திருத்தந்தை பிரான்சிஸ் மறைக்கல்வியுரை
இயேசுவை நம்புதல் என்பது, அவரைப் பின்செல்வதாகும்
- Author குடந்தை ஞானி --
- Thursday, 04 Nov, 2021
மறைக்கல்வியுரை:
எனவே சகோதரர்களே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன் : தூய ஆவியின் தூண்டுதலுக்கேற்ப வாழுங்கள்; அப்போது ஊனியல்பின் இச்சைகளை நிறைவேற்றமாட்டீர்கள். ஊனியல்பின் இச்சை தூய ஆவிக்கு முரணானது. தூய ஆவியின் விருப்பம் ஊனியல்புக்கு முரணானது. இவை ஒன்றுக்கொன்று எதிராய் உள்ளதால் நீங்கள் செய்ய விரும்புவதை உங்களால் செய்ய முடிவதில்லை. தூய ஆவியின் துணையால் நாம் வாழ்கிறோம். எனவே, அந்த ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுவோம் (கலா.5:16-17, 25)
புதன் மறைக்கல்வியுரை
அன்புச் சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் அனைவருக்கும் காலை வணக்கம். நாம் இப்போது வாசிக்க கேட்ட திருத்தூதர் பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமடலின் பிரிவு 5ல், “தூய ஆவி காட்டும் நெறியிலேயே நடக்க முயலுங்கள்” என்று, அவர் கிறிஸ்தவர்களுக்கு அழைப்புவிடுக்கிறார். இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 03 புதன் காலையில், திருத்தந்தை புனித 6ம் பவுல் அரங்கில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகள், மற்றும் ஏனையோருக்கு, தன் மறைக்கல்வியுரையைத் துவக்கினார். இப்புதன் காலையில், உரோம் நகரில் மழைபெய்துகொண்டிருந்தாலும், திருத்தந்தையின் புதன் மறைக்கல்வியுரையைக் கேட்டு ஆசிர்பெறுவதற்கு, பல நாடுகளிலிருந்து ஏராளமான மக்கள் வந்திருந்தனர். உண்மையில் இயேசுவை நம்புவது என்பது, முதல் சீடர்கள் போன்று, அவரைப் பின்பற்றவேண்டும், அவரது பாதையில் அவர் பின்னே செல்லவேண்டும் என்று அர்த்தமாகும். அதேநேரம், அதற்கு எதிரான பாதையை, அதாவது, நம் சொந்த ஆதாயங்களைத் தேடுகின்ற தன்முனைப்பைத் தவிர்க்கவேண்டும். இந்தப் பாதையை திருத்தூதர் பவுல் ஊனியல்பின் இச்சைகள் என்று குறிப்பிடுகிறார். கிறிஸ்துவின் வழியில் நடப்பதற்கு தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார். புனித பவுல், கிறிஸ்துவின் சீடர்கள் மேற்கொள்ளவேண்டிய பயணத்தை விளக்குவதற்கு, “நடத்தல்” என்ற உருவகத்தைப் பயன்படுத்துகிறார். தூய வழியில் செல்வதற்கு, தூய ஆவியார் நம்மை வழிநடத்துகிறார், கிறிஸ்துவில் நாம் பெற்றுக்கொண்ட புதிய வாழ்வில் நிலைத்திருக்கவும், இதற்கு எதிரான ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணிக்கவும், அவர் நமக்குக் கற்றுத்தருகிறார். திருமுழுக்கில் துவங்கிய சீடத்துவப் பயணம், ஆவியானவர் நமக்குக் கற்றுத்தருவதுபோல் வாழ்வதற்கு நம்மை வலியுறுத்துகிறது என்பதை புனித பவுல் தெளிவுபடுத்துகிறார். ஊனியல்பின் இச்சைகளைப் புறக்கணித்து வாழ்வதற்கு, தனிப்பட்ட வாழ்க்கையில் மட்டுமல்லாமல், குழும வாழ்விலும் தொடர்ந்து போராடவேண்டியுள்ளது. அருள் மற்றும், பிறரன்பு ஆகிய தூய ஆவியாரின் கொடைகளால் மட்டுமே, நம்மில் என்றென்றும் இருக்கின்ற சினம், பொறாமை, தன்னலம் ஆகிய சோதனைகளைத் தவிர்க்க இயலும். இந்த ஓர் உண்மையில், “ஒருவர் மற்றவருடைய சுமைகளைத் தாங்கிக் கொள்வதற்கு” (கலா.6:2), தடம்புரண்டு செல்பவர்களைத் திருத்தும்போது கனிவோடு இருக்கவும், துன்புறும் மக்களுக்கு பரிவன்பு காட்டவும், புனித பவுல் நம்மை வலியுறுத்துகிறார். ஆவியானவரின் வழிகாட்டுதலின்படி நடப்பதற்கு நாம் மேற்கொள்ளும் முயற்சிகளில் உறுதியாய் இருக்கவும், கிறிஸ்துவில் நாம் பெற்ற அழைப்புக்குத் தகுதியான வழியில் செயல்படவும் ஆண்டவரிடம் அருளை மன்றாடுவோம்.
இவ்வாறு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்தவர்கள் அனைவரும் தூய ஆவியார் காட்டும் நெறியிலேயே நடக்க முயலவேண்டும் என்று, இப்புதன் மறைக்கல்வியுரையில் அழைப்புவிடுத்தார். பின்னர், இந்நாள்களில் நாம் சிறப்பித்த அனைத்து புனிதர்கள் பெருவிழா, அனைத்து நம்பிக்கையாளர் நினைவு நாள் ஆகிய இரண்டும், நம் இவ்வுலக வாழ்வின் முக்கியத்துவம் மற்றும், நித்திய வாழ்வின் மதிப்பு ஆகியவைபற்றிச் சிந்திக்க அழைக்கின்றன என்றுரைத்த திருத்தந்தை, புனிதர்களைப் பின்பற்றி வாழ்வோம் என்றும் அழைப்புவிடுத்தார். இறுதியில், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அளித்தார்.
Comment