Papal Visit
மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் - திருத்தூதுப் பயணம்
- Author Fr.Gnani Raj Lazar --
- Sunday, 31 Mar, 2019
மொசாம்பிக், மடகாஸ்கர், மவுரீசியஸ் - திருத்தூதுப் பயணம்
இவ்வருடம் செப்டம்பர் 4ம் தேதி முதல் 10ம் தேதி முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மொசாம்பிக், மடகாஸ்கர் மற்றும் மவுரீசியஸ் ஆகிய நாடுகளில் திருத்தூதுப் பயணம் மேற்கொள்வார் என்று வத்திக்கான் திருப்பீடம் அறிவித்துள்ளது.
இத்திருத்தூதுப் பயணங்களுக்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினைகளையும், அவற்றின் விவரங்களையும் வெளியிட்ட, வத்திக்கான் திருப்பீடச் செய்தித் தொடர்பகத்தின் தலைவர், அலெஸ்சாந்த்ரோ ஜிசொத்தி அவர்கள், இப்பயணங்களின் விவரங்கள் பின்னர் வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.
மொசாம்பிக் நாட்டு வரைப்படம், திருத்தந்தையின் முகம், அந்நாட்டுக் கொடியில் உள்ள வண்ணங்களைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இரு கரங்கள், மற்றும் ஒரு வெண்புறா ஆகியவை அடங்கிய இந்த இலச்சினையில், நம்பிக்கை, சமாதானம், ஒப்புரவு ஆகிய மூன்று சொற்கள் பொறிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
மடகாஸ்கர் நாட்டு திருத்தூதுப் பயணத்திற்கென உருவாக்கப்பட்டுள்ள இலச்சினையில், அந்நாட்டின் வரைப்படம், அந்நாட்டை அடையாளப்படுத்தும் விசிறி வடிவ பனைமரம், அந்நாட்டில் மறைசாட்சிகளாக உயிர் துறந்த ஐந்து பேரின் உருவங்கள் ஆகியவற்றுடன், திருத்தந்தையின் உருவமும் இணைக்கப்பட்டுள்ளது.
‘திருத்தந்தை, சமாதானம் மற்றும் நம்பிக்கையை விதைப்பவர்’ என்ற சொற்கள், இப்பயணத்தின் விருதுவாக்காக அமைந்துள்ளது.
“திருத்தந்தை பிரான்சிஸ், சமாதானத்தின் திருப்பயணி” என்ற சொற்களுடன் வெளியிடப்பட்டிருக்கும் மவுரீசியஸ் திருத்தூதுப் பயணத்தின் இலச்சினையில், அந்நாட்டுக் கொடியின் மீது, திருத்தந்தையின் உருவமும், வெண்புறா ஒன்றின் உருவமும் இடம்பெற்றுள்ளன.
Comment