No icon

முற்பகல் செய்யின்..

முற்பகல் செய்யின்..

திரு. Gபூபால், மதுரை

‘முற்பகல் செய்யின் பிற்பகல் விழையும்’ என்பது நம்மிடையே இருக்கும் பழமொழி. மனிதன் தன்னைபடைத்த சர்வ வல்லவரான இறைவனை மறந்து, தன் மனதில் தோன்றியதையெல்லாம் வணங்க ஆரம்பித்தான். நோவாவின் காலத்தில் கடவுள் மனிதனின் தவறுகளை எண்ணி வருந்தினார். “மண்ணுலகில் மனிதரை உருவாக்கியதற்காக ஆண்டவர் மனம் வருந்தினார். அவரது உள்ளம் துயரமடைந்தது” (தொநூ 6:6). எனவே, அவர் வெள்ளப்பெருக்கினால் மனிதர் உட்பட அனைத்து உயிர்களையும் அழித்தார். ஆனாலும் இரக்கமுள்ள இறைவன் நோவா மூலம் மீண்டும் மனிதரையும், உயிர்களையும் பெருகச்செய்தார். ஆயினும் மனிதன் திருந்தவில்லை.

ஆண்டவர் இறைவாக்கினர் மூலம் மனித குலத்தைத் திருத்தமுயன்றார். மனிதன் இறைவாக்கினர்களைக் கொன்று போட்டான். எனவே, கடைசியாக இறைமகன் கன்னிமரியிடம் பிறக்கச்செய்தார். இயேசு நோயாளிகளை சுகமாக்கினார், இறந்தோரை உயிர்ப்பித்தார், முடவர்களைக் குணமாக்கினார், செவிடனை கேட்கச்செய்தார். பார்வையற்றோருக்கு பார்வை வழங்கினார், முடவர்களை நடக்கச் செய்தார், ஊமைகளை பேசச்செய்தார். எனவே மக்கள் கூட்டம் அவர் பின்னால் சென்றது. இதனைப் பொறுக்கமுடியாத ஆட்சியினர் இயேசுவை மெசியாவாக ஏற்க மறுத்து கொடுமைப்படுத்தினார்கள்.

“அவரைக் கண்ட பலர் திகைப்புற்றனர்; அவரது தோற்றம் பெரிதும் உருக்குலைந்ததால் மனித சாயலே அவருக்கு இல்லாதிருந்தது; மானிடரின் உருவமே அவருக்கு இல்லை” (எசா 52:14). "அவர் இகழப்பட்டார்; மனிதரால் புறக்கணிக்கப்பட்டார்; வேதனையுற்ற மனிதராய் இருந்தார்;" (எசா 53:3). “அவருடைய முகத்தில் துப்பி அவரைக் கையால் குத்தினார்கள்” (மத் 26: 67). “வீரர்கள் ஒரு முள்முடி பின்னி அவர்தலையின் மேல் வைத்து, செந்நிற ஆடை அணிவித்தார்கள்” (யோவா 19:2). 2000 ஆண்டுகளுக்கு முன் இறைமகன் இயேசுவைக் கொடுமைப்படுத்தியதால்தான் இன்று நாம் ஒருவர் முகத்தை ஒருவர் காணமுடியாமல் முகமூடி அணிய வேண்டிய அவலம் ஆகிவிட்டது.

இயேசுவை மரணத்திற்குத் தீர்ப்பிட்ட பிலாத்து, தன் கையை கழுவினான் அல்லவா. “இவனது இரத்தப் பழியில் எனக்குப் பங்கு இல்லை, நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்” (மத் 27:25) என்று கூறித் தன் கைகளைக் கழுவினான். எனவே இன்று உலகம் முழுவதும் கை கழுவவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

“தாகமாய் இருக்கிறேன்” என்று சொன்ன இயேசுவுக்கு புளித்த திராட்சை ரசத்தைக் கொடுத்ததனால் தான் இன்று கசப்பான கபசுர குடிநீர் குடிக்க வேண்டியதாயிற்று. உலகை படைத்தவரை அடக்கம் செய்யக் கூட சொந்தமாக ஒரு கல்லறை இல்லை. அடக்கம் செய்ய ஆட்கள் கூட இல்லை. “அரிமத்தியா யோசேப்பு மட்டுமே இறந்த இயேசுவை தனக்கென வைக்கப்பட்டிருந்த கல்லறையில் அடக்கம் செய்தார்" (மத் 27:60). "அப்பொழுது மகதலா மரியாவும், வேறொரு மரியாவும் அங்கே கல்லறைக்கு எதிரே காத்திருந்தார்கள்" (மத் 27:61).

இன்று கொரோனாவால் இறந்த நம் உறவினர்களை அடக்கம் செய்யக்கூட உடன் செல்ல முடியாதநிலை. கல்லறைக்கு இடம்கூட கிடைப்பதில்லை. 2000 ஆண்டுகளுக்கு முன் இறைமகன் இயேசுவுக்குச் செய்யப்பட்ட கொடுமைகளை முன்னிட்டாவது மனித குலம் திருந்தும் என காத்திருந்த தந்தை இறைவனை நாம் ஏமாற்றிவிட்டோம். தந்தையின் கோபம் கொரோனாவாக வெளிப்பட்டுள்ளது. எனவே, மன்னிப்புக் கேட்டு மன்றாடுவோம். கொடிய கொரோனாவிலிருந்து விடுபடுவோம்.

Comment