திருத்தந்தை பிரான்சிஸ்
சைப்பிரசு நாட்டின் அருள்பணியாளர், துறவியருக்கு உரை
- Author குடந்தை ஞானி --
- Saturday, 11 Dec, 2021
டிசம்பர் 2 ஆம் தேதி வியாழன் மாலை, மாரனைட் பேராலயத்தில் அருள்பணியாளர்கள், துறவியர், மறைக்கல்வி ஆசிரியர்கள் மற்றும் பொதுநிலையினர் ஆகியோருக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வழங்கிய உரை:
சகோதர ஆயர்களே, அன்பு அருள்பணியாளரே, துறவியரே, அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, நீங்கள் அனைவரும் செய்துவரும் பணிகளுக்காக, குறிப்பாக, கல்விப்பணி வழியே அருள்சகோதரிகளாகிய நீங்கள் ஆற்றிவரும் பணிகளுக்காக நான் நன்றி கூறுகிறேன். நீங்கள் பணியாற்றும் பள்ளிகளில், இத்தீவில் வாழும் பல குழந்தைகள் பயில்கின்றனர். சந்திப்பு, உரையாடல், பாலங்களை கட்டும் கலை ஆகியவற்றை கற்றுக்கொள்ளும் இடங்களாக பள்ளிகள் உள்ளன. மக்களுடன் நீங்கள் கொண்டிருக்கும் நெருக்கத்திற்காக நன்றி கூறுகிறேன்.
இந்த மண்ணின் மைந்தராக, இயேசுவின் சீடராக, நற்செய்தியைப் பறைசாற்றிய துணிவுகொண்ட தூதராக வாழ்ந்த திருத்தூதர் பர்னபா அவர்களின் அடிச்சுவடுகளில் ஒரு திருப்பயணியாக இந்நாட்டிற்கு வந்திருப்பது எனக்குப் பெரும் மகிழ்வாக உள்ளது. "உறுதியான உள்ளத்தோடு ஆண்டவரைச் சார்ந்திருக்குமாறு அனைவரையும் ஊக்கப்படுத்த" (காண்க. தி.பணிகள் 11:23) விழைந்த பர்னபாவின் ஆவலோடு நானும் இங்கு வந்துள்ளேன்.
இத்தீவில் படிப்படியாக வளர்ந்துள்ள மாரனைட் வழிபாட்டுமுறை திருஅவையை நான் வாழ்த்துகிறேன். இத்திருஅவை, தன் நம்பிக்கையைக் காத்துக்கொள்ள பல்வேறு போராட்டங்களைச் சந்தித்தது. இவ்வேளையில், லெபனோன் சந்தித்துவரும் பிரச்சனைகளை எண்ணிப்பார்க்கிறேன். லெபனோனின் கேதுரு மரங்களின் அழகையும், மாண்பையும் குறித்து விவிலியத்தில் பல்வேறு குறிப்புகள் உள்ளன. இந்த மரமும், வேர்களிலிருந்து துவங்கி, மெதுவாக வளர்கிறது. நீங்களே அந்த வேர்கள், லெபனோனிலிருந்து, சைப்பிரசு நாட்டில் மீண்டும் ஊன்றப்பட்ட வேர்களாக நீங்கள் இருக்கிறீர்கள். சைப்பிரசு நாட்டிற்கும், திருஅவைக்கும் நீங்கள் செய்துவரும் அனைத்திற்காகவும் நன்றி கூறுகிறேன்.
ஓராயிரம் ஆண்டுகளுக்கு மேலாக இங்கு வளர்ந்து வந்துள்ள இலத்தீன் வழிபாட்டு முறை திருஅவையையும் நான் வாழ்த்துகிறேன். வேற்று நாடுகளிலிருந்து இங்கு குடியேறியிருக்கும் பல்வேறு இனங்கள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களுக்கு நான் நன்றி கூறுகிறேன். உலகளாவிய என்று பொருள்படும் கத்தோலிக்கத் திருஅவை, பலரையும் வரவேற்க, பரந்து விரிந்த இடத்தைக் கொண்டுள்ளது. நம்மை அழைப்பதில் ஒருபோதும் சலிப்படையாத கடவுளின் கருணை நம் அனைவரையும் கூட்டிச் சேர்த்துள்ளது.
திருஅவையில் சுவர்கள் இல்லை, இருக்கவும் கூடாது என்பதை தயவுசெய்து நினைவில் கொள்ளுங்கள். நம் அழைத்தலின் வேர்களை எங்கு கண்டுபிடிப்பது? அது, இறைவனின் கருணையில் காணப்படுகிறது. அவர் எப்போதும் நம்மை வரவேற்க காத்திருக்கிறார். திருஅவை ஒரு பொதுவான இல்லம். பன்முகத்தன்மையில் உறவுகளை வளர்க்கும் இடம். பன்முகத்தன்மை மற்றும் நல்லிணக்கத்தின் ஊற்றாக இருப்பவர் தூய ஆவியார்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, உங்கள் புனிதரான பர்னபாவைக் குறித்து சிந்திக்க விரும்புகிறேன். அவரது வாழ்வையும் பணியையும் இரு சொற்களால் குறிப்பிட விரும்புகிறேன்.
முதல் சொல், பொறுமை. புறவினத்தார் நடுவே கிறிஸ்துவைக் குறித்த எண்ணங்களை விதைத்து, அவை வளரும்வரை பொறுமையுடன் பேணிக்காத்தவர் புனித பர்னபா. வேறுபட்ட கலாச்சாரங்களிலும், பராம்பரியங்களிலும் கடவுளின் செயல்பாடுகள் நிகழ்வதை, பொறுமையுடனும், தெளிந்து தெரிவு செய்யும் ஆற்றலுடனும் கண்டவர், புனித பர்னபா. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் வளர்வதில் பொறுமை காட்டுவதுபோல், பர்னபா, சைப்பிரசு மக்கள் வளர்வதில் பொறுமைகாட்டினார்.
அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பொறுமையுள்ள ஒரு திருஅவை நமக்குத் தேவை. மாற்றங்கள் நிகழ்வதைக்கண்டு மனக்கலக்கம் கொள்ளாமல், புதியனவற்றை, நற்செய்தியின் ஒளியில் வரவேற்கும் பொறுமை நமக்குத் தேவை. இருகரம் விரித்து மாற்றங்களை வரவேற்கும் பண்பு, சைப்பிரசு திருஅவைக்குத் தேவை. மத நம்பிக்கையில் பிரச்சனைகளைச் சந்தித்துவரும் ஐரோப்பிய திருஅவைக்கும், வரவேற்கும் பண்பு தேவைப்படுகிறது.
என் சகோதர ஆயர்களே, நீங்கள் அனைவரும் பொறுமையுள்ள மேய்ப்பர்களாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இறைவேண்டல் வழியே இறைவனைச் சந்திப்பதிலும், உங்கள் சகோதர அருள்பணியாளரைச் சந்திப்பதிலும், ஒப்புரவு அருளடையாளம் வழியாகவும், ஏனைய வழிகளிலும் மக்களை சந்திப்பதிலும் சோர்வடையாமல் இருக்கும்படி உங்களிடம் கேட்டுக்கொள்கிறேன். அன்பு அருள்பணியாளரே, உங்கள் மக்களிடம் பொறுமைகாட்டுங்கள், அவர்களுக்கு உற்சாகமூட்டுங்கள், கடவுளின் கருணையையும், மன்னிப்பையும் சலிப்படையாமல் வழங்குங்கள். கண்டனம் செய்யும் நீதிபதியாக இல்லாமல், அன்பு செய்யும் பெற்றோராக இருங்கள்.
பர்னபாவின் வாழ்வில் விளங்கிய இரண்டாவது அம்சம், அவர், திருத்தூதர் பவுலுடன் கொண்ட நட்பும், அதன் பயனாக அவ்விருவரும் மேற்கொண்ட பணிகளும். பவுல், கிறிஸ்தவர்களை கொடுமைப்படுத்தி வந்ததால், அவரது மனமாற்றத்திற்குப் பின், "அவரும் ஒரு சீடர் என்பதை நம்பாமல் அனைவரும் அவரைக் கண்டு அஞ்சினர்." (தி.பணிகள். 9:26). இவ்விடத்தில் திருத்தூதர் பணிகள் கூறுவது இதுதான்: "பர்னபா அவருக்குத் துணை நின்று அவரைத் திருத்தூதர்களிடம் அழைத்துச்சென்றார்." (தி.பணிகள். 9:27). ஒருவரைப்பற்றி கொண்டிருக்கும் எண்ணங்களால், அவரை முத்திரை குத்துவது எளிது, ஆனால், அவரை ஏற்றுக்கொண்டு வாழ்வதே உண்மையான உடன்பிறந்த நிலை. இதையே நாம் நல்ல சமாரியரிடமும் காண்கிறோம் (காண்க. லூக். 10:25-37). பொறுமை, உடன்பிறந்த நிலை என்ற இரு கருத்துக்களை உங்களுக்கு கூற விழைகிறேன்.
உடன்பிறந்தோரைப்போல் பணியாற்றிய பர்னபாவும், பவுலும், நற்செய்தியைப் பரப்ப பல இடங்களுக்குச் சென்றவேளையில், தூய ஆவியாரால் தூண்டப்பட்டு, "சைப்பிரசுக்குக் கப்பலேறினார்கள்" (தி.பணிகள். 13:4). பின்னர், வாழ்வில் நடப்பதுபோல், அவர்களிடையே கடுமையான விவாதம் எழுந்தது. எனவே இருவரும், ஒருவரைவிட்டு ஒருவர் பிரிந்தனர். (தி.பணிகள். 15:39) இருவரும் தங்கள் தனிப்பட்ட விருப்பங்களுக்காக மோதிக்கொள்ளவில்லை, மாறாக, தங்கள் பணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர்.
திருஅவையில் விவாதங்கள் எழுவது நல்லது. ஒருவர் எவ்விதத்திலும் மற்றவருடன் கருத்து வேறுபாடு கொள்ளாமல் வாழ்ந்தால், அவர் தனக்குள் பதுக்கிவைத்திருக்கும் எண்ணங்களை அறியமுடியாமல் போய்விடும். எனவே, விவாதங்கள் செய்வது, வளர்ச்சிக்கும், மாற்றத்திற்கும் பெரும் உதவியாக இருக்கும். ஆனால், நாம் விவாதிப்பது, ஒருவரோடு ஒருவர் சண்டையிடுவதற்காகவும், நம் எண்ணங்களை அடுத்தவர் மீது திணிப்பதற்காகவும் அல்ல, அந்த விவாதங்கள் தூய ஆவியாரின் வழிநடத்தலைத் தேடுவதற்கு உதவியாக இருக்கவேண்டும்.
என் சகோதர ஆயர்களே, நமக்கு உடன்பிறந்த உணர்வுகொண்ட திருஅவை தேவையாக உள்ளது. சைப்பிரசு நாடு, திருஅவைசார்ந்த பல்வேறு உணர்வுகளையும், வரலாறுகளையும், வழிபாட்டு முறைகளையும் பாரம்பரியங்களையும் கொண்டுள்ளது. இந்த பன்முகத்தன்மையை, நம் தனித்துவத்திற்கு சவால் விடும் ஆபத்தாக நோக்காமல், இதை, நம் வளர்ச்சியின் ஒரு வழியாகக் காண கற்றுக்கொள்ளவேண்டும்.
மத்தியத்தரைக்கடலில் அமைந்துள்ள இத்தீவில் வாழும் நீங்கள், இந்தக் கடல், பல்வேறு கலாச்சாரங்களின் தொட்டிலாகவும், செறிவுமிக்க வரலாறுகளின் பிறப்பிடமாகவும் இருப்பதை உணரவேண்டும். உடன்பிறந்த உணர்வுடன் நீங்கள் பணியாற்றுவதால், ஐரோப்பா முழுவதற்கும், இவ்வுலகம் முழுவதற்கும் பாடங்கள் புகட்டமுடியும். சுவர்களைத் தகர்த்து, அனைவரும் இணைந்து சகோதரர்களாக, சகோதரிகளாக வாழ நீங்கள் சொல்லித்தர வேண்டும். இதுவே, திருத்தூதர்களான பவுல் மற்றும் பர்னபா உங்களுக்கு விட்டுச் சென்றுள்ள பாதை
உங்கள் அனைவருக்கும் நான் ஆசீர் வழங்குகிறேன். எனக்கு அதிக இறைவேண்டல் தேவையாக இருப்பதால், எனக்காக தயவுசெய்து செபியுங்கள்!
Comment