No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

நிகோசியா திருச்சிலுவை ஆலயத்தில் புலம்பெயர்ந்தோர் சந்திப்பு

சைப்பிரசு நாட்டின் திருத்தூதுப் பயணத்தின் நிறைவாக, டிசம்பர் 03 ஆம் தேதி வெள்ளி உள்ளூர் நேரம் மாலை மூன்று மணிக்கு, நிகோசியா நகரின் பழங்கால மதில்களுக்குள் அமைந்திருக்கும், திருச்சிலுவை பங்குத்தள ஆலயத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார் திருத்தந்தை பிரான்சிஸ். கிறிஸ்தவ ஒன்றிப்பு திருவழிபாடாக நடைபெற்ற இந்நிகழ்வில், முதலில் எருசலேம் இலத்தீன் வழிபாட்டுமுறை முதுபெரும்தந்தை பேராயர் பியெர்பத்திஸ்தா பிட்ஸபல்லா அவர்கள், திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். மத்தியதரைக் கடலில் அமைந்துள்ள தீவுகளில், ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தோரின் பெருந்துன்பங்களை எதிர்கொண்ட தீவு சைப்பிரசு ஆகும். போர் மற்றும் இடர்களைத் தவிர்ப்பதற்காக புலம்பெயர்ந்துள்ள இம்மக்கள், தங்களின் வருங்காலம்குறித்த தெளிவான வாய்ப்புகள் ஏதுமின்றி உள்ளனர். திருத்தந்தையே, தங்களின் சைப்பிரசு தீவில் திருத்தூதுப் பயணத்தை நிறைவுசெய்வதற்குமுன், இம்மக்களைச் சந்தித்தது சரியானது மற்றும் தேவையானதும் ஆகும். இவ்வாறு பேராயர் பிட்ஸபல்லா அவர்கள் வரவேற்புரையாற்றினார். பின்னர், சைப்பிரசு காரித்தாஸ் அமைப்பின் எலிசபெத் அவர்களும், காங்கோ சனநாயக குடியரசின் மரியாமி, காமரூன் நாட்டின் மக்கோலின்ஸ், இலங்கையின் தாமரா, ஈராக்கின் ரோஸ் என, நான்கு இளம் புலம்பெயர்ந்தோரும் தங்களின் நிலைகளை திருத்தந்தையிடம் எடுத்துரைத்தனர். நீ யார்?, நீ ஏன் இங்கு இருக்கிறாய்? உனது நிலை என்ன? இங்கு தங்கவைக்கப்பட எதிர்பார்க்கப்படுகின்றாயா? எங்கே போவாய்? போன்ற கேள்விகளே என்னை நோக்கிக் கேட்கப்படுகின்றன என்றும், ஒவ்வொரு நாளும் எனது நம்பிக்கை குறைந்து வருகின்றது என்றும், ஒருவர் திருத்தந்தையிடம், தனது நிலையை எடுத்துரைத்தார். இவ்வாறு பல்வேறு சூழல்களிலிருந்து வந்துள்ள இந்த நால்வரும், தங்களின் நிலைகளை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டனர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த நால்வரின் பகிர்வுகளைக் கேட்டபின்னர், ஒவ்வொருவரது பெயரையும், அவர்களின் நாடுகளோடு குறிப்பிட்டு, தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்டார்.

திருச்சிலுவை பங்குத்தள ஆலயத்திற்கு புனித யோசேப்பு திருவுருவம் ஒன்றையும் பரிசாக வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். நிகோசியாவில் புலம்பெயர்ந்தோரைச் சந்தித்த இந்நிகழ்வோடு திருத்தந்தையின் சைப்பிரசு நாட்டு இரண்டு நாள் திருத்தூதுப் பயணம் நிறைவுற்றது என்று சொல்லலாம். டிசம்பர் 4 ஆம் தேதி இச்சனிக்கிழமை காலையில், நிகோசியா திருப்பீடத் தூதரகத்தில் தனியாக திருப்பலி நிறைவேற்றியபின்னர், அந்த இல்லத்தில் தனக்கு உதவிசெய்த அனைவருக்கும் நன்றி சொல்லி, சைப்பிரசு நாட்டின் லானார்க்கா பன்னாட்டு விமானத்தளம் சென்றார் திருத்தந்தை. சைப்பிரசு குடியரசின் அரசுத்தலைவர் நிக்கோஸ் அனஸ்தஸ்சியாதிஸ் அவர்கள், விமானநிலையத்தில் திருத்தந்தையை வரவேற்று அவரது ஆசீரைப் பெற்று, இப்பயணத்திற்காக திருத்தந்தைக்கு நன்றி கூறி, அரசு மரியாதையுடன், திருத்தந்தையை கிரேக்க நாட்டிற்கு வழியனுப்பி வைத்தார். திருத்தந்தையும், அந்நாட்டின் விருந்தோம்பலுக்கும், நம்பிக்கை, அமைதி மற்றும் ஒன்றிப்புகுறித்த தனது செய்திக்கு அந்நாட்டினர் அளித்த வரவேற்புக்கும் நன்றி தெரிவித்து, அந்நாட்டில் அமைதி நிலவச் செபித்து, தந்திச் செய்தி ஒன்றை அனுப்பினார்.

சைப்பிரசில் பிரியாவிடை

லானார்க்காவிலிருந்து, கிரேக்க நாட்டின் தலைநகர் ஏதென்சு நகருக்கு ஒரு மணி நாற்பது நிமிடங்கள் விமானப்பயணம் மேற்கொண்டு, உள்ளூர் நேரம் முற்பகல் 11.10 மணிக்கு, அதாவது இந்திய-இலங்கை நேரம் பிற்பகல் 2.40 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் ஏதென்ஸ் நகரின் பன்னாட்டு விமானத்தளம் சென்றடைந்தார்.         

Comment