No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஏதென்ஸ் நகரில் திருத்தந்தைக்கு வரவேற்பு

ஏதென்ஸ் பன்னாட்டு விமானத்தளத்தில், கிரேக்க நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் நிக்கோஸ் டென்டியாஸ் அவர்கள், கிரேக்க அரசு சார்பாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை வரவேற்றார். நான்கு சிறார், மலர்கள் அளித்து திருத்தந்தையை வரவேற்றனர். வெளியுறவு அமைச்சர் நிக்கோஸ் டென்டியாஸ் விமானநிலையத்தின் விருந்தினர் அறையில் திருத்தந்தையை தனியேச் சந்தித்துப் பேசினார். பின்னர் அங்கிருந்து 31 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள அரசுத்தலைவர் மாளிகைக்கு திருத்தந்தை காரில் சென்றார். அவரை கிரேக்க நாட்டு அரசுத்தலைவர் கேத்ரினா சேக்லரோபோலு அவர்கள் வரவேற்றார். அம்மாளிகையில் அரசு மரியாதையுடன்கூடிய வரவேற்பும் திருத்தந்தைக்கு அளிக்கப்பட்டது. பின்னர் அரசுத்தலைவர் கேத்ரினா சேக்லரோபோலு அவர்களை அம்மாளிகையில் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அந்நாட்டுப் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடேகிஸ் அவர்களையும் தனியே சந்தித்தார். திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்களும், நாடுகளின் பன்னாட்டு உறவுகளின் திருப்பீடச் செயலர் பேராயர் பால் ரிச்சர்டு காலகர் அவர்களும் பிரதமரைச் சந்தித்துப் பேசினர். பின்னர் திருத்தந்தை அம்மாளிகையில் அந்நாட்டு அரசு, தூதரக மற்றும் பொது மக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்நிகழ்வில், முதலில் அரசுத்தலைவர் கேத்ரினா சேக்லரோபோலு அவர்கள், கிரேக்க மொழியில் திருத்தந்தையை வரவேற்று உரையாற்றினார். அரசுத்தலைவர் கேத்ரினா சேக்லரோபோலு அவர்கள் 300க்கு 261 வாக்குகள் பெற்று, 2020 ஆம் ஆண்டு சனவரி 20 ஆம் தேதி அத்தலைமைப் பணியை ஏற்றார். கிரேக்க நாட்டு வரலாற்றில் பெண் ஒருவர் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். அரசுத்தலைவரின் வரவேற்புரைக்குப் பின்னர், திருத்தந்தையும் கிரேக்க நாட்டிற்கு தன் முதல் உரையை வழங்கினார். திருத்தந்தையின் உரைக்குப்பின், பரிசுப்பொருள்களும் பரிமாறப்பட்டன. "ஐரோப்பாவின் நினைவான" கிரேக்க நாட்டை கடவுள் ஆசீர்வதிப்பாராக என்று அரசுத்தலைவர் மாளிகையின் விருந்தினர் புத்தகத்திலும், திருத்தந்தை கையெழுத்திட்டார். அதற்குப்பின். திருத்தந்தை பிரான்சிஸ் அங்கிருந்து 5.8 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள திருப்பீட தூதரகம் சென்று மதிய உணவருந்தி சிறிதுநேரம் ஓய்வெடுத்தார்.

டிசம்பர் 04 ஆம் தேதி, சனிக்கிழமை மாலை நிகழ்வுகள்

டிசம்பர் 04 ஆம் தேதிசனிக்கிழமை மாலையில், ஏதென்ஸ் நகரிலுள்ள ஆர்த்தடாக்ஸ் பேராயர் இல்லம் சென்று முதுபெரும்தந்தை 2 ஆம் எரோணிமுஸ் அவர்களைச் சந்திப்பது, அதற்குப்பின் புனித தியோனிஜியுஸ் பேராலயத்தில், ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் வேதியரைச் சந்திப்பது, இயேசு சபையினரைச் சந்திப்பது ஆகியவை, முதல் நாள் பயண நிகழ்வுகளாக உள்ளன. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2016 ஆம் ஆண்டில் கிரேக்க நாட்டுத் தீவான லெஸ்போசுக்குச் சென்று புலம்பெயர்ந்தோரைச் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 2001 ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்கள் ஏதென்சுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டார். 1054 ஆம் ஆண்டில், கத்தோலிக்க மற்றும், ஆர்த்தடாக்ஸ் சபைகளுக்கு இடையே ஏற்பட்ட பெரும் பிளவுக்குப்பின், திருத்தந்தை ஒருவர் அங்குச் சென்றது அதுவே முதல் தடவையாகும். திருத்தந்தை புனித 2 ஆம் யோவான் பவுல் அவர்கள் ஏத்தென்ஸ் சென்ற ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்குப்பின், தற்போது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அந்நகரில் திருத்தூதுப் பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

Comment