No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தையைச் சந்தித்த பாலஸ்தீனா நாட்டின் அரசுத்தலைவர்

பாலஸ்தீனா நாட்டின் அரசுத்தலைவர் Mahmud Abbas அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 4 வியாழனன்று, திருப்பீடத்தில், தனியே சந்தித்துப் பேசினார்.

50 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்பின்போது, வத்திக்கான் பேதுரு சதுக்கத்தைப் பின்னணியாகக் கொண்டு இரு கரங்கள் ஒன்றையொன்று குலுக்குவதுபோன்று அமைக்கப்பட்ட ஒரு வெண்கல சிலையையையும், தான் வெளியிட்டுள்ள திருமடல்கள், மற்றும், உலக அமைதி நாள் செய்தி ஆகியவற்றின் பிரதிகளையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அரசுத்தலைவர் Abbas அவர்களுக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.

பெத்லகேமில் உள்ள கிறிஸ்து பிறப்பு பெருங்கோவிலைப் பற்றிய ஒரு நூலையும், கிறிஸ்து பிறப்பு குகையின் ஒரு வடிவத்தையும், அரசுத்தலைவர் Abbas அவர்கள், திருத்தந்தைக்கு, நினைவுப் பரிசாக அளித்தார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தலைமைப்பணியேற்ற 2013ம் ஆண்டு துவங்கி, பாலஸ்தீன அரசுத்தலைவர் Abbas அவர்கள், வத்திக்கானுக்கு ஆறு முறை வருகை தந்துள்ளார் என்பதும், திருத்தந்தை அவர்கள், புனித பூமிக்கு திருத்தூதுப் பயணம் மேற்கொண்ட வேளையில், Abbas அவர்களை சந்தித்தது உட்பட, இவ்விருவரும் இதுவரை, ஏழு முறை சந்தித்துள்ளனர் என்பதும், குறிப்பிடத்தக்கன.

 

பாலஸ்தீனா நாட்டின், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் குழுவுடன் திருப்பீடம் சென்ற அரசுத்தலைவர் Abbas அவர்கள், திருத்தந்தையை தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்  அவர்களையும், பன்னாட்டு உறவுகள் திருப்பீடத் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களையும் சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்புக்கு முன்னர், இவ்வியாழன் காலை 11 மணிக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில் நிறைவேற்றிய திருப்பலியில், கடந்த ஆண்டு, இறையடி சேர்ந்த கர்தினால்கள் மற்றும் ஆயர்கள், இறைவனில் நிறையமைதி அடைவதற்கென செபித்தார்.

இத்திருப்பலியில் வழங்கிய மறையுரையை அடிப்படையாகக் கொண்டு, திருத்தந்தை வெளியிட்ட முதல் டுவிட்டர் செய்தியில், "மரணம் என்ற மறையுண்மையை நேருக்கு நேர் சந்திக்கும் இன்று, நம் வாழ்வில் உருவாகும் எதிர்ப்புகள், துன்பங்கள் ஆகியவற்றை தகுந்த கண்ணோட்டத்துடன் காணவும், அமைதியுடன் ஆண்டவருக்காகக் காத்திருக்கவும் இறைவனின் வரத்தை வேண்டுவோம்" என்ற சொற்கள் இடம்பெற்றிருந்தன.

மேலும், குழந்தைகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் நோக்கத்துடன், திருத்தந்தை 23ம் யோவான் குழுமமும், இத்தாலியின் பொலோஞ்ஞா பல்கலைக்கழகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள ஒரு பன்னாட்டு கருத்தரங்கிற்கு செய்தியொன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், சிறியோரின் பாதுகாப்பை மையப்படுத்தி, தன் 2வது டுவிட்டர் செய்தியை வெளியிட்டார்.

"கத்தோலிக்க நிறுவனங்களில் வழங்கப்படும் கல்வியில், சிறியோரின் பாதுகாப்பு, முதன்மையான உரிமை பெறுவதாக. நம்பிக்கையும், ஒளிவுமறைவற்ற தன்மையும் கொண்ட இப்பணியில், அதிகாரம் தவறாகப் பயன்படுத்தப்படுவது நிறுத்தப்படுவதாக" என்ற சொற்கள், திருத்தந்தையின் இரண்டாவது டுவிட்டர் செய்தியாக வெளியாயின.

Comment