No icon

உயிர்ப்புப் பெருவிழா - திருத்தந்தையின் காலைத் திருப்பலி - 18.04.2021

உயிர்ப்புப் பெருவிழா - திருத்தந்தையின் காலைத் திருப்பலி

கோவிட்-19 பெருந்தொற்றின் துவக்க காலத்திலிருந்தே பெரிய அளவில் பாதிக்கப்பட்டு வரும் இத்தாலி நாடு, இன்னும் கடுமையான கட்டுப்பாடுகளுடனேயே வாழ்ந்துவருகின்றது. விழாக்காலங்களில் மக்கள் ஒன்றுகூடுவதையும், உணவகங்களில் விழா கொண்டாடுவதையும் தவிர்க்கும் பொருட்டு, இம்மாதம் 3, 4, 5 ஆகிய தேதிகளில் சில கட்டுப்பாடுகளை கடுமையாக்கியுள்ள அரசு, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு பெரியவர்கள் இருவர் மட்டுமே செல்லலாம்; 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என்ற சில தளர்வுகளையும் தந்துள்ளது. இத்தகைய ஒரு சூழலில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய உயிர்ப்புப் பெருவிழா காலைத் திருப்பலிக்கு, மிகுந்த கட்டுப்பாடுகளுடன், மிக குறைந்த எண்ணிக்கையிலேயே விசுவாசிகள் அனுமதிக்கப்பட்டனர்.
வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலின் மையத்தில் திருத்தந்தையர்கள் வழக்கமாக திருப்பலி நிறைவேற்றும் பீடத்திற்குப் பின்புறமுள்ள புனித பேதுரு பங்குதள பீடத்தில் ஏப்ரல் 4 ஆம் தேதி  உயிர்ப்புப் பெருவிழாவின் காலைத் திருப்பலியை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவேற்றினார்.
இத்திருப்பலியின் இறுதியில், புனித பேதுரு பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளராக, அண்மையில் பொறுப்பேற்றிருக்கும் கர்தினால் மவ்ரோ கம்பெத்தி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அத்துடன், கடந்த 16 ஆண்டுகள், பெருங்கோவிலின் தலைமை அருள்பணியாளராக பணியாற்றி, தன் 78வது வயதில் ஓய்வு பெற்றுள்ள கர்தினால் ஆஞ்சலோ கொமாஸ்திரி அவர்களின் அயராத பணிக்கும், ஆன்மிக வழிகாட்டுதலுக்கும், போதனைகளுக்கும், இரக்க நடவடிக்கைகளுக்கும் நன்றியை வெளியிட்டார். மேலும், உயிர்ப்புப் பெருவிழா வழிபாட்டுக் கொண்டாட்டங்கள் சிறப்புற நடைபெறுவதற்கு உதவிய அனைவருக்கும் சிறப்பு நன்றியை வெளியிட்டு, திருப்பலியை நிறைவுச் செய்து திருத்தந்தை பிரான்சிஸ் தன்  அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment