Fr. Gnani Raj
கால நிலை மாற்றத்தைக் குறைக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட
- Author Fr. Gnani Raj --
- Wednesday, 03 Nov, 2021
கால நிலை மாற்றம் உருவாக்கி வரும் நெருக்கடிகளைக் குறைப்பதற்குரிய நடவடிக்கைகள், உலக அளவில் மெதுவாக இடம் பெற்று வரும் வேளை, அவற்றைத் துரிதப் படுத்துவதற்கு, COP26 எனப்படும், கால நிலை மாற்ற 26வது உலக உச்சி மாநாடு உதவும் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ளார், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.
அக்டோபர்31 ஞாயிறன்று கிளாஸ்கோவில் துவங்கவிருக்கும் COP26 உலக மாநாட்டில் கலந்து கொள்ளும் திருப்பீடப் பிரதிநிதிகள் குழுவிற்குத் தலைமை வகிக்கும் கர்தினால் பரோலின் அவர்கள், அவ்வுலக மாநாட்டில் திருப்பீடம் கலந்து கொள்வதன் நோக்கம் பற்றி, அக்டோபர்30 சனிக் கிழமையன்று வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார்.
கால நிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் கவலைகளைக் கருத்தில் ஏற்று, அம்மாற்றத்தை மட்டுப் படுத்தும் நடவடிக்கையில் உலக நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பு அவசியம் என்பதை, COP26 உலக மாநாடு உறுதிப்படுத்தும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
COP26 உலக மாநாடு, கோவிட்-19 பெருந்தொற்று பரவத் தொடங்கியதற்குப் பின், கால நிலை மாற்றம் குறித்து ஐக்கிய நாடுகள் நிறுவனம் நடத்தும் முதல் உலக நிகழ்வு என்றும், 2015ம் ஆண்டு, பாரிஸ் நகரில் நடை பெற்ற உலக மாநாட்டில் ஏற்றுக் கொள்ளப்பட்ட தீர்மானங்கள் நடை முறைப் படுத்தப்பட, கிளாஸ்கோ மாநாட்டில் வலியுறுத்தப்படும் என்றும், கர்தினால் பரோலின் அவர்கள் கூறியுள்ளார்.
ஒருங்கிணைந்த சூழலியலுக்கு ஆதரவாகவும், புதுப்பிக்க வல்ல எரி சக்திகள் பயன் படுத்தப்படுவதற்கும் குரல் கொடுத்து வரும் திருத்தந்தையின் விண்ணப்பம் நிறை வேற்றப்படுவதற்கு மேற் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் பற்றியும் கர்தினால் பரோலின்எடுத்துரைத்தார்.
பெருந்தொற்று, கால நிலை மாற்றம் ஆகிய இரண்டு விவகாரங்களும் ஏற்படுத்தியுள்ள பாதிப்புக்களை எதிர் கொள்வதற்கு, பொது நலனை ஊக்குவிக்கின்ற மற்றும், ஒவ்வொரு நடவடிக்கையிலும் மனிதர் மையப்படுத்தப்பட வேண்டிய ஒரு கலாச்சார மாற்றம் தேவை என்பதையும், கர்தினால் பரோலின் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
Comment