No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை, பிரான்ஸ் அரசுத்தலைவர் மக்ரோன் சந்திப்பு

பிரான்ஸ் நாட்டு அரசுத்தலைவர் இம்மானுவேல் மக்ரோன் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று, திருப்பீடத்தில் ஏறத்தாழ ஒரு மணி நேரம் (உள்ளூர் நேரம் பகல் 11:05-12:05) தனியே சந்தித்து கலந்துரையாடினார். திருத்தந்தையைச் சந்தித்த பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், திருப்பீட பன்னாட்டு உறவுகள் துறையின் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் ஆகிய இருவரையும் அரசுத்தலைவர் மக்ரோன் சந்தித்து பேசினார்.

திருப்பீடத்திற்கும், பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே தொடர்ந்து நிலவும் நல்லுறவுகள், சிறப்பாக, அந்நாட்டில் தலத்திருஅவையின் பணிகள், நாட்டின் பொதுநலனை ஊக்குவிப்பதில் மதங்களின் பங்கு போன்ற தலைப்புகள், இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று, திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

மேலும், இருதரப்பினருக்கும் பொதுவான உலகளாவிய விவகாரங்கள் பற்றிய பகிர்வில், கிளாஸ்கோவில் நடைபெற்ற ஊடீஞ26 உலக மாநாட்டின் ஒளியில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரான்ஸ் நாட்டு தலைமைத்துவம், லெபனோன், மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்ரிக்காவில் பிரான்ஸ் நாட்டின் பணிகள் போன்றவையும் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்றும், திருப்பீட செய்தித் தொடர்பகம் கூறியது.

பளிங்கிலான வத்திக்கானின் புனித பேதுரு பசிலிக்கா, திருத்தந்தையின் ஏடுகள், உலக அமைதி நாள் செய்தி, மனித உடன்பிறந்தநிலை ஏடு போன்றவற்றை, திருத்தந்தைஅரசுத்தலைவர் மக்ரோன் அவர்களுக்கு அளித்தார். அரசுத்தலைவர் மக்ரோன் அவர்களும், ஜியோவானி பியாத்ரோ மாப்பி அவர்களால், 1585 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட புனித லொயோலா இஞ்ஞாசியாரின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூல்களை திருத்தந்தையிடம் கொடுத்தார்.

Comment