பணிவு எனும் பண்பே, அன்னை மரியாவின் இரகசியம் - திருத்தந்தை
- Author --
- Wednesday, 01 Sep, 2021
பணிவு எனும் பண்பே, அன்னை மரியாவின் இரகசியம் - திருத்தந்தை
அன்னை மரியாவின் இரகசியமே அவரின் "பணிவு" எனும் பண்பு என்பதை மையமாக வைத்து, அன்னையின் விண்ணேற்பு விழாவான ஞாயிறன்று, தன் நண்பகல் மூவேளை செப உரையை திருத்தந்தை பிரான்சிஸ் வழங்கினார்.
ஆகஸ்ட் 15, ஞாயிற்றுக்கிழமையன்று, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில், நண்பகல் வெயிலையும் பொருட்படுத்தாமல் குழுமியிருந்த மக்களுக்கு, தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்னை மரியா விண்ணேற்படைந்த நாளின் நற்செய்தியில், மரியாவின் இறைபுகழ் பாடல் மீண்டும் எதிரொலிக்கிறது, இந்த புகழ்பாடல், இறைவனின் தாயாம் அன்னை மரியாவின் புகைப்படம் போன்று உள்ளது என்பதை வலியுறுத்திக் கூறினார்.
தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்
‘ஆண்டவரை எனது உள்ளம் போற்றிப் பெருமைப்படுத்துகின்றது’.....ஏனெனில், அவர் தம் அடிமையின் தாழ்நிலையைக் கண்ணோக்கினார் (லூக் 1:47-48), என அன்னை மரியா பாடும் வரிகளுக்கு ஏற்ப, அன்னை மரியாவின் பணிவு எனும் பண்பே, இறைவனின் பார்வை அவர் மீது திரும்ப காரணமாக இருந்தது என்றுரைத்தத் திருத்தந்தை, இதற்கு எடுத்துக்காட்டாக, சாமுவேல் முதல் நூலில், ‘மனிதர் முகத்தைப் பார்க்கின்றனர்; ஆண்டவரோ அகத்தைப் பார்க்கின்றார்’ (1 சாமு 16:7), என்ற வார்த்தைகளை மேற்கோள்காட்டினார்.
அன்னை மரியாவின் பணிவு எனும் பண்பே, அவரை விண்ணகத்திற்கு எடுத்துச்சென்றது என்பதை அறியும் நாம், பணிவு என்பதற்கு இலத்தீன் மொழியில் வரும் வார்த்தையான hரஅரள என்பது நிலத்தைக் குறிக்கிறது என்பதையும் தெரிந்துகொள்வோம், என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலத்தைப்போல் தாழ்ந்து இருக்கும் ஒன்று, வானகத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது என்பதை விளக்க, இயேசுவின் வார்த்தைகளான, ‘தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப்பெறுவர்’ (லூக் 14:11) என்பதைச் சுட்டிக்காட்டினார்.
நான் ஆண்டவரின் அடிமை
தன்னைப்பற்றிக் கூறும்போது, ‘நான் ஆண்டவரின் அடிமை’ (லூக் 1:38), என்ற பதத்தை மட்டுமே அன்னை மரியா பயன்படுத்துவதை நாம் காணும்போது, நம்மைப்பற்றியும் நாம் ஆழமாக சிந்தித்து, பணிவெனும் பண்போடு நாம் எவ்வாறு செயல்படுகிறோம் என்பதை அலசுவோம் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார் திருத்தந்தை.
இறைவனால் தான் நிரப்பப்படுவதற்கென, தாழ்நிலையைத் தேர்ந்துகொண்ட அன்னை மரியா, அருள் நிறைந்தவராக மாறினார் என்றகூறிய திருத்தந்தை, நான்கு சுவர்களுக்குள் ஓர் எளிமையான வாழ்வை நடத்திய ஒருவர், முழு உடலோடும் ஆன்மாவோடும் விண்ணகத்திற்கு எடுத்துச் செல்லப்படும் பெருமை பெற்றார் என்பதையும் குறிப்பிட்டார்.
பணிவு எனும் பண்பால் வானுலகிற்கு எடுத்துச்செல்லப்பட்ட அன்னை மரியாவின் இந்த பெருவிழா, நமக்கு நம்பிக்கை தருவதாக உள்ளது என்பதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்பெருவிழாவை ஒரு குழந்தைக்குரிய அன்புடன் கொண்டாடி, ஒருநாள் அன்னையுடன் வானுலகில் இணைந்திருப்போம் என்ற நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடர்வோம் எனக்கேட்டு, தன் மூவேளை செப உரையை நிறைவுக்குக் கொணர்ந்தார்.
அன்னை மரியாவைப்போல், திறந்ததொரு மனநிலையுடன் இறைவன் முன் நம்மை ஒப்படைப்பதுபோல் சிறந்த இறைவேண்டல் வேறு இல்லை, ‘இறைவா உமக்கு என்ன வேண்டும், எப்போது வேண்டும், அது எவ்விதம் வேண்டும்’ என நம் இதயத்தை இறைவன் முன் திறப்போம்.
Comment