No icon

பங்குத்தளங்களை பணியின் பள்ளிகளாக உருவாக்குங்கள் - திருத்தந்தை

பங்குத்தளங்களை பணியின் பள்ளிகளாக உருவாக்குங்கள் - திருத்தந்தை

இத்தாலியின் கிராமப் பகுதிகள் பற்றி அந்நாட்டு ஆயர்கள் நடத்திய ஒரு கூட்டத்திற்கு, செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆயர்கள், தங்கள் மேய்ப்புப்பணிகளை, பிறரன்பு, மற்றும், நம்பிக்கை ஆகியவற்றால் நிறைக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இக்காலத்தில் மேலோங்கி நிற்கும், இன்னல்கள், தன்னலவாதம், மற்றும், புறக்கணிப்பு ஆகியவற்றைக் கண்டு சோர்வுறாமல், கூட்டுப்பண்பு, மற்றும், உடன்பிறப்பு உணர்வைக் கண்டுணர்ந்து, ஒன்றிணைந்து சவால்களை எதிர்கொள்ளுமாறு, ஆயர்களை திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.

கடந்தகால நிலைகளுக்காக ஏக்கம்கொள்ளாமல், கடினவாழ்வு நிலவும் இடங்களில் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளைத் துணிவுடன் மேற்கொள்ளுமாறு கூறியத் திருத்தந்தை, பங்குத்தளங்களில் தாழ்ச்சியும், கனிவும் சுடர்விடும் வகையில், அவற்றை, கிறிஸ்தவ வாழ்வின் பயிற்சி மையங்களாகவும், மற்றவருக்குப் பணியாற்றும் பள்ளிகளாகவும் மாற்றுமாறும், இத்தாலிய ஆயர்களைக் கேட்டுக்கொண்டார்.

இச்செய்தியின் இறுதியில், ஆயர்கள் மேற்கொண்ட இம்முயற்சிக்கு தனது பாராட்டுக்களைத் தெரிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இக்கூட்டத்தில் ஆயர்கள் உருவாக்கும் திட்டங்கள், மக்கள், இயேசுவை அன்போடு சந்திப்பதை ஊக்கப்படுத்தும் என்ற தன் நம்பிக்கையையும் வெளிப்படுத்தியுள்ளார்.

இத்தாலியின் பெனவென்ட்டோ நகரில், ஏறத்தாழ இருபது ஆயர்கள், ஆகஸ்ட் 30, 31 ஆகிய தேதிகளில்   நடத்திய இரண்டு நாள் கூட்டத்தில், மக்கள்தொகை குறைவு, புறக்கணிப்பு, மற்றும், பொருளாதாரப் பிரச்சனை ஆகியவை நிலவும் பகுதிகளில், தங்களின் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுக்குப் புத்துயிர் அளிக்கும் வழிகள் பற்றி கலந்தாய்வுகளை மேற்கொண்டனர். தமிழக ஆயர்களும் இதே போன்று தமிழகத் திருஅவைக்கென இலட்சிய செயல்திட்டங்களை பொதுநிலையினரின் பங்கேற்போடு உருவாக்கி செயல்படுத்தினால் தமிழகத் திருஅவை வளம்பெறும்.

Comment