No icon

குடந்தை ஞானி

திருத்தந்தையைச் சந்தித்த ஜெர்மன் குடியரசுத் தலைவர்

ஜெர்மன் குடியரசுத் தலைவர் Frank-Walter Steinmeier அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, அக்டோபர் 25 திங்களன்று, திருப்பீடத்தின் நூலக அறையில் 55 நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசினார்.

இந்த சந்திப்பின்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2021ம் ஆண்டு வழங்கிய உலக அமைதி நாள் செய்தி, 'Fratelli Tutti' திருமடல், மற்றும், நோவாவை சித்திரிக்கும் வண்ணக் கற்கள் பதித்த ஓவியம் ஒன்றையும் பரிசளித்தார்.

அரசுத்தலைவர் Steinmeier அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

ஜெர்மன் குடியரசுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே நிலவும் நல்லுறவுகள், அந்நாட்டின் கல்வி மற்றும், நலவாழ்வுத் துறைகளில், கத்தோலிக்கத் திருஅவை ஆற்றிவரும் நற்பணிகள் ஆகியவற்றில் நிலவும் நிறைவானச் சூழலைக் குறித்து, இச்சந்திப்புகளில் பகிர்ந்துகொள்ளப்பட்டன என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.

அத்துடன், தற்போது உருவாகியுள்ள குடிபெயர்வு மற்றும் புலம்பெயர்வு, பன்னாட்டளவில் நடைபெறும் மோதல்கள், ஆகிய பிரச்சனைகளுக்கு, நாடுகள் அனைத்தும் இணைந்து அர்ப்பண உணர்வுடன் தீர்வுகாணவேண்டும் என்ற கருத்து, இச்சந்திப்புகளில் வலியுறுத்தப்பட்டது என்று, திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் அறிக்கை கூறுகிறது.

Comment