திருத்தந்தை பிரான்சிஸ்
16வது ஆயர் மாமன்றத்தின் பொதுக்குழு கூட்டம் - அக்டோபர் 2023
திருத்தந்தை பிரான்சிஸ் ஏப்ரல் 24 ஆம் தேதி 16 ஆவது ஆயர் மாமன்றத்தின் பொதுக்குழு கூட்டத்தைப் பற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பை வெளியிட்டு, இம்மாமன்றம் “கூட்டு ஒருங்கியக்கத் திருஅவை: ஒன்றிப்பு, பங்கேற்பு, மறைப்பணி” என்ற கருப்பொருளின் கீழ் அக்டோபர் 2023 அன்று உரோமையில் நடைபெற உள்ளது. இதன் முதல் நிலையாக, இந்த அக்டோபர் 9 - 10 ஆகிய நாட்களில் திருத்தந்தை பிரான்சிஸ் வத்திக்கானில் இதனைத் தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் அக்டோபர் 17 அல்லது இப்பெருந்தொற்று காலச்சூழலுக்கேற்ப அதனையொட்டிய ஏதேனும் ஒருநாளில் தொடங்கப்பட உள்ளது. அக்டோபர் 2021 முதல் ஏப்ரல் 2022 வரையிலான இம்முதல் நிலையில் மறைமாவட்ட இறைமக்கள் அனைவரின் குரலுக்கு செவிமடுக்கப்படும். அவை தொகுக்கப்பட்டு இந்திய ஆயர் பேரவைக்கு அனுப்பப்படும். இரண்டாம் நிலையில் இறைமக்களிடமிருந்து பெறப்பட்டவை அந்தந்த நாட்டு ஆயர் பேரவையில் கலந்துரையாடப்பட்டு, உரோமைக்கு அனுப்பப்படும். இவ்வாறு உலகின் அனைத்து ஆயர் பேரவைகளிடமிருந்து பெறப்பட்ட ஆயர் மாமன்றத்திற்கான முன்வரைவு ஆவணம் தயாரிக்கப்பட்டு செப்டம்பர் 2022 முதல் மார்ச் 2023 வரையிலான மூன்றாம் நிலையில் கண்டம் சார் ஆயர் பேரவையில் கலந்துரையாடப்படும். இவற்றின் முடிவுகள் உரோமையின் பொதுச் செயலகத்திற்குத் தரப்பட்டு ஆயர் மாமன்றத்திற்கான இறுதி வடிவம் பெறும். அக்டோபர் 2023 இல் ஆயர் மாமன்றம் உரோமையில் நடைபெறும். ஆயர் மாமன்றத்தை நோக்கிய நம் திருத்தந்தையின் கருத்துக்களுக்காகவும் இந்திய - தமிழக ஆயர்கள் பொறுப்புணர்வுடன் இதற்காக உழைக்கவும் நாம் செபிப்போம்.
Comment