No icon

திருத்தந்தையின் 33 வது திருத்தூதுப் பயணம்- ஈராக் திருத்தூதுப் பயணம் - 21.03.2021

திருத்தந்தையின் 33 வது திருத்தூதுப் பயணம்- ஈராக் திருத்தூதுப் பயணம்

ஈராக்! உலக வரலாற்றில் பெரும்போரினாலும் உள்நாட்டு கலவரங்களாலும் சூறையாடப்பட்ட சிறிய நாடு. கலாச்சாரத்தின் தொட்டில் என்று வரலாற்று அறிஞர்களால் புகழப்படும் இந்நாடு, சுமேரியர், அசீரியர், பாபிலோனியர், செலுக்கியர், பார்த்தியர், பெர்சியர், கிரேக்கர், உரோமையர் உட்பட, எண்ணற்ற வல்லரசுகளால் வல்லாதிக்கம் செய்யப்பட்டது. கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்குப் பிறகு முஸ்லீம்கள் வசமாகிப் போன இந்நாட்டில் எண்ணெய் வளம் அளப்பரியது. பாக்தாத், பஸ்ரா, மொசூல் போன்ற நகரங்கள் இந்நாட்டில் குறிப்பிடத்தக்க நகரங்களாகும்.

சவுதி அரேபியாவிற்கு அடுத்து, மிக அதிகமான எண்ணெய் வளம் கொண்டிருந்த இந்நாட்டை, சதாம் உசேன் தலைமையிலான பாத் கட்சி நீண்ட காலம் ஆண்டது. தனக்கென சிறந்த ஆயுதப் படையைக் கொண்ட இந்நாடு ஈரானுடன் மேற்கொண்ட போர், வளைகுடா போர் ஆகியவற்றால் பேரிழப்பைச் சந்தித்தது. சிறுபான்மையினரான குர்தி இன முஸ்லீம்கள், பெரும்பான்மையினரான ஷியா முஸ்லீம்களால் ஒடுக்கப்பட்டனர். 2003 ஆம் ஆண்டில் அமெரிக்கா தலைமையில் நடைபெற்ற ஈராக் போரில் சதாம் உசேன் கொல்லப்பட்ட பிறகு, ஈராக்கின் பொருளாதாரமும் அரசியலும் பாதிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பிறகு, குர்திஸ்தான் தன்னாட்சி அமைப்பு உறுதிசெய்யப்பட்டது. தற்போது மக்களவை கூட்டாட்சி தத்துவத்துடன் ஜனநாயக குடியரசாக நடுவண் அரசால் ஆளப்படுகிறது. இருப்பினும் 2014 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டுவரை ஐஎஸ்ஐஎஸ் என்ற இஸ்லாமிய தீவிரவாத அமைப்பிடம், ஈராக் குடியரசு பெருமளவு நிலபரப்பை இழந்தது. நான்கு கோடி மக்கள்தொகைக் கொண்ட இச்சிறிய நாடு, போரினாலும், கோவிட் - 19 தாலும் மிகப்பெரிய துயரைச் சந்திக்கிறது. வடக்கே துருக்கியையும். கிழக்கே ஈரானையும் மேற்கே சிரியாவையும் ஜோர்டனையும் தெற்கே சவுதி அரேபியாவையும் குவைத்தையும் கொண்ட இந்நாடு, யூப்ரடீஸ் டைகரிஸ் ஆகிய இருநதிகள் பாயும் வளம் நிறைந்த பூமியாகும். இங்கு 98 விழுக்காட்டினர் முஸ்லீம்கள். ஒரு விழுக்காட்டினர் கல்தேய கத்தோலிக்கர், ஆர்த்தோடக்ஸ் மற்றும் பிற கிறிஸ்தவ சபையினர், அசீரிய கிறிஸ்தவர்கள். ஒரு விழுக்காட்டினர் பிற மதங்களைச் சார்ந்தவர்கள். அந்நாட்டில் பழங்காலத்திலிருந்தே முஸ்லீம்களும் கிறிஸ்தவர்களும் இணக்கமாகவே வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 1950 ஆம் ஆண்டு மக்கள்தொகையில் 10 முதல் 12 சதவீதமாக இருந்த கிறிஸ்தவர்கள் 1987 ஆம் ஆண்டு எட்டு சதவீதமாக குறைந்தனர். சதாம் உசேன் காலத்தில் பெருமளவில் கொல்லப்பட்டனர். 2003 ஆம் ஆண்டு சதாம் உசேன் கொல்லப்படுவதற்கு முன்பு 14 இலட்சமாக இருந்தனர். காலப்போக்கில் மேலும் மேலும் குறைந்து தற்போது சில ஆயிரங்களில் உள்ளனர். இஸ்லாமிய தீவிரவாதிகளால் கடந்த பத்து ஆண்டுகளில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள், அருள்பணியாளர்கள், ஆயர்கள் கொல்லப்பட்டனர். கடத்தப்பட்டு சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் ஏதிலிகளாக வேற்று நாடுகளுக்கு புலம்பெயர்ந்துள்ளனர். கிறிஸ்தவ ஆலயங்களும் குடியிருப்புகளும் தரைமட்டமாக்கப்பட்டன. மொசூல் நகரமும் அதனைச் சுற்றியுள்ள கிறிஸ்தவ கிராமங்களும் சூறையாடப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள், குர்திஸ்தானின் தன்னாட்சி அமைப்பான எர்பிலில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இவ்வாறு பல்வேறு வழிகளில் துன்பங்களை எதிர்கொண்டுள்ள ஈராக் கிறிஸ்தவர்களையும், மற்றவர்களையும் சந்தித்து அவர்களை ஊக்கப்படுத்துவதற்காக திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக்கிற்குச் சென்றார். மார்ச் மாதம் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் மார்ச் மாதம் 8 ஆம் தேதி திங்கள்கிழமை வரை திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்ட திருத்தூதுப்பயணம் திருஅவை வரலாற்றில் மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. இதற்கு முன்பு திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் 2000 - இல் ஜூபிலி கொண்டாடப்படுவதற்கு முன்பு ஈராக் செல்ல திட்டமிட்டிருந்தார்; ஆனால் பல்வேறு காரணங்களுக்காக இத்திருப்பயணம் நிறுத்தப்பட்டது. திருத்தந்தை பிரான்சிஸ் கடந்த 2020 ஆம் ஆண்டு ஈராக் செல்ல திட்டமிட்டிருந்தார். ஆனால், கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக இப்பயணம் நடைபெறவில்லை. கடந்த பதினைந்து மாத இடைவெளிக்குப் பிறகு, இவ்வாண்டில் முதன் முதலாக திருத்தந்தை பிரான்சிஸ் மேற்கொண்டார். இது திருந்த்தந்தையின் 33 வது திருத்தூதுப் பயணமாகும். கத்தோலிக்க திருஅவையின் தலைவரான திருத்தந்தை ஒருவர், ஈராக் நாட்டிற்கு மேற்கொண்ட முதல் திருத்தூதுப்பயணம் இதுவாகும்.

மார்ச் மாதம் 4 ஆம் தேதி, ஈராக் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பு, உரோமை மேரி மேஜர் பசிலிக்கா சென்று ஈராக் பயணத்தை அன்னை மரியாவிடம் அர்ப்பணித்து செபித்தார். திருத்தூதுப் பயணம் தொடங்குவதற்கு முன்பும் முடிந்து திரும்பும் வழியிலும் இவ்வாலயம் சென்று அன்னை மரியாவிடம் செபிப்பதைத் திருத்தந்தை பிரான்சிஸ் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்.

ஈராக்கில் செயல்பட்டு வருகின்ற ஷியா புரட்சிக்குழு ஒன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின், ஈராக் திருத்தூதுப் பயணத்தை முன்னிட்டு, ஒருதலைச் சார்பான இடைக்காலப் போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது. Guardians of Blood Brigade என்று அழைக்கப்படும் இந்தப் புரட்சிக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின்போது, எந்தவிதமான ஆயுத தாக்குதல்களையும் நிறுத்தி வைக்கிறோம், இதனை, இமாம் யட- al-Sistani  அவர்களை மதிப்பதன் அடையாளமாகவும், அராபிய விருந்தோம்பலின் பெயரிலும் ஆற்றுகின்றோம் என்று கூறப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 5 ஆம் தேதி வத்திக்கானில் திருத்தந்தை தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லத்தில், இத்தாலியில் புலம் பெயர்ந்து வாழ்கின்ற ஈராக் நாட்டைச் சேர்ந்த பனிரெண்டு பேரைச் சந்தித்துப் பேசினார். அவர்களை ஆசிர்வதித்து, அவர்களிடமிருந்து ஆசிரைப் பெற்று, 29 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள உரோமை ஃபியுமிச்சினோ பன்னாட்டு விமானத்தளத்திலிருந்து காலை 6.50 மணிக்கு ஈராக் தலைநகர் பாக்தாத்திற்குப் புறப்பட்டார். இத்திருத்தூதுப் பயணத்தில் உடன் பயணித்த பன்னாட்டு ஊடகவியலாளர்கள் அனைவரையும் கைக்குலுக்காமல் முகக்கவசம் அணிந்து வாழ்த்தி, பல ஆண்டுகள் மிகவும் துன்புற்றுள்ள இந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதை ஒரு கடமை என்று உணர்ந்தேன் என்று உணர்ச்சிப் பொங்க கூறினார். 2947 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த விமானப் பயணத்தில். வானில் கடந்து சென்று கிரேக்கம்,

சைப்ரஸ், பாலஸ்தீனம், இஸ்ரேல், ஜோர்டன் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கும் மக்களுக்கும் தந்தி செய்திகளின் வழியாக தம் வாழ்த்தையும் ஆசிரையும் அளித்தார்.

ஈராக் நேரம் பகல் 2 மணியளவில், அதாவது இந்திய நேரம், மாலை 4 மணியளவில், பாக்தாத் பன்னாட்டு விமானத்தளம் சென்றடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, ஈராக் பிரதமர் Mustafa al-Kazemi  அவர்கள், விமானப்படிகளில் நின்று வரவேற்றார். பாரம்பரிய உடைகளை அணிந்த இரு சிறார், ஈராக் மற்றும், வத்திக்கான் கொடிகளை ஏந்திக்கொண்டு, மஞ்சள் நிற மலர்க்கொத்து ஒன்றைத் திருத்தந்தைக்கு அளித்தனர். சிவப்பு கம்பள இராணுவ மரியாதையும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. பின்னர், அந்த விமான நிலையத்தின் விருந்தினர் அறையில், திருத்தந்தையும், பிரதமரும் தனியே சந்தித்துப் பேசினர். அச்சமயத்தில், வெள்ளிப் பதக்கம் ஒன்றையும், “அனைவரும் உடன்பிறந்தோர் (Fratelli tutti)” என்ற திருமடலின் சிறப்புப் பதிப்பு ஒன்றையும், பிரதமருக்குப் பரிசாக திருத்தந்தை அளித்து மகிழ்ந்தார்.

ஈராக் தலைநகர் பாக்தாத் பன்னாட்டு விமானத்தளத்தில் சென்றிறங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அந்நாட்டு பிரதமர் முஸ்தபா அல்கசீமி அவர்கள் வரவேற்றார்.

அந்த சந்திப்பிற்குப் பின்னர், விமான நிலையத்திலிருந்து 21 கிலோமீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு, பலத்த பாதுகாப்புடன் காரில் சென்றார். திருத்தந்தை பிரான்சிஸ். சாலைகளின் ஓரங்களில் மக்கள் ஈராக் மற்றும் வத்திக்கான் கொடிகளை ஆட்டிக்கொண்டு மகிழ்வோடு நின்று கொண்டிருந்தனர். ஈராக் அரசுத்தலைவர் பஹ்ராம் அகமத் சாலிஹ் குவாசிம் அவர்கள், அந்த மாளிகையின் நுழைவாயிலிலே நின்று, திருத்தந்தையை வரவேற்றார். திருத்தந்தைக்கு அதிகாரப்பூர்வ வரவேற்பும் வழங்கப்பட்டது. சிவப்பு கம்பளத்தில் நடந்துசென்ற திருத்தந்தைக்கு இரு சிறார் மலர்களை வழங்கினர்.

அதனைத் தொடர்ந்து, ஈராக் அரசுத்தலைவர் பஹ்ராம் சாலிஹ் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றார். அப்போது அவர், தங்களின் வருகையை, ஒரு வரலாற்று வாய்ப்பாக நாங்கள் உணர்கிறோம். "சமய உரையாடலுக்கு ஆபிரகாம் இல்லம்" என்ற தலைப்பில் நாங்கள் மேற்கொண்டுள்ள முயற்சியை ஆசிர்வதித்தருளும். திருத்தந்தையே, எங்களின் காயங்களைக் குணப்படுத்தி வருகிறோம்.

தாங்களும் எங்களோடு சேர்ந்து குணப்படுத்துகிறீர்கள். தங்களின் வருகையை ஈராக்கியர்களாகிய நாங்கள்

பெருமையோடு நினைக்கின்றோம், வருகைக்கு மிக்க நன்றி என்று நெகிழ்ந்து உரையாற்றினார்.

அதன் பின்னர் அரசு மரியாதையுடன் கூடிய வரவேற்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் ஈராக் அரசு அதிகாரிகள் மத்தியில் உரையாற்றினார். அனைவரும் மாண்புடன்கூடிய வாழ்வை அனுபவிக்கும் வண்ணம், ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக்கொண்டார்.

 ஈராக் அரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற சந்திப்பை நிறைவுசெய்து, பாக்தாத் நகரிலுள்ள, மீட்பரின் அன்னை மரியா சீரோ கத்தோலிக்க ஆலயத்திற்கு  சென்றார் திருத்தந்தை. அங்கு இரு இளையோர் திருத்தந்தையிடம் மலர்க்கொத்தை அளிக்க, திருத்தந்தை அதனைத் திருநற்கருணை பெட்டியின்முன் வைத்து செபித்தார். முதலில், முதுபெரும்தந்தை யூனென் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார்.அதன்பின்னர், அந்தஆலயத்தில் அமர்ந்திருந்த, ஏறத்தாழ நூறு, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், அருள்பணித்துவ பயிற்சி மாணவர்கள், வேதியர் ஆகியோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார். அப்போது ஈராக்கில் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்கள், இச்சமுதாயத்தில், கடுகு விதைகளாக வாழ, உங்கள் முயற்சிகளைத் தொடரும்படி கேட்டுக்கொள்கிறேன் என்று வேண்டுகோள் விடுத்தார்.

அந்த ஆலயத்தின் விருந்தினர் புத்தகத்தில், ஈராக் மக்கள், உடன்பிறந்த உணர்வில், நாட்டை மீள்கட்டமைப்பதற்கு, அவர்களுக்கு வலிமையை வழங்குமாறு, கன்னி மரியாவின் பரிந்துரை வழியாக, நம்பிக்கை, மற்றும் அமைதியின் திருப்பயணியாக, இறைவா உம்மிடம் மன்றாடுகிறேன் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எழுதினார். இந்நிகழ்வு நிறைவுற்றபோது ஈராக் நேரம் மாலை ஏறத்தாழ 6 மணியாக இருந்தது. அதற்குப்பின், திருத்தந்தை பாக்தாத் திருப்பீட தூதரகம் சென்றார். அங்கு வளாகத்தில் கூடியிருந்த மக்கள் திருத்தந்தையை வரவேற்றனர். இத்துடன் பாக்தாத் நகரில் திருத்தந்தையின் முதல் நாள் பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

இரண்டாம் நாள்

மார்ச் 6 ஆம் தேதி சனிக்கிழமையன்று, இரண்டாவது பயணத்திட்ட நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஈராக் நாட்டின் நஜாஃப் நகரிலிருந்து, நசிரியா நகருக்கு, ஐம்பது நிமிடங்கள் விமானப் பயணம் ஒன்றை மேற்கொண்டார். அங்கிருந்து 5.4 கிலோமீட்டர் தூரத்திலுள்ள, இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் பிறப்பிடமான, கல்தேயர்களின் ஊர் (Ur) என்ற நகருக்குக் காரில் சென்றார். தந்தை ஆபிரகாம் கடவுள் கட்டளைப்படி, தன் சொந்த பூமியான ஊர் என்ற இடத்திலிருந்துதான் (தொநூ11:28-31), கானான் நாட்டிற்குக் குடிப்பெயர்ந்தார். ஊர் நகரில், மூன்று ஆபிரகாம் மதங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். திருத்தந்தை பிரான்சிஸ். செப வழிபாடாக நடைபெற்ற இந்நிகழ்வில், தொடக்க நூலிலிருந்து ஒரு பகுதி வாசிக்கப்பட, குரான் புனித நூலிலிருந்து ஒரு பகுதி பாடப்பட்டது. 2002 ஆம் ஆண்டில் பசோராவில் பிறந்த தாவூத் ஆரா என்ற கிறிஸ்தவ இளைஞரும், அதே ஆண்டில் அதே நகரில் பிறந்த ஹாசன் சலிம் என்ற இஸ்லாமிய இளைஞர், சாபீன் மன்டீன் மதத்தைச் சேர்ந்த ராஃபா ஹூசைன் பாகர் என்ற பெண், நசிரிய பல்கலைக்கழக இஸ்லாமிய பேராசிரியர் அலி சாகீர் தாஜ்ஜீல் ஆகியோர் சான்று பகர்ந்தனர். ராஃபா ஹூசைன் பாகர் அவர்கள், திருத்தந்தையிடம், திருத்தந்தையே, அனைத்து ஈராக்கியர்களை மன்னிப்போடு ஆசிர்வதியும். Basrah என்ற ஊரில், நாஜே என்ற சாபீன் மன்டீன் மதத்தைச் சார்ந்த ஆண் ஒருவர், தன் வீட்டிற்கு அருகில் வாழ்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக தன் உயிரை இழந்தார். இவ்வாறு ஈராக்கில் நாங்கள் அனைவரும், ஒரே குடும்பமாய், நல்லிணக்கத்தோடு, ஒருவர் ஒருவருக்கு உதவிசெய்து, அமைதியில் வாழ்ந்து வருகிறோம் என்று சான்று பகர்ந்தார். இந்த பகிர்வுகளுக்குப் பின்னர், திருத்தந்தையும் உரையாற்றினார். திருத்தந்தையின் உரைக்குப்பின், ஆபிரகாமின் பிள்ளைகளின் இறைவேண்டல் எழுப்பப்பட்டது. இந்த இறைவேண்டல், இந்நிகழ்வுக்காக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கியதாகும். பல்சமயப் பிரதிநிதிகள், திருத்தந்தையோடு புகைப்படம் ஒன்றையும் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வை நிறைவுசெய்து, மீண்டும் நசிரியா நகருக்குக் காரில் சென்று, அங்கிருந்து பாக்தாத் நகருக்கு, 50 நிமிட நேர விமானப் பயணம் ஒன்றை திருத்தந்தை மேற்கொண்டார். உள்ளூர் நேரம் பிற்பகல் 2.10 மணிக்கு, பாக்தாத் திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தினார். திருத்தந்தை பிரான்சிஸ். மார்ச் 6, சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாக்தாத், கல்தேய வழிபாட்டுமுறை புனித யோசேப்பு பேராலயத்திற்குக் காரில் சென்றார். 1952 ஆம் ஆண்டில் இந்த பேராலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இது, 1956 ஆம்  ஆண்டில் ஆசிர்வதிக்கப்பட்டது. இப்பேராலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலிதான் திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப் பயணத்தின் இரண்டாவது நாள் இறுதி நிகழ்வாகும். இத்திருப்பலிக்குப்பின், திருத்தந்தை பிரான்சிஸ் பாக்தாத் திருப்பீட தூதரகத்திற்குக் காரில் சென்றார். இப்பயணத்தில் திருத்தந்தை குண்டுதுளைக்காத கறுப்புநிற காரிலே பயணம் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

இரண்டாவது நாளான சனிக்கிழமையன்று, ஈராக்கின் ஷியா இஸ்லாம் பிரிவின் ஆன்மிக, மற்றும் அரசியல் தலைநகரமான நஜாஃப்பில், அந்த பிரிவின் தலைவர் அயத்துல்லா அலி அவர்களைச் சந்தித்து, மனிதகுலத்தின் அமைதிக்கு மதங்களின் முக்கியத்துவத்தைத் திருத்தந்தை வலியுறுத்தினார். அந்தச் சந்திப்பிற்குப்பின், நசிரியா நகர் சென்று, அங்கிருந்து விவிலியத் தந்தை ஆபிரகாம் அவர்களின் பிறப்பிடமான கல்தேயர்களின் ஊர் (Ur) என்ற நகர் சென்று யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகிய மூன்று முக்கிய மதங்களின் பிரதிநிதிகளோடு பல்சமய வழிபாடு ஒன்றில் திருத்தந்தை கலந்துகொண்டார். கடவுள் பரிவுநிறைந்தவர் என்பதையும், நமது சகோதரர்கள், சகோதரிகளை வெறுப்பதால், நாம் அவரது பெயரைக் களங்கப்படுத்துகிறோம் என்பதையும், நமது தந்தை ஆபிரகாமின் நாட்டில், நாம் வலியுறுத்துகிறோம் என்று திருத்தந்தை கூறினார். பல்சமய வழிபாட்டிற்குப் பின்னர், அங்கிருந்து பாக்தாத் நகருக்குவந்து, உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு, புனித யோசேப்பு கல்தேய பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றினார். திருத்தந்தை பிரான்சிஸ். அராபிய மொழியில் பாடல்கள் பாடப்பட, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் தொன்மையான, மற்றும் ஆடம்பர கல்தேய வழிபாட்டுமுறை திருவழிபாட்டை முதன்முதலில் நிறைவேற்றினார்.

இத்திருவழிபாட்டில், பேறுபெற்றவர்களை மையப்படுத்தி திருத்தந்தை மறையுரையாற்றினார். இத்திருவழிபாட்டின் இறுதியில், கல்தேயர்களின் பாபிலோனியாவின் முதுபெரும்தந்தை கர்தினால் லூயிஸ் இரஃபேல் சாக்கோ அவர்கள், திருத்தந்தைக்கு நன்றி தெரிவித்தார். மனிதக் குடும்பத்தின் ஒன்றிப்பு, நம் பொதுவான இல்லமாகிய இப்பூமியைப் பாதுகாப்பதிலும், கொரோனா பெருந்தொற்று, வறுமை, புலம்பெயர்வு, தீவிரவாதம், பயங்கரவாதம், சூழலியல் மாசுகேடு போன்றவை உருவாக்கியிருக்கும் நெருக்கடிகளை எதிர்கொள்வதிலும், எம்மையும், ஒரே குடும்பமாக நோக்க வைக்கின்றது என்று, கர்தினால் சாக்கோ அவர்கள் திருத்தந்தையிடம் எடுத்தியம்பினார். இத்திருப்பலியே, திருத்தந்தையின் ஈராக் திருத்தூதுப்பயணத்தின் இரண்டாவது நாள் நிகழ்வுகளில் கடைசியாக இடம்பெற்றதாகும். இந்நாளில் திருத்தந்தை, விமானப் பயணங்களை கூடுதலாக மேற்கொண்டார்.

மூன்றாம் நாள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஈராக் திருத்தூதுப்பயணத்தின் மூன்றாவது நாளாகிய, மார்ச் 7 ஆம் தேதி ஞாயிறன்று, குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியான எர்பில், மோசூல், கரகோஷ் ஆகிய நகரங்களில் பயண நிகழ்வுகளை நிறைவேற்றினார். ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 6.20 மணிக்கு, பாக்தாத் திருப்பீட தூதரகத்திலிருந்து, குண்டுதுளைக்காத கறுப்புநிற காரில், பாக்தாத் விமான நிலையம் சென்று, எர்பில் நகருக்குப் பயணமானார்.

எர்பில் நகர் விமான நிலையத்தைச் சென்றடைந்த திருத்தந்தைக்கு, பெண் ஒருவர் மலர்கள் கொடுத்து வரவேற்றார். மக்கள் ஒலிவக் கிளைகளை ஆட்டிக்கொண்டு திருத்தந்தையை வரவேற்றனர். குர்திஸ்தான் அரசுத்தலைவர் நெச்சீர்வான் பர்ஷானி, பிரதமர் மஸ்ஸோர் பர்ஷானி ஆகிய இருவரும் திருத்தந்தையை வரவேற்று, அவரை அந்த விமான நிலையத்தின் முக்கிய விருந்தினர் அறைக்கு அழைத்துச் சென்றனர்.

அந்த அறையில் அரசு, சமுதாய, மற்றும் சமயத் தலைவர்கள் ஆகியோர் கூடியிருந்தனர். ஏறத்தாழ 20 நிமிடங்கள் நடைபெற்ற நிகழ்வில் அரசுத்தலைவர் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். திருத்தந்தையும் தன் எண்ணங்களை அவர்களோடு பகிர்ந்துகொண்டார். அரசுத்தலைவருக்கும், பிரதமருக்கும் வெள்ளிப் பதக்கங்களைப் பரிசாக அளித்தார். பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எர்பில் நகரிலிருந்து 86 கிலோமீட்டர் தூரத்திலுள்ள, மோசூல் நகருக்கு 35 நிமிடங்கள் ஹெலிகாப்டரில் பயணம் மேற்கொண்டார்.

ஈராக்கின் நினிவே மாவட்டத்தின் தலைநகரான மோசூலில், ஐஎஸ் இஸ்லாம் தீவிரவாத அரசால் அழிக்கப்பட்ட பகுதியில், ஈராக், மற்றும் மத்திய கிழக்கு முழுவதிலும் போர்களுக்குப் பலியான அனைவருக்காகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செபித்தார். மோசூலின் ஹோஸ் அல்-பியா மையத்தில் நடைபெற்ற செப நிகழ்வில், முதலில் மோசூல் பேராயர் நஜ்ஜூப் மைக்கேல் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின்னர், கத்தோலிக்க அருள்பணியாளர் ரெய்ட் இம்மானுவேல் அடெல் கால்லோ அவர்களும், மோசூல் குடும்பங்களின் சமுதாய மற்றும் கலாச்சார அவையின் தலைவரான சுன்னி இஸ்லாம் பிரிவைச் சார்ந்த குட்டபா ஆஹா அவர்களும், திருத்தந்தையிடம் சான்று பகர்ந்தனர். அமைதி, நீதி, நல்லிணக்க வாழ்வுக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அழைப்புவிடுத்தார். திருத்தந்தை செபித்த, ஹோஸ் அல்-பியா ஆலய வளாகம், பழங்கால கிறிஸ்தவ சமுதாயங்களின் நான்கு கிறிஸ்தவ ஆலயங்கள் சேதப்படுத்தப்பட்ட இடமாகும். மோசூல் நகரில் மட்டும், முப்பதுக்கும் மேற்பட்ட ஆலயங்கள் முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளன. அவை இன்னும் மீள்கட்டமைக்கப்படவில்லை. திருத்தந்தையின் வருகையின் நினைவாக, இங்கு புதிய ஆலயத்திற்கு அடிக்கல் மந்திரிக்கப்பட்டது. அந்த கல்லில் அராபிய மற்றும், ஆங்கிலத்தில், “நற்செய்தி அறிவிப்போரின் பாதங்கள் எத்துணை அழகாய் இருக்கின்றன” (உரோ10:15). அமைதி மற்றும் உடன்பிறந்த அன்பின் தூதராக, மோசூல் நகரம், மற்றும்  நினிவே சமவெளிக்கு வருகை தந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவாக... கிறிஸ்தவர்கள் கட்டாயமாகப் புலம்பெயர்ந்த (2003-2017), இந்த இடத்தில் "அமைதி, நீதி, பரபரப்பற்ற நல்லிணக்கம், மனிதகுல உடன்பிறந்த உணர்வு ஆகியவை பரப்பப்பட திருத்தந்தை இறைவேண்டல் எழுப்பினார்என்ற சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

ஈராக்கிய குர்திஸ்தான் தன்னாட்சிப் பகுதியின் மோசூல் நகரில் நடைபெற்ற நிகழ்வுக்குப்பின், அங்கிருந்து முப்பது கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கின்ற கரகோஷ் நகருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஹெலிகாப்டரில் சென்றார். உள்ளூர் நேரம் பகல் 11.30 மணி அளவில், கரகோஷ் அமல மரியா ஆலயத்தில், அப்பகுதி கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவர்களைத் திருத்தந்தை சந்தித்தார். இந்நிகழ்வில் பொதுநிலை விசுவாசி ஒருவரும், அருள்பணியாளர் ஒருவரும் சான்று பகர்ந்தனர். இரு சிறார், திருத்தந்தைக்கு மலர்கள் அளித்து வரவேற்றனர். முதுபெரும்தந்தை யூனென் அவர்கள் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். பின் திருத்தந்தையும் கரகோஷ் நகர் கிறிஸ்தவர்களுக்கு உரையாற்றினார். இந்த ஆலயத்தில் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கி, ஆசிர் அளித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். இந்நிகழ்வின் இறுதியில், ஓர் அழகான அன்னை மரியா திருப்படம் திருத்தந்தைக்குப் பரிசாக அளிக்கப்பட்டது. குழுமப் பிணைப்பை மீண்டும் கட்டியெழுப்புங்கள் என்று கரகோஷ் மக்களிடம் திருத்தந்தை கேட்டுக்கொண்டார். கரகோஷ் அமல மரியா ஆலயத்திலிருந்து 63 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள, எர்பில் புனித பேதுரு அருள்பணித்துவ பயிற்சி கல்லூரிக்குத் திருத்தந்தை பிரான்சிஸ் காரில் சென்றார். அங்கு மதிய உணவை அருந்திய திருத்தந்தை, அந்த கல்லூரிக்குப் புனித யோசேப்பு திருஉருவம் ஒன்றைப் பரிசாகவும் அளித்தார்.

ஞாயிறு பிற்பகல் 3.10 மணிக்கு, எர்பில் நகரின் பிரான்சோ ஹரிரி அரங்கத்திற்குச் சென்று திருத்தந்தை பிரான்சிஸ் திருப்பலி நிறைவேற்றினார். அத்திருப்பலிக்குப்பின் பாக்தாத் நகருக்கு, ஒரு மணி 5 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டார். இத்துடன் ஞாயிறு தின பயண நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

நான்காம் நாள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மார்ச் 8, திங்கள் உள்ளூர் நேரம் காலை 7 மணிக்கு, பாக்தாத் திருப்பீடத் தூதரகத்தில், விசுவாசிகளின் பங்கேற்பின்றி திருப்பலி நிறைவேற்றினார். பின்னர், அந்த திருப்பீடத் தூதரகத்தில், இந்நாள்களில் தனக்கு நல்வரவு அளித்து கவனித்துக்கொண்ட, ஏறத்தாழ முப்பது பேருக்கு நன்றி சொல்லி ஆசிர் அளித்தார். இத்திருத்தூதுப் பயணத்தைக் குறிக்கும், கலைவேலைப்பாடுகள் நிறைந்த பதக்கம், மற்றும் மொசைக் வேலைப்பாடுகள் கொண்ட, தன் தலைமைப் பணியின் இலச்சினை ஆகிய இரண்டையும், அவ்வில்லத்திற்குப் பரிசாக திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார். ராக் மக்களிடமிருந்து விடைபெற்று உள்ளூர் நேரப்படி, காலை 9.54 மணிக்கு புறப்பட்டு, ஏறக்குறைய 5 மணி 15 நிமிடங்கள் விமானப் பயணம் மேற்கொண்டு, உரோமைக்குத் திரும்பினார். விமானப் பயணத்தில், துருக்கி, கிரேக்கம், அல்பேனியா, இத்தாலி ஆகிய நாடுகளின் வான்பரப்பில் விமானம் பறந்துசெல்கையில், அந்நாடுகளின் அரசுத்தலைவர்களுக்குச் செபமும், வாழ்த்தும் கலந்த தந்திச் செய்திகளை அனுப்பவும் திருத்தந்தை மறக்கவில்லை.              உரோம் நேரம் பகல் 12.44 மணியளவில், உரோம் சம்ப்பினோ விமானத்தளத்தில் வந்திறங்கிய திருத்தந்தை, வத்திக்கானுக்குத் திரும்பிய வழியில், உரோம் மேரி மேஜர் பெருங்கோவில் சென்று, அன்னை மரியாவிற்கு, ஏராளமான மலர்கள் சாற்றி, நன்றி தெரிவித்தார்.

 

Comment