No icon

தென் சூடான் சகோதரிகள் கொலை - திருத்தந்தையின் கவலை

 

தென் சூடான் சகோதரிகள் கொலை - திருத்தந்தையின் கவலை

திருஇருதய அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகள் தென் சூடான் நாட்டில், ஆகஸ்ட் 16 ஆம் தேதி திங்களன்று வன்முறை குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.

     உகாண்டா நாட்டையும், தென் சூடான் நாட்டின் தலைநகர் ஜூபாவையும் இணைக்கும் துரித வழியில் சென்ற ஒரு பேருந்தை, துப்பாக்கி ஏந்திய குழு ஒன்று மறித்து சுட்டதில், மேரி அபுத் மற்றும் buÍdh ரோபோ என்ற இரு அருள்சகோதரிகள் உட்பட, ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.

பொருளற்ற முறையில் நடைபெற்றுள்ள இந்த வன்முறையை கண்டனம் செய்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு அருள்சகோதரிகளின் தியாகம், அந்நாட்டில் அமைதியையும், ஒப்புரவையும் உருவாக்கவேண்டுமென தான் இறைவேண்டல் புரிவதாகவும் இந்த தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.

இறைவனடி சேர்ந்த இவ்விரு சகோதரிகளின் துறவு சபைக்கும், அவ்விரு அருள்சகோதரிகளின் குடும்பத்தாருக்கும் தன் ஆழ்ந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.

டோரிட் மறைமாவட்டத்தின் லோவா என்ற பங்குத்தளத்தில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை  ஆலயத்தில் நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களை நிறைவு செய்து, ஒன்பது அருள் சகோதரிகளும், கத்தோலிக்க விசுவாசிகளும் ஜூபாவை நோக்கி பேருந்தில் பயணம் செய்த வேளையில் நடைபெற்ற இந்த தாக்குதலில், இரு அருள்சகோதரிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர் என்று திருஇருதய அருள்சகோதரிகள் சபையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.

உலகில் புதிதாக உருவாக்கப்பட்ட நாடு என்று அறியப்படும் தென் சூடான், 2011 ஆம் ஆண்டு ஒரு தனி நாடாக உருவானதிலிருந்து, இன்றுவரை அங்கு தொடர்ந்துவரும் மோதல்களில், கடந்த பத்தாண்டுகளில், 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஒரு கத்தோலிக்கச் செய்தி நிறுவனம் கூறுகிறது.

திருத்தந்தையுடன், " The Chosen " நடிகர் ஜோனதன் ரூமி

 

"The Chosen", அதாவது, "தேர்ந்தெடுக்கப்பட்டவர்" என்ற பெயரில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் ஒரு தொடரில், இயேசுவாக நடித்துவரும் ஜோனதன் ரூமி (Jonathan Roumie) என்ற நடிகரும், இத்தொடரின் இயக்குனர் டல்லஸ் ஜென்கின்ஸ் (Dallas Jenkins) அவர்களும், ஆகஸ்ட் 11 ஆம் தேதி புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருத்தந்தை புனித  ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தனர்.

ஆகஸ்ட் 11 ஆம் தேதி புதன் மறைக்கல்வியுரைக்குப்பின் நடைபெற்ற இச்சந்திப்பிற்குப் பின், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், குழந்தைப்பருவம் முதல் தான் கண்டுவந்த ஒரு கனவு நிறைவேறியுள்ளதாகக் கூறினார்.

     2019 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகிவரும் " The Chosen" " தொலைக்காட்சித் தொடரில் இயேசுவாக நடித்துவரும் கத்தோலிக்கரான ஜோனதன் அவர்கள், தான் திருத்தந்தையுடன் இஸ்பானிய மொழியில் பேசியதாகவும், தனக்காக செபிக்கும்படி அவரிடம் கேட்டுக்கொண்டபோது, அவரது கண்கள் ஒளிர்விட்டதை தன்னால் காணமுடிந்ததென்றும் கூறினார்.

இந்த தொலைக்காட்சித் தொடரின் இயக்குநரும், இவாஞ்சலிக்கல் சபையைச் சேர்ந்தவருமான டல்லஸ் ஜென்கின்ஸ் அவர்கள், திருத்தந்தை, தங்களைச் சந்தித்த வேளையில் மிக இயல்பாக, நகைச்சுவை உணர்வுடன் பேசியது, தன்னைக் கவர்ந்தது என்று கூறினார்.

இந்த தொலைக்காட்சித் தொடரில் ஈடுபட்டுள்ள நடிகர்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் உரோம் நகரில் உள்ள பல புனிதத்தலங்களை காணும் வாய்ப்பு பெற்றது பற்றி குறிப்பிட்ட நடிகர் ஜோனதன் அவர்கள், இயேசுவின் பாடுகளோடு தொடர்புடைய ‘புனித படிக்கட்டுகளில்’ முழந்தாள்படியிட்டு தான் ஏறியது, ஆன்மீக அளவில் மிகவும் சக்திவாய்ந்த ஓர் அனுபவமாக இருந்தது என்று கூறினார்.

புனித பாத்ரே பியோ அவர்கள் மீது தனக்குள்ள தனிப்பட்ட பக்தியைக் குறித்து பேசிய நடிகர் ஜோனதன் அவர்கள், கோவிட் பெருந்தொற்று துவங்கிய காலம் முதல், இப்புனிதரிடம் தான் சிறப்பாக வேண்டிவருவதாகவும், தற்போது, அவரது புனிதத் தலத்தில் அவரைக் கண்டது, மற்றொரு மறக்கமுடியாத அனுபவம் என்றும் கூறினார்.

Comment