No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கனடா நாட்டிற்கு திருப்பயணியாகச் செல்ல விரும்பும் திருத்தந்தை

கனடா நாட்டில் பழங்குடியினருக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே துவங்கியுள்ள ஒப்புரவு முயற்சிகளுக்கு உதவியாக, அந்நாட்டிற்கு ஒரு திருப்பயணியாகச் செல்ல விழைவதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளார் என்று, வத்திக்கான் செய்தித்துறை, அக்டோபர் 27 புதனன்று அறிவித்தது.

கனடா நாட்டில் நிகழ்ந்துவரும் ஒப்புரவு முயற்சிகளுக்கு உதவியாக, அந்நாட்டிற்கு திருத்தூதுப் பயணம் மேற்கொள்வதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, கனடா நாட்டு ஆயர் பேரவை அழைத்துள்ளது என்று கூறிய செய்தித்துறை, திருத்தந்தை, இந்த அழைப்பை ஏற்க விருப்பம் தெரிவித்துள்ளார் என்றும், வத்திக்கானுக்கும், கனடாவுக்கும் ஏற்புடைய நாள்களில், இந்தப் பயணத்திட்டம் வகுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

இந்த அறிக்கை வெளியானதைத் தொடர்ந்து, கனடா நாட்டு ஆயர் பேரவையின் தலைவர், ஆயர் Raymond Poisson அவர்கள், செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘கனடா நாட்டு ஆயர்களாகிய நாங்களும், இங்குள்ள கத்தோலிக்கர்களும், இந்நாட்டில் வாழும் பழங்குடியினருடன் மேற்கொண்டு வரும் ஒப்புரவு முயற்சிகள் என்ற பாதையில், திருத்தந்தையின் வருகை ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும்’ என்று கூறினார்.

 

கனடாவின் Kamloops பழங்குடியினர் பள்ளியில் குழந்தைகளின் எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதைக் குறித்து கேள்வியுற்ற திருத்தந்தை, தன் மனவேதனையை, இவ்வாண்டு ஜூன் மாதம் 6ம் தேதி வழங்கிய மூவேளை செப உரையில் வெளியிட்டார்.

மேலும், இவ்வாண்டு டிசம்பர் 17ம் தேதி முதல், 20ம் தேதி முடிய, கனடா நாட்டு பழங்குடியினரின் பிரதிநிதிகள், மற்றும் அந்நாட்டு ஆயர் பேரவையின் பிரதிநிதிகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வத்திக்கானில் சந்தித்துப் பேசுவார் என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் ஒரு தொடர்ச்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கனடா நாட்டில் மேற்கொள்ளும் திருத்தூதுப் பயணம் அமையும் என்று, வத்திக்கான் செய்தித்துறை கூறியது.

2002ம் ஆண்டு கனடா நாட்டின் டொரான்டோ நகரில் நடைபெற்ற உலக இளையோர் நாள் நிகழ்வுகளில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் கலந்துகொண்டதற்குப் பின்னர், 20 ஆண்டுகள் கழித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் திருத்தூதுப் பயணம் அமையவுள்ளது.

திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், கனடா நாட்டில் 1984, மற்றும் 1987 ஆகிய ஆண்டுகளில், திருத்தூதுப் பயணங்கள் மேற்கொண்ட வேளைகளில், அந்நாட்டில் வாழ்ந்துவரும் பழங்குடியினரைச் சந்தித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comment