No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

சைப்பிரசு நாட்டின் திருப்பலியில் வழங்கிய மறையுரை

டிசம்பர் 3ஆம் தேதி வெள்ளியன்று, சைப்பிரசு நாட்டின் நிக்கோஸியாவிலுள்ள ஜிஎஸ்பி விளையாட்டு அரங்கத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிறைவேற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரை:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, இயேசு அங்கிருந்து சென்றபோது பார்வையற்றோர் இருவர், “தாவீதின் மகனே, எங்களுக்கு இரங்கும்என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர் (மத். 9:27). தாவீதின் மகனே என்ற பெயர், மெசியாவைக் குறிப்பிடுகிறது. இன்றைய நற்செய்தியில் காணப்படும் இருவரும் பார்வையற்றோராக இருந்தாலும், அவர்கள் இயேசுவை மெசியா என்று புரிந்துகொண்டுள்ளனர். இந்த திருவருகைக் காலத்தில் ஆண்டவரை வரவேற்க இவ்விருவரும் நமக்கு உதவி செய்கின்றனர்.

முதலில், அவர்கள் இயேசுவிடம் குணம்வேண்டிச் சென்றனர். அவர்களால் இயேசுவைக் காணமுடியவில்லையென்றாலும், அவரது குரலைக் கேட்டதும், தாங்களும் குரல் எழுப்பி வேண்டினர். அவர்கள் இருவரும் இயேசுவின் சொற்களில் நம்பிக்கை கொண்டு, தங்கள் பார்வைக்கு ஒளிவேண்டி, இயேசுவிடம் சென்றனர்.

பார்வையற்ற இவ்விருவரைப் போல, நாமும் வாழ்வின் இருளில் மூழ்கியிருக்கிறோம். நாம் செய்யவேண்டிய முதல் கடமை, “பெருஞ்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள், நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத். 11:28) என்று கூறிய இயேசுவிடம் செல்வது. இருப்பினும், நம்மில் பலர், இயேசுவிடம் செல்வதற்குப்பதில், நம் துயரங்களிலும், இருளிலும் தங்கிவிட விழைகிறோம். இயேசுவிடம் செல்வது முதல் முயற்சி.

 

நாம் உள்ளூர குணம்பெற வேறு இரு நிலைகள் உள்ளன. முதல் நிலை, வேதனையைப் பகிர்ந்துகொள்ளுதல். பார்வையற்ற இவ்விருவரும் தங்கள் வேதனையைப் பகிர்ந்துகொண்டனர். நற்செய்தியில் நாம் காணும் வேறு இரு பார்வையற்றோர் (காண்க. மாற். 10:46-52, யோவான் 9:1-41) தனித்தனியே துன்புற்றவர்கள். இவ்விருவரும், தங்கள் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டவர்கள். அதேவண்ணம், அவர்கள், இயேசுவிடம் பேசும்போது, நாங்கள் என்று தங்கள் இருவரையும் இணைத்துப் பேசுகின்றனர். நாம் அல்லது நாங்கள் என்ற சொல், கிறிஸ்தவ வாழ்வின் மிக முக்கியமான ஒரு பண்பு.

பார்வையற்ற நிலையில் இவ்விருவரும் பகிர்ந்துகொண்ட நட்பு, நமக்குப் பாடமாக அமைகிறது. நாம் ஒவ்வொருவரும் நம் பாவங்களால் பார்வையற்றிருக்கிறோம். பாவத்தின் சுமையால், நாம் வேதனையும், கசப்புணர்வையும் வளர்த்துக்கொள்ள, தீயசக்தி நம்மைத் தூண்டுகிறது. இந்த வேதனைகளை தனியே சந்திக்கும்போது, அவை நம்மில் பெரும் விரக்தியை உருவாக்குகிறது. அதற்குப் பதிலாக, நாம் மற்றவர்களோடு நம் வேதனைகளைப் பகிர்ந்துகொண்டால், நம் எதிர்கால வாழ்வைச் சந்திக்கஇயலும்.

நம் தனிப்பட்ட வாழ்விலும், திருஅவை, மற்றும் சமுதாய வாழ்விலும் இருள் சூழ்ந்திருக்கும்போது, உடன்பிறந்த உணர்வை வளர்க்க நாம் அழைக்கப்படுகிறோம். நாம் பிளவுபட்டு நின்றால், நம் பார்வையற்ற நிலையிலிருந்து குணமடைய இயலாது. நாம் ஒருவர் ஒருவருக்கு செவிமடுத்து பேசினால், குணமடைய இயலும். இந்த அருளை நீங்கள் அனைவரும் பெறுவதற்கு நான் சிறப்பாக இறைவேண்டல் புரிகிறேன்.

மூன்றாவது நிலை, அவர்கள் நற்செய்தியை மகிழ்வுடன் பறைசாற்றினர். இங்கு நாம் ஒரு முரண்பாட்டைக் காண்கிறோம். இயேசு அவர்களை நோக்கி. “யாரும் இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்என்று மிகக் கண்டிப்பாகக் கூறினாலும், அவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்தனர் (காண்க. மத். 9:30-31). இயேசுவின் சொற்களை மீறுவது, அவர்கள் நோக்கமல்ல, ஆனால், அவர்கள் இயேசுவை சந்தித்ததால் உருவான மகிழ்வை அவர்களால் கட்டுப்படுத்தமுடியவில்லை. கட்டுப்படுத்தமுடியாத மகிழ்வு, கிறிஸ்தவர் ஒவ்வொருவரின் தனிப்பட்ட அடையாளம்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, விடுதலை அளிக்கும் நற்செய்தியின் மகிழ்வுடன் நீங்கள் வாழ்வதைக் காண, மகிழ்வாக உள்ளது. இந்த மகிழ்வுப் பாதையில் நீங்கள் தொடர்ந்துசெல்ல உங்களை உற்சாகப்படுத்துகிறேன். பார்வையற்ற இவ்விருவரைப்போல, நாம், இயேசுவை மீண்டும் சந்திப்போம். அவரை, துணிவுடன் மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வோம்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, பார்வையற்ற நிலையில் இன்று நாம் எழுப்பும் அழுகுரலைக் கேட்டவண்ணம், இயேசு, இன்று, சைப்பிரசு நாட்டின் வீதிகளைக் கடந்துசெல்கிறார். நம் பார்வையற்ற நிலையைப் போக்க விழைகிறார். “நான் இதைச் செய்ய முடியும் என நம்புகிறீர்களா?” (மத். 9:28) என்று அவர்களிடம் கேட்டதுபோல், நம்மிடமும் கேட்கிறார்.

நாம் அவரிடம் சொல்வோம்: இயேசுவே, உமது ஒளி, எங்கள் இருளைவிட பெரிது. எங்களை குணமாக்கமுடியும் என்று நம்புகிறோம். எங்கள் நட்புணர்வை வளர்த்து, மகிழ்வை அதிகரிப்பீர் என்று நம்புகிறோம். முழு திருஅவையுடன் இணைந்து நாம் சொல்வோம்: வாரும், ஆண்டவர் இயேசுவே!

Comment