உலக வறியோர் தினத் திருப்பலி
பொருட்களை வீணடிக்கும் அநீதியான சமூகத்தின் பலியாடுகள்
- Author நம் வாழ்வு --
- Thursday, 18 Nov, 2021
நவம்பர் 14 ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவிலில் சிறப்பிக்கப்பட்ட உலக வறியோர் தினத் திருப்பலியில், இந்நாட்களின் துன்பநிலைகள் குறித்துப் பேசத் துவங்கும் இந்நாள் நற்செய்தி வாசகம், அதன் இரண்டாம் பகுதியில் நாளைய நாளுக்கான நம்பிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, நமக்காகக் காத்திருக்கும் வருங்கால மீட்பை விவரிக்கிறது என திருத்தந்தை பிரான்சிஸ் மறையுரையாற்றினார்.
இன்றைய துன்பநிலைகளையும், நாளைய நம்பிக்கைகளையும் இயேசுவின் பார்வையில் உற்றுநோக்குவோம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை, பெரும் இன்னல்கள், வன்முறை, வேதனைகள் மற்றும் அநீதிகளை உள்ளடக்கிய ஒரு வரலாற்றிற்குள் இருந்துகொண்டு, வராதோ எனத் தோன்றும் ஒரு விடுதலைக்காக காத்திருக்கிறோம் என உரைத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாக நம் இணைப்புச் சங்கிலியின் பலவீனமான வளையமாக இருக்கும் ஏழைகள் எப்போதும் காயப்படுத்தப்படுபவர்களாகவும், ஒடுக்கப்படுபவர்களாகவும், மிதித்து நசுக்கப்படுபவர்களாகவும் உள்ளார்கள் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் சுட்டிக்காட்டினார்.
பொருட்களை வீணடிக்கும் ஒரு அநீதியான சமூகத்தின் பலியாடுகளாக விளங்கிவரும் ஏழைகளை குறித்து நாம் பாராமுகமாக ஒதுங்கிச் செல்லாமல், அவர்களின் துயர்களை நெருக்கமாகச் சென்று உற்றுநோக்குவோம் என்ற அழைப்பை விடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய துன்பநிலைகளைத் தாண்டி, நாளைய நம்பிக்கைகள் குறித்து நோக்குவோம் என எடுத்துரைத்தார்.
நாளைய நம்பிக்கையின் விதை, இன்றைய நம் வேதனைகளில் முளைக்கிறது என்பதை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இறைவனே நம் துன்ப துயர்களிலிருந்து நம்மை விடுவிக்கின்றார் என மேலும் விவரித்தார். இன்றைய துயர்களின் வேதனையை குணப்படுத்த நாளைய நம்பிக்கைகளுக்கு நாம் உரமூட்டவேண்டும். ஏனெனில் இன்றைய குணப்படுத்தல்கள் இல்லாமல், நாளைய நம்பிக்கை உயிர்வாழ முடியாது எனவும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
நற்செய்தி வழங்கும் நம்பிக்கை என்பது, நாளை நல்வாழ்வைப்பெற இன்று அமைதியுடன் காத்திருப்பதல்ல, மாறாக, மீட்பு குறித்த கடவுளின் வாக்குறுதியை இன்றும், எல்லா நாட்களிலும் உண்மை நிலையாக்குவதாகும் எனவும் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அன்பு, நீதி, மற்றும் உடன்பிறந்த நிலையுடன் இயேசு துவக்கிவைத்த இறையரசை தினமும் கட்டியெழுப்புவது நம் கடமையாகும் என்றுரைத்து, நல்ல சமாரியாரை அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக முன்வைத்தார்.
’ஏழைகளின் அருகில் வந்து அவர்களில் நம்பிக்கையை விதையுங்கள்’ என்று இந்நாளில் திருஅவை உங்களை நோக்கிக் கேட்கிறது, எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் கேட்டுக்கொண்டார். சூரியன் இருளாகிவரும் வேளைகளிலும், பாராமுகங்கள் பல்வேறு விதங்களில் ஆட்சிபுரியும் வேளைகளிலும், ஒளியாகவும், கருணைமிக்கவர்களாகவும், அன்புகூர்பவர்களாகவும் இருந்து, மக்களில் நம்பிக்கையை கட்டியெழுப்புவோம் என்பதே நம்மிடம் எதிர்பார்க்கப்டுகிறது எனவும் திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்.
நம்பிக்கையுடன் மட்டும் வாழ்பவர்களாக இல்லாமல், நம்பிக்கையை கட்டியெழுப்புபவர்களாக வாழ்வோம் என உரைத்த திருத்தந்தை, ஏழைகள் மற்றும் நம் பொது இல்லமாகிய பூமியின் மீதான அக்கறை, நீதி, ஒருமைப்பாடு போன்றவைகளின் உறுதியான செயல்பாடுகளாக நம் நம்பிக்கைகள் மாறவில்லையெனில், ஏழைகளின் துயர்களை நாம்மால் அகற்ற முடியாது எனவும் விளக்கினார்.
இறுகிய மனநிலையுடன் கிறிஸ்தவர்கள் செயல்படாமல், கருணையும் மென்மை மனநிலையும் உடையவர்களாக செயல்பட்டு, மரங்களின் இலைகள்போல் அசுத்தக் காற்றை சுவாசித்து சுத்தக் காற்றை வெளியிடுபவர்களாக, பசியால் இருப்போருடன் அப்பத்தை பகிர்பவர்களாகவும், நீதிக்காக உழைப்பவர்களாகவும், ஏழைகளின் மாண்பைக் கட்டிக்காப்பவர்களாகவும் செயல்பட வேண்டியதன் அவசியத்தை திருத்தந்தை பிரான்சிஸ் வலியுறுத்தினார்.
Comment