No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

Montessori-யின் வாழ்வு, ஒருமைப்பாடு, உரையாடலைத் தூண்டுவதாக

சிறுபிள்ளைகளைப் பயிற்றுவிப்பதற்கு புதியதொரு கல்வி முறையை உருவாக்கிய Maria Montessori அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அக்டோபர் 23 சனிக்கிழமையன்று உரோம் நகரில் துவங்கியுள்ள இணையவழி பன்னாட்டு கருத்தரங்கிற்கு,  நல்வாழ்த்து செய்தி ஒன்றை  திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.

சிறுபிள்ளைகளுக்கு கல்விமுறை ஒன்றை அறிமுகப்படுத்தி, ஊக்கப்படுத்தியவரும்,  இருபதாம் நூற்றாண்டில் கலாச்சாரத் துறையில் மிகவும் புகழ்பெற்றவருமான கல்வியாளர் Maria Montessori அவர்களை நினைவுகூர்வதற்கு, திருத்தந்தை தன் பாராட்டுக்களையும் வெளியிட்டுள்ளார். 

Maria Montessori அவர்கள், கல்வியிலும், முழு சமுதாய அமைப்பிலும் ஆழமான நல்தாக்கத்தை விட்டுச்சென்றுள்ளவர் எனவும், இவர், உடன்பிறந்த உணர்வு மற்றும் அமைதி ஆகியவை நிரம்பப்பெற்ற ஓர் உலகை அமைப்பதற்கு தன்னை அர்ப்பணித்திருந்தவர் எனவும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Maria Montessori அவர்கள் பிறந்ததன் 150ம் ஆண்டு நினைவு, புதிய தலைமுறைகளுக்கு ஆதரவாக மிகத்தாராள மனதோடு தங்களை அர்ப்பணிப்பதற்கு, ஒருமைப்பாடு, மற்றும், உரையாடலுக்குத் திறந்தமனம்கொண்ட குடிமக்களால் அமைந்த ஓர் உலகு உருவாக்கப்பட உதவும் என்ற தன் நம்பிக்கையையும் திருத்தந்தை வெளியிட்டுள்ளார்.

உரோம் நகரில், அக்டோபர் 23 சனி, 24 ஞாயிறு ஆகிய இரு நாள்களில் இணையவழி நடைபெறும் பன்னாட்டு கருத்தரங்கை ஏற்பாடு செய்துள்ள, இத்தாலிய தேசிய Montessori அமைப்பின் தலைவர் பேராசிரியர் BENEDETTO SCOPPOLA அவர்களுக்கு இச்செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இச்செய்தியை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் பெயரில், அனுப்பியுள்ளார். 

Maria Montessori

இத்தாலி நாட்டின் மார்க்கே மாநிலத்தில், Chiaravalle என்ற ஊரில் 1870ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதி பிறந்த Maria Montessori அவர்கள், சிறந்த கல்வியாளர் மற்றும், உளவியல் மருத்துவர் ஆவார். இத்தாலியில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண்ணும் இவரே. இவர் சிறுபிள்ளைகளைப் பயிற்றுவிக்க, புதிய கல்விமுறை ஒன்றை உருவாக்கி, அதை 1907ம் ஆண்டு சனவரி மாதம் 6ம் தேதி, உரோம் நகரில் தனது பள்ளியில் அறிமுகப்படுத்தினார். பின்னர் அக்கல்விமுறை 1909ம் ஆண்டில் உலக அளவில் பரவத்தொடங்கியது. இவர் 1952ம் ஆண்டு மே 6ம் தேதி நெதர்லாந்தில் தனது 81வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

Comment