No icon

புனித ஆன்ட்ரூவின் திருப்பொருள்

ஆப்ரிக்காவுக்கு கொரியாவின் புனித ஆன்ட்ரூவின் திருப்பொருள்

மறைபரப்புப் பணியில் ஒத்துழைப்பை உருவாக்குவதன் அடையாளமாக, தென்கொரியாவின் முதல் கத்தோலிக்க அருள்பணியாளரான புனித ஆன்ரூகிம்டாய்-கான் அவர்களின் திருப் பொருள்கள், ஆப்ரிக்க நாடான புர்கினாஃபாசோவுக்கு வழங்கப்பட்டுள்ளன. தென்கொரியாவின் சோல் உயர்மறைமாவட்டத்தின் யாயுடோ பங்குத்தள மக்கள் அளித்த நன்கொடையால், புர்கினாஃபாசோ நாட்டின் கோபெல்லா உயர்மறைமாவட்டத்தின் கோபெல்லா புனித யோசேப்பு பங்குத்தள ஆலயம் அண்மையில் புதுப்பிக்கப்பட்டது.

தென்கொரியாவுக்கும், புர்கினாஃபாசோ நாட்டிற்கும் இடையே மறைப்பணியில் ஒத்துழைப்பு இடம் பெறுவதன் ஒரு பகுதியாக, யாயுடோ பங்குத்தள மக்கள், கோபெல்லா புனிதயோசேப்பு பங்குத்தளத்திற்கு நன்கொடைகளை வழங்கியுள்ளனர்.

தென்கொரிய கர்தினால் ஆன்ரூயோம்சூ-ஜங் அவர்கள், கோபெல்லா உயர்மறைமாவட்டத்தின் ஆயர் ஜீலியன்கபோர் அவர்களுக்கு, புனித ஆன்ட்ரூகிம் அவர்களின் திருப்பொருள்களை வழங்கி உரையாற்றுகையில், இப்புனிதர் பிறந்த தன் 200வது  ஆண்டை முன்னிட்டு கொண்டாடப்பட்ட யூபிலி ஆண்டில் (நவ.29,2020-நவ.27,2021) இத்திருப்பொருளை ஆப்ரிக்காவுக்கு வழங்குவது மகிழ்ச்சி தருகின்றது என்று கூறினார்.

புனித ஆன்டரூகிம் அவர்கள் வழியாக, கொரியா மற்றும், புர்கினோஃபாசோ கத்தோலிக்கத் திருஅவைகளுக்கு இடையே உடன்பிறப்பு உணர்வு கொண்ட தோழமையைக் கட்டியெழுப்ப, இந்நிகழ்வு நல்ல வாய்ப்பாக அமைந்தது குறித்து மகிழ்கிறேன் எனவும் கர்தினால் ஆன்ரூயோம்சூ-ஜங் அவர்கள் கூறினார். 2020 ஆம் ஆண்டு நவம்பர் 29 ஆம் தேதி துவங்கிய புனித ஆன்ட்ரூகிம் யூபிலி ஆண்டு, 2021 ஆம் ஆண்டு நவம்பர் 27 ஆம் தேதி சனிக்கிழமையன்று நிறைவுற்றது.

Comment