No icon

குடந்தை ஞானி

மறைபரப்புப்பணி ஞாயிறையொட்டி செய்தியாளர்கள் கூட்டம்

அக்டோபர் 24 ஞாயிறன்று, கத்தோலிக்கத் திருஅவையில் சிறப்பிக்கப்படும் 95வது உலக மறைபரப்புப்பணி ஞாயிறையொட்டி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கியுள்ள செய்தியும், திருஅவையின் மறைபரப்புபணி சார்ந்த புள்ளிவிவரங்களும், அக்டோபர் 21வியாழனன்று செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளியிடப்பட்டன.

"நாங்கள் கண்டதையும் கேட்டதையும் எடுத்துரைக்காமலிருக்க எங்களால் முடியாது" (திருத்தூதர் பணிகள் 4:20) என்ற மையக்கருத்துடன் திருத்தந்தை வழங்கியுள்ள செய்தியும், உலகெங்கும் மறைபரப்புப்பணியாற்றுவோரைக் குறித்த புள்ளிவிவரங்களும், இணையவழி நேரடி ஒளிபரப்பின் வழியே வழங்கப்பட்டன.

இந்த இணையவழி நேரடி ஒளிபரப்பு நிகழ்வில், நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே, இப்பேராயத்தின் செயலரும், பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளின் தலைவருமான பேராயர் ஜியாம்பியெத்ரோ தால் தோசா (Giampietro Dal Toso), மரியாவின் பிரான்சிஸ்கன் ஊழியர் துறவு சபையின் உலகத்தலைவரான அருள்சகோதரி, அலெஸ்ஸாந்திரா தல்போஸ்ஸோ (Alessandra Dalpozzo), மற்றும் பாப்பிறை மறைபரப்புப்பணி சபைகளின் நான்கு செயலர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.

1922ம் ஆண்டு திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 'விசுவாசப் பரப்புதல் சபை' என்ற பெயரில் ஓர் அமைப்பை உருவாக்கி, அதன் வழியே மறைபரப்புப்பணிகளில் ஈடுபட்டிருக்கும் பணியாளர்களுக்குத் தேவையான நிதியை, இச்சபையினர் திரட்டுவதற்கு இசைவளித்தார்.

இச்சபையின் விண்ணப்பத்தை ஏற்று, திருத்தந்தை 11ம் பயஸ் அவர்கள், 1926ம் ஆண்டு, ஏப்ரல் 14ம் தேதி, மறைபரப்புப்பணிக்கென மக்கள் இறைவேண்டல் புரிவதற்காக ஒரு ஞாயிறை, ‘மறைபரப்புப்பணி ஞாயிறு’ என்று உருவாக்கியதையடுத்து, இவ்வாண்டு 95வது மறைபரப்புப்பணி ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது.

மறைபரப்புப்பணியில் ஈடுபட்டிருப்போருக்கு நிதியுதவி திரட்டவும், இறைவேண்டல்கள் புரியவும், கத்தோலிக்கத் திருஅவையில், ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் மாதத்தின் இறுதி ஞாயிறுக்கு முந்தைய ஞாயிறு மறைபரப்புப்பணி ஞாயிறு சிறப்பிக்கப்படுகிறது.

Comment