திருத்தந்தை பிரான்சிஸ்
திருத்தந்தை: சமத்துவ சமுதாயத்தைக் கட்டியெழுப்ப பணியாற்றுங்கள்
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Tuesday, 26 Oct, 2021
சமுதாயத்தில் நீதி, மற்றும் சமத்துவத்தைக் கூடுதலாக வளர்ப்பதும், மனிதரின் சுதந்திரம் மற்றும், மாண்பைப் பாதுகாப்பதுமே, கத்தோலிக்கத் திருஅவையின் சமுதாயப் போதனைகளை நடைமுறைப்படுத்தும் பணிக்கு இன்றியமையாதவை என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சனிக்கிழமையன்று கூறினார்.
Centesimus Annus என்ற பாப்பிறை அறக்கட்டளை துவக்கப்பட்டதன் 30ம் ஆண்டைமுன்னிட்டு, அதன் ஏறத்தாழ 200 பிரதிநிதிகள், "ஒன்றிணைப்பு, கூட்டுறவு, மற்றும் பொறுப்பு" ஆகிய மூன்று விழுமியங்களை மையக் கருத்துக்களாக வைத்து, வத்திக்கானில் தங்களது 2021ம் ஆண்டு பன்னாட்டு கருத்தரங்கை நிறைவுசெய்து, அக்டோபர் 23 சனிக்கிழமையன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, திருப்பீடத்தில் சந்தித்தனர்.
அநீதிகள், சமத்துவமின்மைகள், புறக்கணிப்புகள் ஆகியவற்றுக்கு எதிராகப் பணியாற்ற உதவுகின்ற விழுமியங்கள் குறித்து சிந்தித்த இந்த பிரதிநிதிகளோடு தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை, இன்றைய உலகில் நாம் காண்கின்ற அநீதிகள் மற்றும் சுரண்டல்களுக்கு எதிராகக் கண்டனம் தெரிவிப்பதோடு நின்றுவிடாமல், பொதுநலனை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபடவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
வளர்ச்சியின் புதிய வடிவங்கள்
திருஅவையின் சமுதாயப் போதனைகளின் ஒளியில், பொருளாதாரம் மற்றும் சமுதாய வளர்ச்சியின் புதிய வடிவங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு Centesimus Annus அறக்கட்டளை தன்னை அர்ப்பணித்திருப்பது, முக்கியமானது மற்றும், மிகவும் தேவைப்படுவதுமாகும் என்று திருத்தந்தை உரைத்தார்.
நிதி ஆதிக்கத்தால் மாசடைந்துள்ள மண்ணில், மனிதம் மற்றும் மக்களை மையப்படுத்துகின்ற, சமத்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு பொருளாதாரத்தில் பலனளிக்கவல்ல சிறிய பல விதைகளைத் தூவவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்று கூறிய திருத்தந்தை, ஒருமைப்பாடு, ஒத்துழைப்பு, பொறுப்புணர்வு ஆகிய மூன்றும், திருஅவையின் சமுதாயப் போதனைகளின் மூன்று தூண்கள் என்று கூறினார்.
திருஅவையின் சமுதாயப் போதனைகள், இறைவார்த்தையில் வேரூன்றப்பட்டுள்ளன எனவும், இவை, மனிதரான கடவுளின் மீதுள்ள நம் நம்பிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்கும் வழிகளைத் தேடுகின்றன எனவும் கூறியத் திருத்தந்தை, இதனாலேயே இவை, நடைமுறைப்படுத்தப்பட்டு வளர்க்கப்படவேண்டும் என்று கூறினார்.
திருஅவையின் சமுதாயப் போதனைகளை நடைமுறைப்படுத்தும் பணியில் நீங்கள் தனியாக இல்லை, கடவுள் உங்களோடு இருக்கிறார் என்றுரைத்து, அவர்கள் தொடர்ந்து தங்களது பணிகளை ஆற்ற ஊக்கப்படுத்தினார், கிறிஸ்தவர்களாகிய நாம் பொது நலனுக்காக உழைக்க அழைக்கப்பட்டுள்ளோம் என்றும், நீதி, சமத்துவம் ஆகியவை நிறைந்த ஓர் உலகை அமைக்கும் கனவை நனவாக்குவது இயலாததுபோல் தோன்றினாலும், அது மூவொரு கடவுளின் கனவு என்பதால், அது நனவாகும் என்பதில் நம்பிக்கை வைப்போம் எனவும், Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருத்தந்தை திருத்தந்தை பிரான்சிஸ் ஊக்கப்படுத்தினார்.
Centesimus Annus பாப்பிறை அறக்கட்டளை
திருஅவையின் சமுதாயக் கோட்பாடுகளை உள்ளடக்கி, திருத்தந்தை 13ம் லியோ அவர்களால் 1891ம் ஆண்டு வெளியிடப்பட்ட Rerum novarum என்ற திருமடல் வெளியானதன் 100வது ஆண்டில், 'நூறாவது ஆண்டு' என்று பொருள்படும் "Centesimus Annus" என்ற திருமடலை, திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், 1991ம் ஆண்டு வெளியிட்டார். "Centesimus Annus" வெளியானதன் 30ம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்க, வத்திக்கானில் இக்கருத்தரங்கு நடைபெற்றது.
Comment