Vatican News
‘உமது திருவுளம் நிறைவேறுக’
- Author Fr.Gnani Raj Lazar --
- Thursday, 21 Mar, 2019
திருத்தந்தையின் மறைக்கல்வியுரை: ‘உமது திருவுளம் நிறைவேறுக’
திருத்தந்தை பிரான்சிஸ், தூய பேதுரு பேராலய வளாகத்தில், மார்ச் 20 ஆம் தேதி புதன்கிழமையன்று விண்ணுலகில் உள்ள தந்தையே’ என்ற இயேசு கற்பித்த செபம் குறித்த தன் மறைக்கல்வி உரையைத் தொடர்ந்தார். முதலில், புனித பவுல் திமொத்தேயுவுக்கு எழுதிய முதல் மடல் (திமொத். 2, 1-4), வாசிக்கப்பட்டது. பின்னர் திருத்தந்தை, அன்பு சகோதரர் சகோதரிகளே, வானகத் தந்தாய் என்ற செபம் குறித்த நம் மறைக்கல்வி தொடரில் இன்று, ‘உமது திருவுளம் நிறைவேறுக’ என்ற இச்செபத்தில் கூறப்படும் மூன்றாவது வேண்டுகோள் குறித்து நோக்குவோம். இறைவனின் திருவுளம் இயேசுவில் வெளிப்படுத்தப்பட்டுள்ளதை நாம் காண்கிறோம். அதாவது, காணாமல்போனதை தேடிக் கண்டுபிடித்து மீட்க வேண்டும் என்பதே அவரின் திருவுளம். இதன் மதிப்பறிந்து நாம் பாராட்டவில்லையெனில், இயேசு கற்பித்த செபத்தின் மூன்றாவது விண்ணப்பமாகிய ‘உமது திருவுளம் நிறைவேறுக’ என்பதன் அர்த்தத்தை, சரியாகப் புரிந்துகொள்ளத் தவறி விடுவோம். மனித குலமனைத்தும் மீட்கப்பட வேண்டும் என்பதே இறைவனின் திருவுளம் என்பதை நாம் சந்தேகமின்றி உறுதியாகப் புரிந்து கொள்ளலாம். தங்கள் தந்தையின் இதயத்தையும், அவரின் அன்புநிறை திட்டத்தையும் அறிந்துள்ள குழந்தைகளாக, நாம் இச்செபத்தை செபிக்கிறோம். இந்த செபம், இயேசுவின் இதயத்திற்குள் எழுப்பிய அதே தூண்டுதலை நமக்குள்ளும் எழுப்புகிறது. குறிப்பாக, இறுதி இரவு உணவுக்குப்பின் ஒலிவ மலைக்குச்சென்ற இயேசு, “தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்” (லூக். 22:42), என்று செபித்ததை நாம் காண்கிறோம். உலகின் தீச்செயல்களால், நொறுக்கிப் பிழியப்பட்டபோதிலும், இயேசு தன்னையே முழுமையாக, தந்தையின் திருவுளத்திற்குக் கையளித்தார். இறைவன் நம்மை ஒருபோதும் கைவிடமாட்டார் என்பது வெறும் நம்பிக்கை மட்டுமல்ல, அதையும் தாண்டிய ஓர் உறுதிப்பாடு என்ற திடநம்பிக்கையுடன், இயேசுவைப்போல் நாமும் நம்மை இறைத்தந்தையின் கைகளில் ஒப்படைப்போம்
என்று மறைக்கல்வி உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து ஏறத்தாழ ஆயிரம்பேர் உயிரிழந்து, பல ஆயிரக்கணக்கானோர் குடியிருப்புக்களை இழந்துள்ள ஆப்பிரிக்காவின் தென்பகுதி பெருமழை மற்றும் வெள்ளப் பெருக்கம் குறித்து தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டார். இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.
Comment