படைப்பாற்றல் அவசியம்
நம்பிக்கையை வளர்ப்பதற்கு துணிவு
- Author திருத்தந்தை பிரான்சிஸ் --
- Monday, 29 Nov, 2021
உலகினர் அனைவரையும் தொடர்ந்து நெருக்கடியில் வைத்திருக்கும் கோவிட்-19 பெருந்தொற்றை எதிர்கொள்வதற்கு, மனஉறுதி, நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் துணிவு தேவைப்படுகின்றன என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இத்தாலியில் நடைபெற்றுவரும் சமுதாய விழா ஒன்றுக்கு அனுப்பிய காணொளிச்செய்தியில் கூறியுள்ளார்.
“நம்பிக்கையில் உறுதி: துணிச்சலோடு படைப்பாற்றல்” என்ற தலைப்பில், வட இத்தாலியின் வெரோனா நகரில் நவம்பர் 25 ஆம் தேதி வியாழன் மாலையில் துவங்கியுள்ள, திருஅவையின் சமுதாயக் கோட்பாட்டு பொதுநிலையினர் அமைப்பின், 11வது ஆண்டுக் கூட்டத்தில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு இக்காணொளிச் செய்தியை திருத்தந்தை பிரான்சிஸ் அனுப்பியுள்ளார்.
இக்கூட்டத்தின் கருப்பொருள்களான, மனஉறுதி, நம்பிக்கை, படைப்பாற்றல், துணிவு ஆகிய நான்கு சொற்களை மையப்படுத்தி தன் காணொளிச் செய்தியை வழங்கியுள்ள திருத்தந்தை, இச்சொற்கள், ஒரே பொருளைக் கொண்டிருக்கவில்லை எனினும், இவை, மனித இதயத்தை உறுதிப்படுத்தும், திறந்தமனம், நற்பண்புகள், எதார்த்தமான கண்ணோட்டங்கள் ஆகியவற்றின் தொடர்பை எடுத்துரைக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளார்.
துணிவோடு திறமைகளை...
நற்செய்தியில் கூறப்பட்டுள்ள தாலந்து உவமையை நினைவுபடுத்திய திருத்தந்தை, நம் திறமைகளைத் துணிச்சலோடு பயன்படுத்த இயேசு நம்மை அழைக்கின்றார் எனவும், நம்மில் இருக்கின்ற திறமைகளை வெளிக்கொணராமல் அவற்றிலே முடங்கிப்போனால், நற்செய்தியின் கண்களில் நாம் இழப்பை எதிர்கொள்கின்றவர்கள் ஆவோம் எனவும் கூறியுள்ளார்.
இக்கட்டான நேரங்களில் மனஉறுதியோடு துணிந்து செயல்படுவதற்கு எடுத்துக்காட்டுகளாக, பெருந்தொற்றுச் சூழலில் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்கள், பல்பொருள் அங்காடி பணியாளர்கள், துப்பரவுப் பணியாளர்கள், பொருள்களை எடுத்துவந்த வாகன ஓட்டுனர்கள் போன்ற பலரைக் திருத்தந்தை குறிப்பிட்டார்.
துணிவு புதிய செயலுக்குத் தூண்டுதல்
நம்பிக்கை, மனத்துணிவை வலியுறுத்தி புதிய செயல்கள் ஆற்றத் தூண்டுகிறது, திறமைகளை செயல்படுத்த வழிநடத்துகிறது, நம்மில் அர்ப்பணத்தைத் தூண்டிவிட்டு, வாழ்வை, மற்றொரு வாழ்வுக்கு வழங்கச் செய்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
பெருந்தொற்றுக்குப்பின் நாம் வேறோரு நிலையிலே இருப்போம் எனக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், வாழ்கின்ற இடங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்து, சிறந்ததோர் உலகை உருவாக்க நம்மை அர்ப்பணிப்போம் என்று கேட்டுக்கொண்டார். இந்த சமுதாய விழாக் கூட்டத்தில், இங்கிலாந்தின் ஆங்லிக்கன் பேராயர் ஜஸ்டின் வெல்பி அவர்களும் உரையாற்றினார்.
Comment