No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண்போம்

கிறிஸ்து பிறப்பு விழா மற்றும் அதன் மதிப்பீடுகள் குறித்த பாடல்களை உருவாக்கும் போட்டிக்கு ஏற்பாடு செய்துள்ளோர் மற்றும் அதில்  கலந்துகொள்வோரை நவம்பர் 22 ஆம் தேதி திங்கள் காலை வத்திக்கானில் சந்தித்து, திருத்தந்தை பிரான்சிஸ் தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

கிராவிசிமும் எஜியுகேஷிஓநிஸ் என்ற திருப்பீட அமைப்பும், மிஷோனி டான் பாஸ்கோ வால்தோகோ என்ற அமைப்பும் இணைந்து ஏற்பாடுச் செய்துள்ள இந்தப் போட்டியில் கலந்துகொள்ளும் இளையோரை, நவம்பர் 22 ஆம் தேதி திங்கள் காலையில் சந்தித்த திருத்தந்தை, இப்போட்டிக்கு ஏற்பாடு செய்தவர்கள், அதில் பங்குபெறும் இளையோர் மற்றும் இவ்விளையோருக்கு ஊக்கமளிக்கும் பல்வேறு குழுக்களுக்கு தன் வாழ்த்துக்களை வெளியிட்டார்.

கிறிஸ்து பிறப்பு மற்றும் அதன் மறையுண்மைக்கு நம்மை இட்டுச்செல்லும் திருவருகைக் காலத்தின் முகப்பில் இருக்கும் நாம், பெருந்தொற்றின் காரணமாக இக்கொண்டாட்டங்களின் ஒளி மங்கிப்போயிருந்தாலும், கருணை மற்றும் கனிவின் விழாவாக இருக்கும், கிறிஸ்து பிறப்பின் காலத்தில், நம்பிக்கையுடன் முன்னோக்கிச் செல்வோம் என திருத்தந்தை பிரான்சிஸ் அழைப்புவிடுத்தார்,.

உறுதியான அன்பின் பல்வேறு செயல்பாடுகளைப் பகிர்வதில், கிறிஸ்துப் பிறப்பு விழா, தன் ஒளியைக் கொண்டுள்ளது என, இளையோரிடம் உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதே உணர்வுடன், திருஅவை, உடன்பிறந்த நிலையை உள்ளடக்கிய மனிதகுலத்தை கட்டியெழுப்புவதற்கு உதவி வருகிறது என எடுத்துரைத்தார்.

சமுதாயப் பணியில் நம்மை முன்னிறுத்திச் செயல்பட, மன உறுதியும், படைப்பாற்றல் திறனும் முக்கியமானவை என்பதையும் சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, கிறிஸ்து பிறப்பு விழாவுக்கென எழுதப்படும் பாடல்கள், மனிதகுல வளர்ச்சிக்கு உரமூட்டுவதாக, சிறந்ததோர் உலகம் பற்றி ஒன்றிணைந்து கனவு காண உதவுவதாக இருக்கட்டும் என வாழ்த்தினார்.

இவ்வுலகின் செல்வங்கள் வெறுமையாக இருந்து, வெறுமையையே உருவாக்குகின்றன என்பதால், நம் பொதுவான இல்லமாகிய இவ்வுலகின் அனைத்துப் படைப்புக்களின் மற்றும் வரலாற்றின் அழகோடு இணைந்து, இறைவனின் மகிமையைப் புகழ்ந்து பாடுவோம் என்ற அழைப்பை விடுத்து, திருத்தந்தை பிரான்சிஸ் தன் உரையை நிறைவுசெய்தார்.

Comment