திருத்தந்தை பிரான்சிஸ்
.தவறு செய்தவர்கள், தவறானவர்கள் என்ற நிலையிலேயே தொடரக்கூடாது
இத்தாலியின் இரு சிறைகளில் உள்ள சிறைக்கைதிகள், மற்றும் முன்னாள் சிறைக்கைதிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்றை கடந்தவார இறுதியில் திருப்பீடத்தில் சந்தித்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாடினார்.
இத்தாலியின் வாஸ்தோ, மற்றும் தெர்மொலி என்ற நகர்களில் உள்ள கைதிகள், மற்றும் முன்னாள் கைதிகளின் பிரதிநிதிகள் அடங்கிய ஒரு சிறு குழுவை 22ம் தேதி வெள்ளிக்கிழமையன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தவறு செய்துள்ள மனிதர்கள் தவறானவர்கள் என்ற நிலையிலேயே தொடரக்கூடாது என்பதை வலியுறுத்தினார்.
சிறைக்கைதிகள் தங்கள் பழைய குற்றங்களிலிருந்து மீண்டு, புதிய பிறப்படைந்துள்ள நிலை, ஒருவரிலிருந்து மற்றவருக்கு தொற்றிப் பரவுவதோடு, அது, விடுதலையளிக்கும் ஒன்றாகவும் இருக்கவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
அனைவரும் வாழ்வில் தவறுசெய்கிறார்கள், ஆனால் அந்த தவறிலேயே நிலைத்திராமல் இருப்பது முக்கியத்துவம் நிறைந்தது என எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வீழ்ந்த நிலத்தில் அப்படியே வீழ்ந்துகிடக்காமல் எழுவதுடன், வீழ்ந்துகிடக்கும் மற்றவர்களையும் கைதூக்கிவிட நாம் முன்வரவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
சிறைக்கைதிகள் திருத்தந்தையுடன் சந்திப்பதற்கு ஏற்பாடுச் செய்த, சிறைச்சாலைகளில் ஆன்மீகக் குருவாகப் பணியாற்றும் அருள்பணி Benito Giorgetta அவர்கள், இச்சந்திப்பு பற்றி உரைக்கையில், குற்றமிழைத்தவர்கள் இறைவனின் இரக்கத்தை வேண்டுவதையும், குற்றவாளிகளை கண்டனத்துக்குரியவர்களாக நோக்குவதிலிருந்து அனைவரும் விலகி நிற்க வேண்டும் என்பதையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டதாகத் தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறைக்கைதிகளை வரவேற்று அவர்களின் அனுபவப் பகிர்வுக்கு பொறுமையுடன் செவிமடுத்தது, அவரின் வார்த்தைகளையும் தாண்டி, சிறைக்கைதிகளுக்கு பெரும் ஆறுதலைத் தருவதாக இருந்தது என்றார், அருள்பணி Benito.
இந்த சந்திப்பின்போது பங்குபெற இயலாத சிறைக்கைதிகளுக்கு, ஊக்கமூட்டும் வார்த்தைகள் அடங்கிய காணொளிச் செய்தி ஒன்றையும் திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
Comment