நம் வாழ்வு’ சிறப்பிதழுக்கான அணிந்துரை
16வது உலக ஆயர்கள் மாமன்றம் - 2023
“கடவுள் ஒவ்வொன்றையும் அதனதன் காலத்தில் செம்மையாகச் செய்கிறார்”(சஉ 3:11).
இறையாட்சி பணியை இவ்வுலகமெங்கும் புதுப்பொலிவுடன் தொடர்ந்தாற்றிட ஒரே தலைமையின் கீழ் ஒரு கருத்தோடு சிந்தித்து செயலாற்றிட தாயாம் திருஅவை “ஆயர்கள் மாமன்றத்தின்” வழியாக நமக்கு அழைப்புவிடுக்கிறது.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “அகில உலக ஆயர்கள் மாமன்றம் - 2021-2023: கூட்டொருங்கியக்கத் திருஅவை தோழமை-பங்கேற்பு-பணி” (Synod for a Synodal Church: Communion, Participation, and Mission) என்னும் மாமன்றத்தை தொடங்கிவைத்தார். இம்மாமன்றத்தின் செயல்பாடுகள் மாபெரும் ஒளி பிம்பமாய் எத்திசையிலும் ஒளிர்ந்து இருளான மனித
சமுதாயத்திற்கு பேரொளியாய் ஒளிர இருக்கிறது. கரடுமுரடான திருஅவையின் வளர்ச்சிபாதைகளைச் சரிப்படுத்தி விண்ணரசை நோக்கி பயணிக்க வழியமைக்க காத்திருக்கிறது
மாமன்றம் என்ற சொல் உணர்த்தும் உண்மை அர்த்தம் திருஅவையோடு இணைந்து பயணித்தல் என்பதாகும். திருஅவையின் உறுப்புகளாக இளையோர், முதியோர், ஆண்கள், பெண்கள், இளம்பருவ குழந்தைகள், விளிம்பு நிலையில் உள்ளோர், மாற்றுத்திறனாளிகள், பொதுநிலையினர் அனைவரையும் கருத்தில் கொண்டு காலத்தின் அறிகுறிகளை அடையாளம் காண இம்மாமன்றம் விழைகிறது.
உலகின் எத்திசையிலும் உள்ள ஆயர்கள் ஒன்றாக இணைந்து திருத்தந்தையின் தலைமையிலே ஒன்றுகூடி 2021 முதல் 2023 வரை திருஅவையின் செயல்பாடுகளை சீர்தூக்கி, பகிர்ந்து, சீரமைக்கும் மறுமலர்ச்சியின் காலம் இது. இதன் தொடக்க நிகழ்வாக அனைத்து மறைமாவட்டத்திலும் ஆயர்கள் கொடியேற்றி சிறப்பித்திருக்கிறார்கள்.
உலகிற்கு வெளிச்சம் தரும் சூரியனைப்போல திருஅவைக்கு உள்ளொளி தந்து ஊக்கமளிக்கும் நற்கருணை பிரசன்னம் மாமன்ற கொடியிலே இலட்சினையாக இடம் பெற்றிருப்பது நமக்கு மிகப்பெரிய ஆசீர்வாதத்தை பெற்றுத் தருவதாக உள்ளது.
ஆதியிலே தண்ணீரின் மீது அசைந்தாடி உலகின் முகத்தைப் புதுப்பித்த தூய ஆவியாரே இம்மாமன்றத்திலும் தனது வரங்களையும் கொடைகளையும் தந்துகொண்டிருக்கிறார்.
ஒன்றிப்பு-பங்கேற்பு-நற்செய்தி அறிவிப்பு என்ற முத்தான மும்முனைச் சிந்தனைகளை முன் வைக்கிறது நம் மாமன்றம்.
உலக எத்திசையிலும் உள்ள திருஅவையின் அங்கத்தினர்கள் ஒன்றிணைந்து தங்களது தாராள பங்களிப்பைத் தந்து திருஅவையின் நற்செய்தி படிப்பினை உலக எத்திசையிலும் பரப்பிட இம்மாமன்றம் சிந்திக்க தூண்டுகிறது.
திருஅவையை விட்டு பிரிந்திருந்தாலும் கிறிஸ்தவ மதிப்புகளை வாழ்வாக்கி கொண்டிருக்கும் பிற கிறிஸ்தவ சபைகளோடும் உரையாடல் நடத்தி மாற்றங்களை ஏற்று செயல்பட இம்மாமன்றம் உதவுகிறது.
பல்வேறு கோணங்களில், பல மாற்றங்களையும், சீர்திருத்த செயல்பாடுகளையும் முன்னெடுக்க முன்வந்துள்ள இம்மாமன்ற செயல்பாடுகளில் பங்கெடுப்போம். ஆலோசனைகளை வழங்க காத்திருக்கும் ஆயர்களைத் தூய ஆவியார் வழிநடத்திட தொடர்ந்து செபிப்போம்.
இளமை பொலிவோடும்; தாயாம் திருஅவை தனது வரலாற்றை புதுப்பித்துக்கொள்ள துணை நிற்போம். ‘நம் வாழ்வு’ இந்த ஆயர்கள் மாமன்றத்தையொட்டி பதிப்பிக்கும் இச்சிறப்பிதழுக்கு என் வாழ்த்துக்களையும் ஆசீரையும் அளிக்கின்றேன். இவ்விதழைத் தொடர்ந்து வெளிவரும் மாமன்றத் தயாரிப்புக்கான சிறப்பு வழிகாட்டி நூலை வாங்கி பயன்படுத்தும்படி வேண்டுகிறேன்.
ஒன்றிணைவோம்! பங்கேற்போம்! நற்செய்தியின் தூதுவர்களாவோம்.
இயேசுவில் அன்புள்ள
+ மேதகு முனைவர் அந்தோனி பாப்புசாமி
பேராயர், மதுரை உயர்மறைமாவட்டம்
தலைவர், தமிழக ஆயர் பேரவை
Comment