No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

பஹ்ரைனுக்கு திருத்தூதுப்பயணம் மேற்கொள்ள அழைப்பு

 “திருநற்கருணை ஆராதனை இறைவேண்டல், வரலாற்றில் அனைத்திற்கும், துவக்கமும், முடிவுமாய் இருப்பவர் கடவுளே என்பதை, நாம் ஏற்கச்செய்கிறது. மேலும், இந்த இறைவேண்டல், சான்றுவாழ்வுக்கும், மறைப்பணிக்கும் வலிமையளிக்கும் தூய ஆவியாரின் உயிருள்ள ஒளிச்சுடராகும்என்ற சொற்களை, நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று, தன் டுவிட்டர் செய்தியில் திருத்தந்தை பிரான்சிஸ் பதிவுசெய்துள்ளார்.

இன்னும், ஆயர்கள் ஐந்தாண்டுக்கு ஒருமுறை, திருத்தந்தையைச் சந்திக்கும், அத் லிமினாவை முன்னிட்டு, சுவிட்சர்லாந்து நாட்டு ஆயர்களும், அர்ஜென்டீனா நாட்டு திருப்பீடத் தூதர் பேராயர் மிரோஸ்லாவ் ஆடம்சிக் அவர்களும், நவம்பர் 26 ஆம் தேதி வெள்ளியன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை திருப்பீடத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.

பஹ்ரைன் நாட்டுக்கு அழைப்பு

மேலும், பஹ்ரைன் நாட்டு அரசர் ஹாமாத் அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு, தான் அனுப்பியிருந்த செய்தி வழியாக, அந்நாட்டில் திருத்தந்தை திருத்தூதுப்பயணம் மேற்கொள்ளுமாறு அதிகாரப்பூர்வமாக அழைப்புவிடுத்துள்ளார். நவம்பர் 25 ஆம் தேதி வியாழனன்று, திருப்பீடத்தில் திருத்தந்தையைச் சந்தித்துப் பேசிய, பஹ்ரைன் அரசரின் தூதரக விவகாரங்களின் ஆலோசகர் சேக் காலித் பின் அகமத் பின் முகமத் அவர்கள், அரசரின் அச்செய்தியை திருத்தந்தையிடம் சமர்ப்பித்தார்.

பல்சமய உரையாடல், கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகளுக்கு இடையே புரிந்துணர்வு, மனித உடன்பிறந்த உணர்வின் விழுமியங்களைப் பரப்புதல், மக்கள் மத்தியில் நல்லிணக்கம் ஆகியவற்றை உருவாக்குவதிலும், அதை உறுதிப்படுத்துவதிலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஆற்றிவரும், முக்கிய பங்கு ஆகியவற்றை, பஹ்ரைன் அரசர் பாராட்டியுள்ளார். பஹ்ரைன் அரசரின் இந்த அழைப்பு, மக்கள் மத்தியில் நல்லிணக்கம் மற்றும் திறந்தமனம் உருவாக, அந்நாடு முன்மாதிரிகையாய் உள்ளதைக் காட்டுகிறது என்றுரைத்து, அந்த அழைப்பிற்கு திருத்தந்தை நன்றி கூறியதாக, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

Comment