No icon

மூவேளை செபவுரை

விசுவாசத்திற்காக துயருறுவோர்க்கு, புதிய அருளாளர்கள் தரும் பலம்

கடந்த வாரத்தில், நார்வே, ஆப்கானிஸ்தான், பிரிட்டன் ஆகிய இடங்களில் வன்முறைகளுக்கு பலியான மக்களை தான் நினைவுகூர்வதாக ஞாயிற்றுக்கிழமை நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின் எடுத்துரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடந்த வாரத்தில் இம்மூன்று நாடுகளில் இடம்பெற்ற வன்முறைகளால் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுடன் தன் அருகாமையைத் தெரிவிப்பதாகவும் எடுத்துரைத்தார்.

வன்முறை மேலும் வன்முறைக்கே இட்டுச்செல்லும் என்பதால், வன்முறை எனும் தோல்வியின் பாதையை, இதில் ஈடுபட்டுள்ளோர் கைவிடவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், 1930ம் ஆண்டுகளில் திருமறைக்காக மறைச்சாட்சிகளாகக் கொல்லப்பட்ட அருள்பணி Juan Elias Medina மற்றும் 126 உடன் உழைப்பாளர்கள், இஸ்பெயின் நாட்டின் Cordoba எனுமிடத்தில் அக்டோபர் 16ம் தேதி சனிக்கிழமையன்று அருளாளர்களாக அறிவிக்கப்பட்டதை நினைவுகூர்ந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உலகின் பல்வேறு பகுதிகளில் தங்கள் விசுவாசத்திற்காக துயர்களை அனுபவிக்கும் கிறிஸ்தவர்களுக்கு, இவர்களின் விசுவாச வாழ்வு, பலத்தை வழங்குவதாக என தெரிவித்தார்.

1930ம் ஆண்டுகளில் இஸ்பெயின் நாட்டில் தங்கள் விசுவாசத்திற்காக கொல்லப்பட்டு, தற்போது அருளாளர்களாக அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த 127 பேரில், அருள்பணியாளர்கள், துறவறத்தார், அருள்பணித்துவத்திற்கு தயாரிப்பிலிருந்தோர், பொதுநிலையினர் அடங்குவர்.

Comment