திருத்தந்தை பிரான்சிஸ்
பார்வையற்றிருந்தும் இயேசுவில் மெசியாவைக் கண்டுகொண்ட பர்த்திமேயு
மன உறுதி மிக்கவர்களாக, முழு இதயத்தோடு இறைவனை நோக்கித் திரும்புவோம் என செப்டம்பர் 24 ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரையில் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
பார்வையற்ற பர்த்திமேயுவுக்கு இயேசு பார்வை வழங்கிய நிகழ்வைப் பற்றிக் கூறும் இன்றைய நற்செய்தி குறித்து, தன் மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பார்வையற்ற பர்த்திமேயு, இயேசுவை நோக்கிக் கூறிய, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும், என்ற வார்த்தைகளை நாமும் அடிக்கடி உறுதியுடன் மீண்டும் மீண்டும் சொல்வோம் என்ற அழைப்பை விடுத்தார்.
ஏழையின் கூக்குரலுக்கு இறைவன் எப்போதும் செவிசாய்க்கிறார் என்ற கூற்றுக்கு எடுத்துக்காட்டாக, பர்த்திமேயுவின் விண்ணப்பத்திற்கு செவிமடுத்து நின்ற இயேசு, அவருக்கு பார்வையை வழங்கியதுடன், அவரின் விசுவாசமே அவரைக் குணப்படுத்தியது என்று கூறுவதையும் சுட்டிக்காட்டிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உறுதியான விசுவாசத்துடன் இறைவனை நோக்கி குரலெழுப்புவோம் என அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.
பார்வையற்றிருந்தும் இயேசுவில் மெசியாவைக் கண்டுகொண்ட பர்த்திமேயு, தன் உள்ளத்திலிருந்து எழுந்த விசுவாசத்தால் இயேசுவின் இரக்கம், கருணை, மற்றும் கனிவுக்கு அழைப்புவிடுத்து, தன் பார்வையைப் பெற்றதுடன், தன் குறைபாட்டால் இதயத்திற்குள் அனுபவித்த அவமானப்படுத்தல்கள், நிறைவேறா கனவுகள், தவறுகள் மற்றும் காயங்களிலிருந்தும் அவருக்கு இயேசு குணப்படுத்தலை வழங்கினார் என்பதை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
விசுவாச உறுதிக்கு எடுத்துக்காட்டாக அர்ஜென்டினா நாட்டில் தான் கண்ட ஒரு நிகழ்வையும் இங்கு திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
தன் 9 வயது மகள் நோயுற்றபோது அவளை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்ற தந்தை, அக்குழந்தை ஓர் இரவுக்குமேல் உயிர்வாழ்வது கடினம் என்று மருத்துவர்கள் கூறியபோதிலும், குழந்தையை மருத்துமனையில் விட்டுவிட்டு, 70 கிலோமீட்டர் தூரத்திலுள்ள மரியன்னை திருத்தலத்திற்கு பேருந்தில் சென்று, இரவு அத்திருத்தல கதவு மூடியிருந்த நிலையிலும், வெளியே நின்று இரவு முழுவதும் செபித்துவிட்டு, காலையில் மருத்துவமனைக்குத் திரும்பியபோது, அக்குழந்தை குணமடைந்திருப்பதைக் கண்டார் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்குழந்தை எவ்விதம் குணமடைந்தது என்பது, மருத்துவர்களுக்கே விளங்காத புதிராக இருந்தது என்பதை எடுத்துரைத்தார்.
நமக்கு அனைத்தையும் வழங்கவல்ல இறைவனிடம் முழு நம்பிக்கைக் கொண்டவர்களாக, மனவுறுதியுடனும் விசுவாசத்துடனும் இறைவனை நோக்கி வேண்டுவோம் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் முன்வைத்தார்.
நாம் நம் இறைவேண்டலில் உறுதியுடன் நிலைத்து நிற்கவும், நம் கோழைத்தனத்தாலோ, நம்பிக்கைக் குறைவாலோ இறைவனிலிருந்து விலகி நிற்காதிருக்கவும், பர்த்திமேயுவின் உறுதியான விசுவாசமும், அன்னை மரியாவின் எடுத்துக்காட்டும் நமக்கு உதவுவதாக என்று மேலும் எடுத்துரைத்து தன் மூவேளை செபவுரையை திருத்தந்தை பிரான்சிஸ் நிறைவுச் செய்தார்.
Comment