திருத்தந்தை பிரான்சிஸ்
மறைக்கல்வியுரை: கிறிஸ்தவ விடுதலை, எல்லா மக்களையும் வரவேற்கிறது
- Author Fr. Gnani Raj Lazar --
- Friday, 22 Oct, 2021
போர்த்துக்கல் நாட்டு பாத்திமாவில், லூசியா, பிரான்சிஸ், ஜசிந்தா ஆகிய மூன்று சிறாருக்கும், 1917ம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி முதல், அக்டோபர் மாதம் 13ம் தேதி வரை, ஆறு மாதங்களாக ஒவ்வொரு மாதமும் அந்தந்த மாதத்தின் 13ம் தேதியன்று அன்னை மரியா காட்சியளித்து வந்தார். இந்தக் காட்சிகளை மக்கள் அனைவரும் நம்பும்வண்ணம், 1917ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, ஏறத்தாழ ஐம்பதாயிரம் பேர் காண, அன்னை மரியா, சூரியனின் அற்புதம் என்று அழைக்கப்படும், பெரியதொரு புதுமையை நிகழ்த்தினார்.
சூரியனின் புதுமை
1917ம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி, வானில் வியத்தகு அதிசயங்கள் தோன்றின. வானில் இருந்து பல வண்ணங்கள் தோன்றி மக்கள் மேல் ஒளிர்ந்தன. பெரிய மழைப் பெய்த வேளையிலும் அன்னை மரியா காட்சி அளித்த புதரும் 3 சிறார்கள் இருந்த இடமும் மட்டும் உலர்ந்தே காணப்பட்டன. மக்கள் பலரும் அன்னை தோன்றிய ஒளிரும் மேகத்தைக் கண்டனர். அப்போது அவர் சிறாரிடம், "மக்கள் செபிக்க வேண்டும்; பாவத்தினால் கடவுளின் உள்ளத்தை புண்படுத்தக்கூடாது" என்று மிகவும் வலியுறுத்தி கூறினார். மக்களின் மனமாற்றத்திற்காக செபமாலை செபிக்கப்பட வேண்டுமென்றும், இறுதியில் தனது மாசற்ற இதயம் வெற்றி பெறும் என்றும் மரியன்னை மொழிந்தார். அந்நேரத்தில், சூரியன் மக்களின் கண்களுக்கு குளிர்ந்த நிலவு போன்று தோன்றியது. அது பம்பரம்போல சுழன்றவாறு, சிறிது நேரம் குடிகாரரைப் போல அங்கும் இங்கும் தள்ளாடியது. இவற்றை அங்கிருந்த அனைவரும் பார்த்தனர்.
அக்டோபர் 13 புதன், இப்புதுமை நிகழ்ந்ததன் 104வது ஆண்டு நிறைவு நாளாகும். இந்நாளின் உள்ளூர் நேரம் காலை 9.15 மணியளவில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கத்தில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசீரைப் பெற்றனர். புனித பவுல் கலாத்தியருக்கு எழுதியுள்ள திருமடலில், அவர் கூறியுள்ள சிந்தனைகளை மையப்படுத்தி, இதுவரை பத்து புதன் மறைக்கல்வியுரைகளை வழங்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இப்புதனன்று 11வது தொடராக, விடுதலை வாழ்வு பற்றிய பவுலடிகளாரின் எண்ணங்களை எடுத்துரைத்தார்.
கிறிஸ்து அடிமை நிலையிலிருந்து நம்மை விடுவித்து நமக்கு உரிமை வாழ்வை அளித்துள்ளார்; அதில் நிலைத்திருங்கள். மீண்டும் அடிமைத்தளை என்னும் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.... அன்பர்களே, நீங்கள் உரிமை வாழ்வுக்கு அழைக்கப்பட்டிருக்கிறீர்கள் (கலா.5,1.13)
இந்நிகழ்வில், முதலில் புனித பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் 5ம் பிரிவு, 1,13 ஆகிய இரு திருச்சொற்கள் பல்வேறு மொழிகளில் வாசிக்கப்பட்டன. அதற்குப்பின்னர் திருத்தந்தையும் தன் மறைக்கல்வியுரையை இத்தாலி மொழியில் தொடங்கினார்.
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, புனித பவுலுக்கு விடுதலை வாழ்வு என்றால் என்ன என்பது பற்றிச் சிந்தித்தோம். உண்மையில் இயேசு கிறிஸ்துவின் மரணம், மற்றும், உயிர்ப்போடு, பாவம் மற்றும் மரணத்தின் அடிமைத்தளையிலிருந்து நாமும் விடுதலை பெற்றுள்ளோம். கிறிஸ்துவில் நாம் பெற்றுள்ள விடுதலையின் புதிய வாழ்வு, நம் தகுதியையும்பாராது கடவுள் வழங்கும் அருளின் கொடையிலிருந்து வருகிறது. இந்தக் கொடையை திருமுழுக்கு அருளடையாளத்தின் வழியாகப் பெறுகிறோம். இந்த அருளடையாளம், ஆண்டவரின் மீட்பளிக்கும் பாடுகள், மரணம் மற்றும், உயிர்ப்பில் நம்மைப் பங்குதாரர் ஆக்குகின்றது. கிறிஸ்தவ வாழ்வின் புதிய மற்றும், உன்னதச் சட்டமாகிய அன்பால், நாம் விடுதலை பெற்றவர்களாக உள்ளோம். நம் விடுதலை வாழ்வு பற்றிய இந்த நற்செய்தி, அனைத்து மனிதர் மற்றும், கலாச்சாரங்களுக்கும் அறிவிக்கப்படும் உலகளாவியத் தன்மையைக் கொண்டது. உண்மையில், நற்செய்தி, எல்லா இடங்களுக்கும், காலங்களுக்கும் உரியதாகும். அந்நற்செய்தி அவற்றுக்கு ஏற்றால்போல் பண்பாட்டுமயமாக்கப்படல்வேண்டும். திருஅவையின் கத்தோலிக்கப் பண்பு, அதாவது அதன் உலகளாவியதன்மை, ஒரேவிதமான பழக்கவழக்கங்களையோ அல்லது, ஒரு கலாச்சாரத்தின்படியோ அமைவது இல்லை. மாறாக, ஒவ்வோர் இடத்தின் மக்கள் மற்றும், கலாச்சாரத்தில் நன்மையானது மற்றும், உண்மையானதை மதிப்பதில், அதன் உலகளாவிய பண்பு காணப்படுகின்றது. நற்செய்தி அறிவிப்புப்பணி வரலாற்றில், ஒரே கலாச்சாரத்தைத் திணிப்பதைத் தேடும் முயற்சியால் எத்தனையோ தவறுகள் இடம்பெற்றுள்ளன. சிலநேரங்களில் இம்முயற்சியில் வன்முறையும்கூட இடம்பெற்றுள்ளன. போர்களை நினைத்துப் பார்ப்போம். இவ்வாறு திருஅவை, பல உள்ளூர் கலாச்சார மரபுகளின் வளமையைப் புறக்கணித்துள்ளது. இது கிறிஸ்தவ சுதந்திரத்திற்கு முரணானது. எடுத்துக்காட்டாக, சீனாவில் நற்செய்தி அறிவிப்புப்பணியாற்றிய அருள்பணி ரிச்சி, இந்தியாவில் இப்பணியை ஆற்றிய தெ நொபிலி ஆகியோர் நினைவுக்கு வருகின்றனர். இவர்கள் பணியாற்றிய முறை கிறிஸ்தவம் அல்ல என சிலர் சொல்கின்றனர். ஆம். இது கிறிஸ்தவம்தான். இது மக்களின் கலாச்சாரத்தில் ஆற்றப்பட்ட பணியாகும். இன்றையக் காலக்கட்டத்தில் அதிவேகமாக வளர்ந்துவரும் தொழில்நுட்பம் மற்றும், ஊடக கலாச்சாரம் உட்பட, சமகால கலாச்சாரத்தில் நற்செய்தி அறிவிக்கப்படும் வழிமுறைகளை, திருஅவை தேடிவரும்வேளை, உலகளாவிய மீட்பராகிய கிறிஸ்துவால் நமக்குக் கொணரப்பட்ட நற்செய்தியை அனைத்து மக்களுக்கும் அறிவிப்பதில், படைப்பாற்றல்திறனோடு அத்திருஅவைக்கு உதவுவோம்
இவ்வாறு இப்புதன் மறைக்கல்வியுரையில் கேட்டுகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அக்டோபர் மாதத்தில், செபமாலையின் அரசியாகிய அன்னை மரியாவின் பரிந்துரை வழியாக, திருமுழுக்கில் நாம் பெற்ற கிறிஸ்தவ விடுதலை வாழ்வில் வளர்வோமாக என்று கூறினார். மேலும், இவ்வாரத்தில் திருஅவை விழா எடுக்கும் புனிதர்கள் திருத்தந்தை 23ம் யோவான், 2ம் யோவான் பவுல், அவிலா தெரேசா, சுவீடன் நாட்டு எட்விஜ் ஆகியோரை நினைவுகூர்ந்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.
Comment