திருத்தந்தை பிரான்சிஸ்
போர்களின் விதைகளை அகற்றுவதற்கு முயற்சிகள் அவசியம்
- Author குடந்தை ஞானி --
- Wednesday, 17 Nov, 2021
போர்களை விதைக்கின்ற பேராசை, புறக்கணிப்பு, அறியாமை, அச்சம், அநீதி, பாதுகாப்பின்மை மற்றும், வன்முறையை அகற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொள்வதன் வழியாக, நம் பொதுவான இல்லத்தையும், நம்மையும் பராமரிப்போம் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நவம்பர் 06 சனிக்கிழமையன்று அழைப்புவிடுத்துள்ளார்.
போர் மற்றும், ஆயுதம் ஏந்திய மோதல்களில், சுற்றுச்சூழல் சுரண்டப்படுவதைத் தடைசெய்வதற்கு அழைப்புவிடுக்கும் உலக நாளான நவம்பர் 06 சனிக்கிழமையன்று வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில், இவ்வாறு கேட்டுக்கொண்டுள்ள திருத்தந்தை, போர்களின் விதைகளை அப்புறப்படுத்தும் இலக்கை எட்டுவதற்கு, எக்காலத்தையும்விட இக்காலத்தில், மனித சமுதாயத்திற்கு ஏராளமான வழிவகைகள் உள்ளன என்று கூறியுள்ளார்.
போர் மற்றும், ஆயுதம் ஏந்திய மோதல்களில் சுற்றுச்சூழல் கடுமையாய்ப் பாதிக்கப்படுவது குறித்த விழிப்புணர்வை உருவாக்கும் நோக்கத்தில், ஐ.நா.வின் பொது அவை, 2001ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி இந்த உலக நாளை ஏற்படுத்தியது.
இந்த உலக நாளுக்கென செய்தி வெளியிட்டுள்ள ஐ.நா. தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள், ஐ.நா.வின் வளர்ச்சித்திட்ட இலக்குகளை நாம் எட்டவேண்டுமெனில், போர்களால் சுற்றுச்சூழல் சேதமடைவது, மற்றும், காலநிலையில் மாற்றம் இடம்பெறுவதைத் தடைசெய்யவும், போர்களால் நம் பூமிக்கோளம் நோயாளியாவதிலிருந்து அதனைக் காப்பாற்றவும், உடனடியாகவும், துணிச்சலாகவும் செயல்படவேண்டும் என்று அழைப்புவிடுத்துள்ளார்.
எந்தவொரு ஆயுதமோதலும், வேளாண்மையை எரித்துள்ளது, நீர் வளங்களை மாசுபடுத்தியுள்ளது, காடுகளைச் சேதப்படுத்தியுள்ளது மற்றும், ஏராளமான விலங்குகளைக் காவு கொண்டுள்ளது. கடந்த அறுபது ஆண்டுகளில் இடம்பெற்றுள்ள உள்நாட்டுப் போர்களில், குறைந்தது, நாற்பது விழுக்காடு இயற்கை வளங்கள் சூறையாடப்பட்டுள்ளன என்று, ஐ.நா. சுற்றுச்சூழல் திட்ட அமைப்பு (UNEP) கூறியுள்ளது.
மேலும், ஆயர்கள் பேராயத் தலைவர் கர்தினால் Marc Ouellet, திருப்பீட சமூகத்தொடர்புத் துறையின் தலைவர் பவுலோ ரூஃபினி, வர்த்தக நிறுவனங்கள் தலைவர்களின் உலகளாவிய கிறிஸ்தவ அமைப்பின் (UNIAPAC) தலைவர் Bruno Carlos Pinto Basto Bobone, Kazakhstan குடியரசின் செனட் அவைத் தலைவர் Maulen Ashimbayev ஆகியோரையும் நவம்பர் 06 சனிக்கிழமையன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் தனியே சந்தித்துப் பேசினார்.
Comment