திருத்தந்தை பிரான்சிஸ்
நம்மைச் சுற்றியிருப்போரை சகோதரர் சகோதரிகளாக நம்புதல்
லிபியா நாட்டில் தங்கவைக்கப்பட்டிருக்கும் பல ஆயிரக்கணக்கான குடிபெயர்ந்தோர், மற்றும் புலம் பெயர்ந்தோருடன் தன் அருகாமையை வெளியிடுவதாக அக்டோபர் 25, இத்திங்கள்கிழமை வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்துள்ளார்.
'லிபியாவில் உள்ள ஆயிரக்கணக்கான குடிபெயர்வோர், மற்றும் புலம்பெயர்வோருடன் என் அருகாமையைத் தெரிவிக்கிறேன். நான் உங்களை மறப்பதில்லை, நான் உங்கள் அழுகுரலுக்கு செவிமடுத்து, உங்களுக்காக செபிக்கிறேன். கடும் நிலைகளுக்கு பல ஆண்டுகளாக உள்ளாக்கப்பட்டிருக்கும் இந்த நம் சகோதரர் சகோதரிகளுக்கு பொறுப்பானவர்கள் நாமே. இவர்களுக்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து இறைவேண்டல் செய்வோம்' என்கிறது திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி.
மேலும், அக்டோபர் 24 ஞாயிறன்று, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட 95வது உலக மறைபரப்புப்பணி நாளை மையப்படுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அதே நாளில் தன் டுவிட்டர் வலைப்பக்கத்தில், இயேசுவின் மனநிலையை நமக்குள் வளர்ப்பதும், நம்மைச் சுற்றியிருப்போர் அனைவரும் நம் சகோதரர் சகோதரிகளே என்பதில் விசுவாசம் கொண்டு செயல்படுவதும், மறைப்பணியாகும் என கூறியுள்ளதுடன், இறையன்பு நம் இதயங்களைத் தூண்டி நம்மை மறைப்பணித் தொண்டர்களாக மாற்றட்டும், எனவும் தெரிவித்துள்ளார். இதே ஞாயிற்றுக்கிழமையன்று, ஞாயிறு நற்செய்தி வாசகத்தையொட்டி, மேலும் இரு டுவிட்டர் செய்திகளையும் திருத்தந்தை பிரான்சிஸ் வெளியிட்டுள்ளார்.
Comment