No icon

வாழ்வுப் பாடங்களாக அமையட்டும்

புலம்பெயர்ந்தோரின் கதைகள்

ஸ்கோலாஸ் என்ற உலகளாவிய இயக்கம், உரோம் நகரில் நடத்திவரும் கருத்தரங்கில் பங்கேற்று வருகின்ற பல்வேறு நாடுகளின் இளையோரை, நவம்பர் 25 ஆம் தேதி வியாழன் மாலையில் திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், புலம்பெயர்ந்தோரின் கதைகளிலிருந்து வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்ளுமாறு  அழைப்புவிடுத்தார்.

புலம்பெயரும் மக்கள், தங்களின் வழிப்பயணங்களில் எதிர்கொள்ளும் கடினமான உண்மைநிலைகளை எடுத்துரைத்த திருத்தந்தை, உதவி அதிகம் தேவைப்படும் மக்களோடு குழுமத்தைக் கட்டியெழுப்பும்வண்ணம், சந்திப்பு கலாச்சாரத்தை உருவாக்குமாறு இளையோரைக் கேட்டுக்கொண்டார்.

உலகளாவிய ஸ்கோலாஸ் இயக்கம், உரோம் நகரில் அமைந்துள்ள மரிய மாத்தர் எக்லேஷியா என்ற பன்னாட்டு பாப்பிறைக் கல்லூரியில் ஏற்பாடுசெய்து நடத்திவரும் கருத்தரங்கில், உலகின் 5 கண்டங்களின் 41 நாடுகளிலிருந்து தெரிவுசெய்யப்பட்டுள்ள 71 இளையோர் பங்கேற்று வருகின்றனர்.

நவம்பர் 23 ஆம் தேதி செவ்வாயன்று துவங்கிய இக்கருத்தரங்கு, 28 ஆம் தேதி வருகிற ஞாயிறன்று முடிவடைகிறது. இக்கருத்தரங்கில் 16 வயதுக்கும், 27 வயதுக்கும் உட்பட்ட இளையோர், பங்கேற்றுவருகின்றனர்.

குழுமங்களில்...

இந்த சந்திப்பில், இளையோர் திருத்தந்தையிடம் சான்றுபகர்வதற்குமுன், அக்கருத்தரங்கில் பங்குகொள்ள இயலாமல் இருந்த ஒரு சிறுமி, குழும வாழ்வுக்கு எவ்வாறு திறந்தமனத்தோடு இருப்பது என்று, அனுப்பியிருந்த கேள்விக்கு முதலில் பதிலளித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தனிநபர் ஒருவர், சந்திப்பதற்கு எவ்வளவு திறமையைக் கொண்டிருக்கிறாரோ அதைப்பொருத்து, குழுமம் அமையும் என்று கூறினார்.

ஒருவர், மக்களைச் சந்திப்பதற்கு திறனற்று இருந்தால், அவரது ஆன்மா உறைந்துபோகும், மாற்றத்திற்கோ வளர்ச்சிக்கோ திறனற்றதாக மாறிவிடும் மற்றும் சந்திப்புக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதற்கு படைப்பாற்றல் அவசியம் என்று திருத்தந்தை கூறினார். நாம் மற்றவரிடம் காட்டும் புன்னகை, நமது உள்ளத்திலிருந்து வரவேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வாழ்க்கையில் உண்மையுள்ளவர்களாக நடக்குமாறும் இளையோரிடம் கூறினார்.

புலம்பெயர்ந்தோர் பற்றி...

ருவாண்டா நாட்டைச் சேர்ந்த புலம்பெயர்ந்த இளைஞன் ஒருவன் கூறிய சான்றுவாழ்வையும், கதையையும் கேட்டபின் பேசியத் திருத்தந்தை, இந்த இளைஞர் வர்த்தக நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு, அதிலிருந்து தப்பியவர் எனவும், புலம்பெயர்ந்தோர் சுற்றுலாப் பயணிகள் அல்ல எனவும், இளையோர், புலம்பெயர்ந்தோரின் கதைகளிலிருந்து, வாழ்வுப் பாடங்களைக் கற்றுக்கொள்ளுங்கள் எனவும் கூறினார்.

இந்த இளைஞனின் பெற்றோர், 1994 ஆம் ஆண்டில் ருவாண்டா நாட்டில் இடம்பெற்ற படுகொலைகளுக்குத் தப்பி காங்கோ சனநாயக நாட்டிற்குச் சென்றனர். தற்போது இந்த இளைஞன் தென்னாப்ரிக்காவில் சட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கிறார். இந்த வாய்ப்புக்கு நன்றிகூறுமாறு திருத்தந்தை அந்த இளைஞனிடம் கூறினார்.

ஸ்கோலாஸ் இயக்கம்

திருப்பீடத்தின் அங்கீகாரம் பெற்று செயல்பட்டுவரும் உலகளாவிய ஸ்கோலாஸ் இயக்கம், நான்கு இலட்சத்திற்கு மேற்பட்ட கல்வி நிறுவனங்களை ஒன்றிணைத்து, 190 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. இந்த இயக்கம், பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட சிறாருக்கும், இளையோருக்கும் பணியாற்றிவருகிறது. சந்திப்புக் கலாச்சாரத்தை உருவாக்கி, எவரையும் ஒதுக்காத ஒரு கல்வியை ஊக்குவிக்கும் நோக்கத்தில், இருபது ஆண்டுகளுக்குமுன், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அர்ஜென்டீனா நாட்டு தலைநகர் புவனோஸ் அய்ரஸ் நகரின் பேராயராகப் பணியாற்றியபோது, ஸ்கோலாஸ் இயக்கத்தைத் துவக்கினார்.

Comment