்வு நாளன்று கப்பர்நாகும் தொழுகைக் கூடத்தில் இயேசு அதிகாரத்துடன் கற்பித்ததை வியப்புடன் பார்த்த அங்கிருந்த மக்களின் மனநிலை, நமக்கும் வரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒவ்வொருவரும் நற்செய்தி நூலை தங்களோடு ஒவ்வொரு நாளும் எடுத்துச் செல்வதுடன், அதனை, திறந்த மனதுடன் ஆழமாக வாசித்து, இறைவார்த்தையால் நாம் தொடப்படவும், குணப்படுத்தப்படவும் அனுமதிப்போம், என கேட்டுக்கொண்டார்.

Comment