பாஸ்கா திருவிழிப்பில் திருத்தந்தையின் மறையுரை - 18.04.2021
- Author --
- Wednesday, 14 Apr, 2021
பாஸ்கா திருவிழிப்பில் திருத்தந்தையின் மறையுரை
ஏப்ரல் 3 ஆம் தேதி சனிக்கிழமை இரவு, புனித பேதுரு பெருங்கோவிலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பாஸ்கா திருவிழிப்பு திருவழிபாட்டை, முன்னின்று நடத்தி, மறையுரை வழங்கினார். அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம் இதோ:
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே! இறந்த ஓர் உடலில் நறுமணத் தைலம் பூசுவதற்கு சென்ற பெண்கள், காலியான கல்லறையைக் கண்டனர். இறந்த ஒருவருக்காக அழுது புலம்பச் சென்ற அவர்களுக்கு, வாழ்வின் செய்தி பறைசாற்றப்பட்டது. இதனால்தான், அவர்கள், ’நடுக்கமுற்று அச்சமும், வியப்பும் கொண்டிருந்தனர்’ (மாற் 16:8) என்று, இன்றைய நற்செய்தி சொல்கிறது. வெண் தொங்கல் ஆடை அணிந்த இளைஞர் அவர்களிடம், "திகிலுற வேண்டாம்; சிலுவையில் அறையப்பட்ட நாசரேத்து இயேசுவைத் தேடுகிறீர்கள்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்" (மாற் 16:6) என்று கூறினார். மேலும் அவர், "உங்களுக்கு முன்பாக அவர் கலிலேயாவுக்குப் போய்க் கொண்டிருக்கிறார்; அவர் உங்களுக்குச் சொன்னது போலவே அவரை அங்கே காண்பீர்கள்" (16:7) என்றும் கூறினார். உயிர்ப்புப் பெருவிழாவின் இச்செய்தியை நாமும் ஏற்போம். நாமும் கலிலேயாவுக்குச் செல்வோம்.
கலிலேயாவுக்குச் செல்வது என்பதன் பொருள் என்ன? இதன் முதல் பொருள், மீண்டும் புதிதாக ஆரம்பித்தல் என்பதாகும். சீடர்கள், ஆண்டவரை முதலில் சந்தித்த இடத்திற்கு, முதலில் அழைக்கப்பட்ட இடத்திற்கு திரும்பிச் செல்வது இதன் பொருள். சீடர்கள், இயேசுவுடன் வாழ்ந்து, அவரது போதனைகளைக் கேட்டு, புதுமைகளைக் கண்டிருந்தாலும், அவரை, முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை. குறிப்பாக, அவர் கூறிய சிலுவையைப்பற்றி அவர்கள் புரிந்துகொள்ளாததால், அவரை தனியே விட்டுவிட்டு ஓடினர். இப்போது, முற்றிலும் தோல்வியடைந்த நிலையில் இருந்த சீடர்களைச் சந்திக்கும் இயேசு, அந்தத் தோல்வியின் வழியே, புதிய பாதைகளை அமைக்கிறார். நம் தோல்விகள் வழியே, புதிய பாதைகளை அமைக்கவிரும்பும் இறைவன், நம்மையும் கலிலேயாவுக்கு அழைக்கிறார்.
மீண்டும் நாம் புதிதாகத் துவங்கமுடியும் என்பதே, உயிர்ப்புப் பெருவிழாவின் முதல் செய்தியாக, இன்று நான் உங்களுக்கு வழங்குகிறேன். தோல்வியால் சிதைந்துபோன நம் உள்ளங்களை, புதியதொரு கலைப்படைப்பாக உருவாக்க இறைவனால் முடியும். அவர் எப்போதும் நமக்கு முன் செல்கிறார். இந்த பெருந்தொற்றின் இருள் சூழ்ந்த நேரங்களில், உயிர்த்த ஆண்டவர் விடுக்கும் அழைப்பை ஏற்று புதிதாகத் துவங்குவோம்.
கலிலேயாவுக்கு செல்வது என்றால், கல்லறையிலிருந்து தூரமாகச் செல்வது என்றும் பொருள். இயேசுவைக் குறித்த இறந்த கால நினைவுகளில் மூழ்கியிருக்கச் சென்ற பெண்களை, நம்பிக்கையின் நினைவுகளில் வாழ இயேசு அழைத்தார். குழந்தைப்பருவம் முதல் நாம் திரட்டிவந்த கடவுளைப்பற்றிய நினைவுகளில் ஆறுதல் அடைவதை விட்டுவிட்டு, நம்மை வியக்கவைக்கும் இறைவனின் நினைவுகளில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம். கடவுள் வழங்கும் வியப்புகளைக் குறித்து நாம் அஞ்சுகிறோம். இன்று, நாம் மீண்டும் வியப்பில் ஆழ்வதற்கு இறைவன் அழைக்கிறார்.
இதுவே, உயிர்ப்புப் பெருவிழா தரும் இரண்டாவது செய்தி. அதாவது, நமது நம்பிக்கை, பழைய நினைவுகளின் தொகுப்பு அல்ல, நமது கடவுள் இறந்த காலத்தைச் சேர்ந்தவர் அல்ல. அவர், இப்போது இங்கே வாழ்கிறார். அவர் நம்முடன் தொடர்ந்து நடந்து வருகிறார். நாம் எதிர்பாராத நேரங்களிலும், இடங்களிலும் அவர் கதவுகளைத் திறந்து, புதுப் பாதைகளை அமைக்கிறார். அனைத்தையும் இழந்ததுபோல் நாம் உணர்ந்தாலும், இயேசு கொணரும் வியப்பையும், புதியனவற்றையும் ஏற்க, திறந்த உள்ளம் கொண்டிருப்போம்.
கலிலேயாவுக்குச் செல்வது என்பது, விளிம்புகளுக்குச் செல்வது என்றும் பொருள். சாத்திரம், சடங்கு ஆகியவற்றால் தூய்மை அடைந்த எருசலேம் மையத்திலிருந்து வெகுதூரம் விலகியிருந்த பகுதி கலிலேயா. இங்குதான் இயேசு தன் பணிவாழ்வைத் தொடங்கினார். உயிர்த்தபின், தன் சீடர்களுக்கு முன்னதாக, அவர் மீண்டும் கலிலேயாவுக்குச் சென்றார். அங்கு, விளிம்பு நிலையில் வாழ்வோர் நடுவே, அவரை மீண்டும் கண்டுகொள்ள, சீடர்களுக்கும், நமக்கும் அழைப்புவிடுக்கிறார். விளிம்பில் வாழும் சிறியோர் நடுவே இறைவன் இருப்பதைக் கண்டு நாம் வியந்துபோவோம். அவரை, நாம் கலிலேயாவின் தினசரி வாழ்வில், எளியோர் வடிவில் மீண்டும் கண்டுகொள்வோம்.
அன்பு சகோதரியே, சகோதரரே, இருளின் பிடியில் நீங்கள் சிக்கியிருந்தால், உங்கள் கனவுகள் சிதைந்திருந்தால், உயிர்ப்பு விழாவின் செய்தியைக் கேட்பதற்கு, உங்கள் இதயங்களைத் திறந்து வையுங்கள்: "திகிலுற வேண்டாம்; அவர் உயிருடன் எழுப்பப்பட்டார்! அவர் உங்களுக்காக கலிலேயாவில் காத்திருக்கிறார்". அங்கு, உங்கள் கண்ணீர் துடைக்கப்படும், உங்கள் அச்சம், வியப்பாக மாறும். ஏனெனில், ஆண்டவர் உங்களுக்கு முன்பாக நடந்து செல்கிறார். அவருடன், புதிய வாழ்வு துவங்குகிறது.
Comment