No icon

தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் - திருத்தந்தை

தடுப்பூசி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் - திருத்தந்தை

     Ad Council k‰W«, Getvaccineanswers.org  என்ற நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த காணொளியின் துவக்கத்தில், இஸ்பானிய மொழியில் தன் கருத்துக்களைப் பதிவுசெய்துள்ள திருத்தந்தை, தடுப்பூசியைப் பெற்றுக்கொள்வது, நாம் ஆற்றக்கூடிய ஓர் அன்புச்செயல் என்று கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 18 ஆம் தேதி புதனன்று வெளியான இந்தக் காணொளியில், மனித சமுதாயத்தைக் காப்பதற்கு, இந்த தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க பலர் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கு நன்றிகூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த தடுப்பூசி, அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்தால் மட்டுமே, இந்த பெருந்தொற்றை முடிவுக்குக் கொணரமுடியும் என்ற எண்ணத்தையும் பதிவிட்டுள்ளார்.

நம்மீதும், நம் குடும்பத்தின் மீதும் அன்பு கொண்டிருப்பதன் அடையாளமாக நாம் இந்த தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளும்போது, அது சமுதாயத்தின்மீது நாம் கொண்டிருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்துகிறது என்று இச்செய்தியில் சுட்டிக்காட்டும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு மிகச் சிறிதாக இருந்தாலும், அது எப்போதும் பெரிதான ஒரு செயலே என்று கூறியுள்ளார்.

திருத்தந்தையைத் தொடர்ந்து, இந்தக் காணொளிச் செய்தியில், வட மற்றும் தென் அமெரிக்காவில் பணியாற்றும் ஆயர்களும், கர்தினால்களும் மக்கள் தடுப்பூசி பெறுவது ஒரு முக்கிய கடமை என்பதை வலியுறுத்தி, தங்கள் கருத்துக்களை, பதிவுசெய்துள்ளனர்.

     இந்தக் காணொளிச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆகஸ்ட் 18, இப்புதனன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில், "தடுப்பூசி திட்டம், பொதுவான நலனை குறிப்பாக, மிகவும் நலிந்தோரின் நலனை வளர்ப்பதற்கு ஓர் எளிய வழி" என்ற சொற்களை பதிவுசெய்துள்ளதோடு, இந்தக் காணொளிச் செய்தியைக் காண்பதற்கு உதவியாக, https://www.youtube.com/watch˜v=C-isNHmNxlQ என்ற வலைத்தள முகவரியையும் இணைத்துள்ளார்.

 

 

ஆப்கான் மற்றும் ஹெய்ட்டிக்காக செப அழைப்பு - திருத்தந்தை பிரான்சிஸ்

மோதல்களால் பல்வேறு துயர்களை அனுபவித்துவரும் ஆப்கான் நாடு, மற்றும் அண்மைய நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹெய்ட்டி நாடு ஆகியவை குறித்து, தன் ஆழ்ந்த அனுதாபங்களையும் கவலையையும் ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப்பின் திருத்தந்தை பிரான்சிஸ் வெளிப்படுத்தினார்.

ஆயுதங்கள் மீதான மோகம் களையப்பட்டு, உரையாடலின் வழியாக ஆப்கான் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் உதவ, அமைதியின் ஆண்டவரை விண்ணப்பிக்க, தன்னோடு சேர்ந்து செபிக்குமாறு அனைவரையும் அழைப்பதாக, வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகளை நோக்கி உரைத்த திருத்தந்தை, இதன் வழியாக மட்டுமே அந்நாட்டின் அனைத்து மக்களும் அமைதியில் வாழமுடியும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், அண்மை சில மணி நேரங்களில் ஹெய்ட்டி நாட்டில் இடம்பெற்ற நிலநடுக்கத்தால் பல உயிரிழப்புக்களும், காயங்களும், பொருட்சேதங்களும் இடம்பெற்றுள்ளதை சுட்டிக்காட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுடனும் தன் அருகாமையை வெளிப்படுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்நிலநடுக்கத்தால் உயிரிழந்தோருக்காக இறைவனை நோக்கி செபிக்கும் அதேவேளையில், பாதிக்கப்பட்டோருக்கு, ஊக்கத்தின் வார்த்தைகளை வெளிப்படுத்துவதாகவும், இவர்களை குறித்த அனைத்துலக சமுதாயத்தின் நல் அணுகுமுறையை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த பெருந்துயரின் விளைவுகளை அகற்ற, அனைத்து மக்களின் ஒருமைப்பாட்டுணர்வு உதவுவதாக எனவும் வேண்டினார்.

ஹெய்ட்டியில் ஆகஸ்டு 14 ஆம் தேதி சனிக்கிழமையன்று இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 304 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 1800 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்கிடையே சிக்கியுள்ளோரை மீட்கும் பணிகள் இன்னும் தொடர்ந்து வருகின்றன.

Comment