No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

இந்திய கத்தோலிக்கப் பத்திரிகையாளர் கூட்டமைப்பின் 26வது ஆண்டுப் பொதுக்கூட்டம்

திருத்தந்தை பிரான்சிஸ் 2022 ஆம் ஆண்டிற்கு கொடுத்த உலக சமூகத் தொடர்பு தினச் செய்தியை அடிப்படையாகக்கொண்டு ‘வீதிகளுக்குச் செல்லுங்கள் - செவிகொடு, எதிர்கொள், செயல்படு’ என்ற கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு, இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் கூட்டமைப்பின் 26வது ஆண்டுப் பொதுக்கூட்டம், டிச.1 ஆம் தேதி மும்பையில் நடைபெற்றது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படமுடியாத நிலையில், இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நூற்றுக்கணக்கான இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர்களும் முதன்மை ஆசிரியர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தனர். முதலாவதாக, கடந்த ஆண்டு கொரோனா நோய்த்தொற்றுக் காரணமாகவும் பல்வேறு இயற்கை காரணங்களுக்காகவும் மரித்த கத்தோலிக்க பத்திரிகையாளர் கூட்டமைப்பின் உறுப்பினர்கள், அருள்பணியாளர்கள் வர்கீஸ் பால் சே.ச (குஜராத்), அகுஸ்தின் குரியப்பள்ளி (டெல்லி), லிஜோ தாமஸ் (நாக்பூர்), செரியன் நெவ்ரேத்தில் (கேரளா), பேரருள்திரு. பென்னி அகுயியார் (மும்பை) ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் சிறப்பாக அருள்பணி. ஸ்டான் சுவாமிகளுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.

சிறப்பு விருந்தினராக மும்பை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுப்பெற்ற நீதிபதியும் பேரருள்திரு. பென்னி அகுயியார் அவர்களின் சகோதரருமான மாண்புமிகு நீதிபதி அலோய்சியஸ் அகுயியார் அவர்களும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்களாகிய எங்களைப் பெரிதும் ஊக்கப்படுத்தினார். மும்பை பேராயர் கர்தினால் ஆஸ்வால்டு கிரேசியஸ் அவர்கள், தென் அமெரிக்க ஆயர் பேரவைக் கூட்டத்தில் திருத்தந்தையின் பிரதிநிதியாக கலந்துகொண்டு, அன்று முற்பகல் திரும்பிய காரணத்தால் அவரால் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்க இயலவில்லை. இருப்பினும் வீடியோ வழியாக தம் வாழ்த்துச் செய்தியை அனுப்பி ஊக்கப்படுத்தினார். இந்திய கத்தோலிக்க பத்திரிகையாளர் கூட்டமைப்பின் செயலரும் இந்தியன் கரன்ட்ஸ் வார இதழின் ஆசிரியருமான அருள்பணியாளர் சுரேஷ் மாத்யூ க.ச. அவர்கள் அனைவரையும் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து, ரீடர்ஸ் டைஜஸ்ட் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் திரு.மோகன் சிவானந்த், சேவியர் சமூகத்தொடர்புக் கல்வித்துறையின் தலைவர் முனைவர் சைசோன் பி ஓசோப், எழுத்தாளர் அருள்பணி செட்ரிக் பிரகாஷ் சே.ச ஆகியோர் இவ்வாண்டுக் கூட்டத்தின் கருப்பொருளை அடிப்படையாகக்கொண்டு தங்கள் கருத்துரைகளை வழங்கினர்.

இவ்வாண்டுக் கூட்டத்தில் குஜராத் சேசுசபை பணியாளரும் மனித உரிமை செயல்பாட்டாளருமான அருள்பணி. செட்ரிக் பிரகாஷ் அவர்களுக்கும் தலித் உரிமைகளுக்கான செயல்பாட்டாளரும் எழுத்தாளருமான அருள்சகோதரி சுஜாதா ஜெனா அவர்களுக்கும் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும் இந்தி மாதப்பத்திரிகையான நிஷ்களங்கா பத்திரிகைக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்திய பத்திரிகையாளர் கூட்டமைப்பின் தலைவர் திரு. இக்னேஷியஸ் கொன்சால்வ்ஸ் தலைமையுரையாற்றி, கூட்டமைப்பின் புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்தினார். அதனைத் தொடர்ந்து ஆண்டுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இறுதியில் பொருளாளர் அருள்பணி. ஜோபி மாத்யூ அனைவருக்கும் நன்றி கூறினார்.  ‘நம் வாழ்வு’ வார இதழும் இவ்வாண்டுக் கூட்டத்திற்கு பொருளாதார உதவிகளை வழங்கி உறுதுணையாக இருந்தது. ஆசிரியர் குடந்தை ஞானி அவர்களும் இக்கூட்டத்தில் பங்கேற்று அருள்பணி. செட்ரிக் பிரகாஷ் அவர்களுக்கு விருது அறிமுக உரையை வழங்கி கௌரவப்படுத்தினார். தமிழகத்திலிருந்து இவர் ஒருவர் மட்டுமே பங்கேற்றார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. விழாவிற்கான ஏற்பாடுகளை மும்பை செயின்ட் பால்ஸ் சபையினர் சிறப்பாகச் செய்திருந்தனர். (https://www.youtube.com/watch?v=KqGZe7HopYs)

Comment