No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பசியும் வறுமையும் மனித உரிமைகளை மறுப்பதாகும்

அமெரிக்க நாடுகள் கூட்டமைப்பைச் சேர்ந்த நீதிபதிகள், அர்ஜென்டீனா நாட்டுத் தலைநகர் புவனஸ் ஐய்ரெஸ் நகரில், திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளை மையப்படுத்தி நடத்திய மெய்நிகர் வலைத்தளக் கூட்டத்திற்கு காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்நாடுகளில் சனநாயகத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திக் கூறியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அதிகாரப்பூர்வ வெளியீடுகளால் ஈர்க்கப்பட்டு, 2019 ஆம் ஆண்டில் வத்திக்கானில் உருவாக்கப்பட்ட அமெரிக்க நீதிபதிகள் கூட்டமைப்பு, திருப்பீட சமூக அறிவியல் கழகத்தோடு நெருங்கிய தொடர்புகொண்டுள்ளது. இக்கூட்டமைப்பு, செப்டம்பர் 30 -  அக்டோபர் 01 வெள்ளி ஆகிய இரு நாள்களில் இக்கூட்டத்தை நடத்தியது.

அர்ஜென்டீனாவில் சமுதாய உரிமைகள் பற்றி சிறப்பாக ஆய்வுசெய்த இந்த நீதிபதிகள் கூட்டத்திற்கு அனுப்பிய காணொளிச் செய்தியில், உலகில் பரவலாக அநீதி மேலோங்கி நிலவுவது, வறுமை உச்சகட்டத்தில் உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது என்றும், இது மிக முக்கிய அடிப்படை உரிமைகளை நடைமுறைப்படுத்தும் முயற்சிகளில் தோல்வி காண்பதன் அடையாளமாகவும் உள்ளது என்றும், திருத்தந்தை கூறியுள்ளார்.. 

சமுதாய அளவில் பெருந்தொற்று உருவாக்கியுள்ள நெருக்கடிகள் மிகவும் கடுமையாக உள்ளவேளை, நாட்டு மக்களின் நலன், மற்றும், மகிழ்ச்சிக்குத் தேவையான வழிகளைக் காணவேண்டும் எனவும் நீதிபதிகளைக் கேட்டுக்கொண்ட திருத்தந்தை, உலகின் பெருமளவிலான செல்வமும், வாய்ப்புக்களும், வெகு சிலரின் நன்மைக்காகவே உள்ளன என்பதை நினைவுபடுத்தியுள்ளார்.

இறுதியில், தனது அர்ஜென்டீனா நாட்டு நீதிபதிகளுக்கு சிறப்பான விண்ணப்பம் ஒன்றை முன்வைத்து தன் காணொளிச் செய்தியை நிறைவுசெய்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எல்லாவற்றிற்கும் மேலாக நம் மக்களின் நலன் மற்றும் நம் நாட்டிற்கு நன்மையைக் கொணரும் வழிகளைத் தேடுங்கள், அன்னை மரியா உங்கள் முயற்சிகளுக்கு உதவுவாராக என்று தன் ஆசீரை அளித்துள்ளார்.

Comment