No icon

குடந்தை ஞானி

வத்திக்கானில் “அனைவரும் உடன்பிறந்தோர்”(Fratelli tutti) அறக்கட்டளை

வருங்கால உலகில், நீடித்த நிலையான வளர்ச்சியையும், மனிதம்நிறைந்த புதியதொரு சமுதாயத்தையும் ஊக்குவித்து ஆதரவளிக்கவும், பயிற்சிப் பாசறைகளை அமைத்துக்கொடுக்கவும் என்று, வத்திக்கானில் “Fratelli tutti” அதாவது, “அனைவரும் உடன்பிறந்தோர்”  என்ற புதியதோர் அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது.

வத்திக்கானில் உருவாக்கப்பட்டிருக்கும் “Fratelli tutti” என்ற அறக்கட்டளை குறித்து அக்டோபர் 21 வியாழனன்று விளக்கிய, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவிலின் தலைமைக்குருவான கர்தினால் Mauro Gambetti அவர்கள், சமுதாய நீதி, தோழமை, பொதுநலனைக் கட்டியெழுப்புதல் ஆகியவை, இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம் என்று கூறினார்.

திருஅவையில் அனைவரும் ஒன்றிணைந்து பயணம் மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் பாதையில், ஒருங்கிணைந்த மனித சமுதாயம் உருவாக்கப்படுவதற்கு, இந்த அறக்கட்டளை உதவும் என்றுரைத்த கர்தினால் Gambetti அவர்கள், நம் சமுதாய மற்றும், தனிப்பட்ட உறவுகளின் தரத்தை எடுத்துரைக்கும் அரசியலும், பொருளாதாரமும், ஒருங்கிணைந்த வளர்ச்சியின் அடிப்படையில் அமைக்கப்படவேண்டும் என்று கூறினார்.

நாம் ஒருவர் ஒருவரை தனிப்பட்டமுறையில் அறியாதிருக்கும்நிலையிலும்கூட, ஒவ்வொருவரையும், என் சகோதரர், என் சகோதரி என்று அழைப்பதற்கு வழியமைக்கும் “மனித அகராதி" எழுதப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றும், கர்தினால் Gambetti அவர்கள் கூறினார்.

சுதந்திரம், சமத்துவம், உடன்பிறந்த உணர்வு ஆகிய உலகளாவிய விழுமியங்களை ஊக்குவிப்பதற்கு, கத்தோலிக்கத் திருஅவையின் தாய் பெருங்கோவிலான, புனித பேதுரு பெருங்கோவில் பகுதியில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெறும் என்றும், கர்தினால் Gambetti அவர்கள் அறிவித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு அக்டோபர் 3ம் தேதி கையெழுத்திட்ட, அவரது மூன்றாவது திருமடலான “Fratelli tutti” என்ற பெயரில், அக்டோபர் 21 வியாழனன்று இந்த அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் இத்தாலிய நலவாழ்வு அமைச்சரும் கலந்துகொண்டார்.

 

 

 

Comment