திருத்தந்தை பிரான்சிஸ் இறைவேண்டல்
தேவையில் இருப்பவரோடு உணவைப் பகிர்ந்துகொள்வோம்
- Author நம் வாழ்வு --
- Thursday, 18 Nov, 2021
ஏழைகளோடு உரையாடி, அவர்களோடு இறைவேண்டல் செய்வதற்காக, இத்தாலியின் அசிசி நகருக்கு நவம்பர் 12 ஆம் தேதி வெள்ளி காலையில் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தேவையில் இருப்போருக்கு நம் உதவிக் கரங்களை நீட்டுவோம் மற்றும் அவர்களோடு நம் உணவை எப்போதும் பகிர்ந்துகொள்வோம் என்று கேட்டுக்கொண்டார்.
மற்றவருக்குப் பணியாற்ற ஆர்வம்
அசிசி நகரின் தூதர்களின் புனித மரியா பெருங்கோவிலில் இச்செப நிகழ்வைத் துவக்கிய திருத்தந்தை, அசிசி நகர் புனித பிரான்சிஸ், புனித கிளாரா, அசிசி நகரோடு நெருங்கிய தொடர்புகொண்டிருந்த அருளாளர் கார்லோ ஆக்டிஸ் உள்ளிட்ட பல புனிதர்களைக் குறிப்பிட்டு, இவர்கள் அனைவரும், ஆண்டவரின் குரலுக்குச் செவிமடுத்து, தங்கள் வாழ்வை, வறியோர் மற்றும், கைவிடப்பட்ட மக்களுக்காக அர்ப்பணித்தவர்கள் என்று கூறினார்.
உதவி அதிகம் தேவைப்படுவோருக்காக, வருகிற ஆண்டை அர்ப்பணிப்பதற்கு நம் ஆவலை புதுப்பிப்போம் என்று செபித்த திருத்தந்தை, “ஏழைகள் எப்போதுமே நம்மோடு இருக்கின்றார்கள்” (மாற்.14:3-9) என்று மாற்கு நற்செய்தியில் இயேசு தம் சீடர்களிடம் கூறியதை நினைவுபடுத்தி, அவர்களோடு நம் தினசரி உணவைப் பகிர்ந்துகொள்ளவேண்டும் என்றும், ஏழைகளின் பிரசன்னத்தைப் புறக்கணிப்பவர்களாக, நாம் ஒருபோதும் இருக்கக்கூடாது என்றும் கேட்டுக்கொண்டார்.
ஏழைகளை நோக்கி கரங்கள் விரியவேண்டும்
கடவுளே, நீர் அளிக்கின்ற சுதந்திரமும், உணவும் ஒருபோதும் குறைவுபடக்கூடாது என்றும், உம்மையே நீர் அளிக்கும் முறையில், நாங்களும் அளிப்பதற்கு கற்றுக்கொள்ளவேண்டும் என்றும் செபித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு அமர்ந்திருந்த வறியோர் மற்றும், தன்னார்வலர்கள் மீது தன் கரங்களை விரித்து, இவ்வாறு இறைவேண்டல் செய்தார்.
இறைவேண்டல்
எம் தந்தையே இறைவா, உமது இரக்கம் எல்லையற்றது.
இந்த உம் பிள்ளைகளைப் பாதுகாத்தருளும். அதனால் அவர்கள், உம் வார்த்தையால் வழிநடத்தப்படுவார்கள், உதவி மற்றும், துன்பத்தால் பாதிக்கப்பட்டுள்ள நம் சகோதரர் சகோதரிகளின் இதயங்கள் வழியாகக் கடந்துசெல்லும் அன்பின் பாதையை அவர்கள் ஒருபோதும் இழக்காதிருப்பார்கள். தேவையில் இருப்போருக்கு தங்கள் கரங்களை நீட்டுவதற்கு வலிமை, துணிவு மற்றும் மனஉறுதியை உமது ஆவியானவர் அளிப்பாராக.
அநாதைகள், மற்றும் கைம்பெண்களின் தந்தையே, இறைவா, அந்நியரின் புகலிடமே, நசுக்கப்பட்டவரின் நீதியே, உம் அன்பில் நம்பிக்கை வைத்துள்ள ஏழைகளைக் காத்தருளும். இவர்களுக்கு சுதந்திரமும், உணவும் ஒருபோதும் குறையாமல் இருக்கச் செய்தருளும், நீர் எமக்கு அளிப்பவற்றைக் கொடுக்கவும் எமக்குக் கற்றுத்தாரும்.
Comment