வத்திக்கான் கண்காட்சி
தோழமையில் வாழ புலம்பெயர்ந்தோரின் பாதை
- Author நம் வாழ்வு --
- Thursday, 18 Nov, 2021
உரோம் மாநகரில் இயேசு சபையினரின் அஸ்தாலி புலம்பெயர்ந்தோர் மையம் துவக்கப்பட்டதன் நாற்பதாம் ஆண்டை முன்னிட்டு, "வருங்காலத்தை நோக்கிய முகங்கள்" என்ற தலைப்பில் அமைக்கப்பட்டுள்ள கண்காட்சி ஒன்றை, நவம்பர் 16 ஆம் தேதி செவ்வாயன்று திறந்துவைத்து திருத்தந்தை பிரான்சிஸ் உரையாற்றினார்.
கடந்த நாற்பது ஆண்டுகளில் இத்தாலிக்குப் புலம்பெயர்ந்துவந்து, அஸ்தாலி மையத்தால் பராமரிக்கப்படும் புலம்பெயர்ந்தோர் அனைவருக்கும் தன் அருகாமை மற்றும் பாசத்தைத் தெரிவித்த திருத்தந்தை, பழைய ஏற்பாட்டில் நாற்பது என்ற எண், குறிப்பாக, இஸ்ரயேல் மக்கள் வாக்களிக்கப்பட்ட பூமிக்குள் நுழைவதற்குமுன், பாலைநிலத்தில் பயணம் மேற்கொண்ட நாற்பது ஆண்டுகள் முக்கிய அர்த்தத்தைக் கொண்டிருக்கின்றன என்று கூறினார்.
நாற்பது ஆண்டுகள்
அடிமைத்தளையிலிருந்து விடுதலையடைந்து, மிகுந்த கஷ்டங்கள் மத்தியில், தங்களை ஒரு மக்களினமாக அமைத்துக்கொள்வதற்கு, இஸ்ரயேல் மக்களுக்கு ஒரு முழு தலைமுறை தேவைப்பட்டது என்றுரைத்துள்ள திருத்தந்தை, நவீனகால மனித வரலாற்றிலும், கடந்த நாற்பது ஆண்டுகள் எளிதானதாக இல்லை என்றும், தங்கள் சொந்த இடங்களைவிட்டு கட்டாயமாகப் புலம்பெயரும் மனிதரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்றும் கூறியுள்ளார்.
மனித மாண்பு மறுக்கப்படுதல், ஒரு பொருள் போன்று நடத்தப்படுதல் போன்ற பல்வேறு துயரங்களால் மக்கள் புலம்பெயர்கின்றனர் என்று கூறியுள்ள திருத்தந்தை, உலகின் பல்வேறு இடங்களில் போர்கள் இடம்பெற்று வருகின்றன, தடுப்புச் சுவர்கள் எழுப்பப்படுகின்றன, புலம்பெயர்ந்தோர் பாதுகாப்பற்ற இடங்களுக்குத் திரும்புகின்றனர் என்று கூறியுள்ளார்.
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில், நாற்பது ஆண்டுகளும், பாலைநிலமும், பல நம்பிக்கைதரும் அடையாளங்களைக் காட்டியதால், புதிய மக்களாக உருவாகும் அவர்களது கனவு, ஒன்றுசேர்ந்து நடக்க அவர்களை அனுமதித்தது என்றுரைத்த திருத்தந்தை, புலம்பெயர்ந்தோரே, நீங்கள் இந்நம்பிக்கையின் அடையாளங்கள் மற்றும் முகங்கள் என்று கூறினார்.
அஸ்தாலி மையத்தில் கடந்த 40 ஆண்டுகளாக, தங்களின் நேரம் மற்றும் சக்தியைச் செலவழித்துவரும் நன்மனம்கொண்ட பலரின் கதைகளும், அதே நம்பிக்கையின் அடையாளங்கள் என்றுரைத்த திருத்தந்தை, இவர்களை நல்ல சமாரியர்கள் என்று அழைத்து, அவர்களது பணிகளை ஊக்குவித்தார்.
அஸ்தாலி மையம் அமைத்துள்ள இந்த கண்காட்சியைப் பார்வையிடுவோருக்கு, அது உரோம் மாநகரின் சில இடங்களை நினைவுபடுத்தும் என்றும், இது, ஒருமைப்பாட்டுணர்வுகொண்ட குழுமத்தைக் கட்டியெழுப்ப உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
இறுதியில், உலகளாவிய இயேசு சபையின் முன்னாள் தலைவர் இறைஊழியர் அருள்பணி பேத்ரோ அருப்பே அவர்களிடம், அஸ்தாலி மையத்தையும், இயேசு சபையினரின் புலம்பெயர்ந்தோர் அமைப்பையும், புலம்பெயர்ந்தோரையும் அர்ப்பணித்து, திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையை நிறைவுசெய்தார். உரோம் மாநகரின் புனித அந்த்ரேயா ஆலயத்தில், நவம்பர் 16 ஆம் தேதி, செவ்வாயன்று, திறக்கப்பட்டுள்ள அஸ்தாலி மையத்தின் இக்கண்காட்சி, இம்மாதம் 28 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Comment