No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

.உணவு உலக நாளுக்கு திருத்தந்தையின் டுவிட்டர்

அக்டோபர் 16 சனிக்கிழமையன்று கடைப்பிடிக்கப்பட்ட உணவு உலக நாள், மற்றும் அக்டோபர் 17 ஞாயிறன்று உலக அளவில் மறைமாவட்டங்கள் மற்றும், பங்குத்தளங்களில் துவங்கியிருக்கும் 16வது உலக ஆயர்கள் மாமன்றத் தயாரிப்புக்களின் முதல் கட்டப்பணிகள் ஆகியவற்றை மையப்படுத்தி, தன் வலைப்பக்கத்தில் இரு டுவிட்டர் செய்திகளைப் பதிவுசெய்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

“வெறும் பொருளாதார இலாபத்திலும், உணவை மற்றுமொரு விற்பனைச் சரக்காக மாற்றுவதிலும் மட்டுமே பேராசைகொண்டு செயல்படும் சந்தைகளின் நியாயமற்ற கருத்தியல்கள் களையப்படுவதும், ஒருமைப்பாட்டுணர்வை வலுப்படுத்துவதும், பசியை அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்குத் தேவைப்படுகின்றன” என்ற சொற்கள், திருத்தந்தையின் முதல் டுவிட்டர் செய்தியில், உலக உணவு நாள் (#WorldFoodDay) என்ற ஹாஷ்டாக்குடன் இடம்பெற்றிருந்தன.

உணவு உலக நாள், உலக வறுமை ஒழிப்பு நாள்

மேலும் உணவு உலக நாள் மற்றும் அக்டோபர் 17 ஞாயிறன்று கடைப்பிடிக்கப்படும் உலக வறுமை ஒழிப்பு நாள் ஆகிய இரண்டையும் மையப்படுத்தி செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், கடந்த 20 ஆண்டுகளில் முதல் முறையாக வறுமைக்கோட்டிற்குக்கீழுள்ள மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்று கூறியுள்ளார்.

பொருளாதாரத்தில் பெருந்தொற்று உருவாக்கியுள்ள கடும் நெருக்கடியால், கடந்த ஆண்டில், கூடுதலாக 12 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழ்ந்தனர் எனவும் கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.

 

திருத்தந்தையின் மாமன்றம் பற்றிய டுவிட்டர்

மேலும் சனிக்கிழமையன்று திருத்தந்தை வெளியிட்டுள்ள இரண்டாவது டுவிட்டர் செய்தியில், 'ஒவ்வொரு தலத்திருஅவை, மக்கள், மற்றும், நாட்டின் நம்பிக்கைகள், அக்கறைகள், மற்றும் கேள்விகளுக்கு நாம் செவிமடுக்க வேண்டும் என தூய ஆவியார் நம்மிடம் கேட்கிறார். உலகிற்குச் செவிமடுக்க, அது முன்வைக்கும் சவால்கள் மற்றும் மாற்றங்களுக்கு செவிமடுக்கக் கேட்கிறார். ஒலிகளைக் கேட்கமுடியாத இடங்களாக நம் இதயங்களை மாற்றாமல், ஒருவர் ஒருவருக்கு செவிமடுப்போம்' என விண்ணப்பித்துள்ளார்.

திருத்தந்தையின் சந்திப்புக்கள்

மேலும், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, வத்திக்கான் நகருக்கான திருத்தந்தையின் நிர்வாகப் பிரதிநிதி, கர்தினால் Mauro Gambetti  கர்தினால்கள் அவையின் மறைப்பணி நடவடிக்கைகள் அமைப்பின் தலைவர், கர்தினால் Santos Abril y Castellர, அதன் பொதுச்செயலர் பேராயர் Jose Rodriguez Carballo ஆகியோரையும், திருப்பீடத்தில், தனித்தனியே சந்தித்து உரையாடினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Comment