திருத்தந்தை பிரான்சிஸ்
திருஅவையின் வேர்களுக்கு செல்லும் ஒரு முயற்சியாக...
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Dec, 2021
சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம், ஐரோப்பிய நாடுகளுக்கும், இவ்வுலகிற்கும், ஒற்றுமை, மற்றும் உடன்பிறந்த உணர்வு ஆகிய விழுமியங்களை உணர்த்தும் பயணமாக அமையும் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.
டிசம்பர் 2 ஆம் தேதி முதல், 6 ஆம் தேதி முடிய சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம் குறித்து, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், வத்திக்கான் செய்திக்கு வழங்கிய நேர்காணலில், திருத்தந்தையின் பயணம் இவ்விரு நாடுகளுக்கும், நற்செய்தியின் மகிழ்வையும், நம்பிக்கையையும் வழங்கும் என்று கூறினார்.
திருத்தூதர்களான பவுல் மற்றும் பர்னபா ஆகியோரின் திருத்தூதுப்பணிகளால் பயனடைந்துள்ள சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும், திருத்தந்தை, இப்பயணத்தை மேற்கொள்வது, திருஅவையின் வேர்களுக்கு செல்லும் ஒரு முயற்சியாக இருக்கும் என்று கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.
சைப்பிரசு நாட்டில் தற்போது நிலவும் இறுக்கமான சூழலைப்பற்றிய கேள்வி எழுந்தபோது, அந்நாட்டின் வட பகுதி மக்களுக்கும், சைப்பிரசு அரசுத்தலைவருக்கும் இடையே நிகழ்ந்த பேச்சுவார்த்தைகள், இவ்வாண்டு ஏப்ரல் மாதத்தில் முறிவடைந்ததை, கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டு, அந்நாட்டில் நிலவும் சூழலுக்கு உரையாடல் மட்டுமே மிகச்சிறந்த வழி என்று, திருத்தந்தை, மூவேளை செப உரையில் கூறியதை மீண்டும் வலியுறுத்திக் கூறினார்.
உயர்ந்ததொரு கலாச்சாரத்தின் பிறப்பிடமான கிரேக்க நாட்டிற்கு திருத்தந்தை செல்வது குறித்து தன் நேர்காணலில் குறிப்பிட்ட கர்தினால் பரோலின் அவர்கள், இந்நாடு, மத்தியத்தரைக் கடலோரம் அமைந்திருப்பதை நினைவுகூர்ந்து, இக்கடலில், புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பயணங்கள், திருத்தந்தையின் நினைவுகளிலும், பகிரவுகளிலும் இடம்பெறும் என்று எடுத்துரைத்தார்.
மத்தியத்தரைக் கடல் பயணங்களில் மூழ்கிய பல படகுகளை எண்ணிப்பார்க்கும்போது, இந்த பெருந்தொற்று காலத்தில், நாம் அனைவருமே, கடலில் செல்லும் படகுகளில் உள்ளவர்கள் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியதை சுட்டிக்காட்டிய கர்தினால் பரோலின் அவர்கள், நமது படகுப்பயணம், பெருந்தொற்று, காலநிலை மாற்றம் ஆகியவை உட்பட, பல புயல்களால் சூழப்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டார்.
ஆர்த்தடாக்ஸ் சபைகளின் தாக்கங்களை அதிகம் கொண்டுள்ள சைப்பிரசு நாட்டிலும், கிரேக்க நாட்டிலும் திருத்தந்தை மேற்கொள்ளும் திருத்தூதுப்பயணம், கத்தோலிக்கத் திருஅவைக்கும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கும் இடையே இன்னும் உறுதியான ஒரு பிணைப்பை உருவாக்கும் என்று தான் நம்புவதாகக் கூறி, திருப்பீடச் செயலர், கர்தினால் பரோலின் அவர்கள் தன் நேர்காணலை நிறைவு செய்தார்.
Comment