திருத்தந்தை பிரான்சிஸ்
மறைக்கல்வி என்பது, இறைவார்த்தையின் எதிரொலி
- Author Fr.Gnani Raj Lazar --
- Saturday, 06 Feb, 2021
இத்தாலிய ஆயர் பேரவையின் மறைக்கல்வி அலுவலகம் துவக்கப்பட்டதன் அறுபதாம் ஆண்டு நிறைவையொட்டி, அதன் அதிகாரிகளை ஜனவரி 30 ஆம் தேதி திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்விக்கும், நற்செய்தி அறிவித்தலுக்கும், வருங்காலத்திற்கும், சமுதாயத்திற்கும் இடையேயுள்ள தொடர்பு குறித்து எடுத்தியம்பினார்.
திருஅவையின் மறைக்கல்வியும் நற்செய்தி அறிவித்தலும், மறைக்கல்வியும் வருங்காலமும், மறைக்கல்வியும் சமுதாயமும் என மூன்று தலைப்புகளில் தன் கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைக்கல்வி என்பது, இறைவார்த்தையின் எதிரொலி என்பதை வலியுறுத்தினார்.
விசுவாசத்தை வழங்குவதில் இறைவார்த்தை, அதாவது, விவிலியம், நமக்கு அடிப்படையான ஒன்றாக இருக்கும் வேளையில், அந்த நற்செய்தியின் மகிழ்வை நமக்குக் கொணர மறைக்கல்வி உதவுகிறது என திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
நற்செய்தி அறிவித்தலின் மையமாக இயேசுவே இருப்பதால், மறைக்கல்வி என்பது, இயேசுவை நேருக்கு நேராக சந்தித்து உரையாடவும், அவரோடு தனிப்பட்ட, நெருங்கிய ஓர் உறவை வளர்க்கவும், சான்றுகளாக விளங்கவும் உதவுகிறது என மறைக்கல்விக்கும் நற்செய்தி அறிவித்தலுக்கும் இடையேயுள்ள நெருங்கிய தொடர்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
மறைக்கல்வியும் வருங்காலமும் என்ற தன் இரண்டாவது கருத்து குறித்து எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்தந்த காலத்தின் அறிகுறிகள், மற்றும், உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்களாகச் செயல்பட வேண்டியதன் அவசியம், மற்றும், பிறரன்பு, திருவழிபாடு, குடும்பம், கலாச்சாரம், சமுதாய வாழ்வு, பொருளாதாரம் ஆகிய துறைகளில் புதுப்பிக்கப்பட்ட மறைக்கல்வியுடன் செயல்படுதல் போன்றவை குறித்தும் எடுத்தியம்பினார்.
நவீனகால மக்களின் கேள்விகள், தீர்க்கமுடியாத பிரச்சனைகள், உடைபடும் தன்மைகள், நிச்சயமற்ற நிலைகள் போன்றவைகள் குறித்து அச்சம் கொள்ளாமல் மறைக்கல்வியாளர்கள் செயல்படவேண்டும் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை, மாற்றுத்திறனாளிகளுடன் அவர்கள் ஆற்றிவரும் சேவைக்கு தன் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக, தனிமைப்படுத்தலும், தனிமை உணர்வுகளும் அதிகரித்து வரும் இன்றையச் சூழலில், ஒரே சமுதாயமாக அனைவரையும் உணரவைக்க வேண்டிய கடமை குறித்து, மறைக்கல்வியும் சமுதாயமும் என்ற தலைப்பில் கருத்துக்களைப் பகிர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு, வெளிவருவதற்கு, அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட்டாலே இயலும் என்பதை, அண்மை நெருக்கடி நமக்கு காட்டியுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சமுதாயம் என்பது, ஒருவர் மற்றவர் மீது அக்கறை கொண்டு ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து செயல்படவேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சமுதாயம் என்ற முழு உணர்வை உள்வாங்கி செயல்படுவதன் வழியாகவே, ஒவ்வொருவரும் தங்கள் மாண்பை முழுமையாகக் கண்டுகொள்ள முடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
சமுதாயத்தில் காயம்பட்டுள்ள மக்களுக்கு நல்ல சமாரியராக இருந்து, அவர்கள் அருகில் சென்று கருணையுடன் அவர்களின் காயங்களுக்கு மருந்திட வேண்டிய தேவை குறித்தும் திருத்தந்தை பிரான்சிஸ் எடுத்துரைத்தார்.
Comment