No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தையுடன் சந்திப்பில் உரை

கிரேக்க ஆர்த்தடாக்ஸ் முதுபெரும் தந்தை இரண்டாம் எரோனிமுஸ் அவர்களுடன் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொண்ட சந்திப்பில், திருத்தந்தை வழங்கிய உரையின் சுருக்கம்:

கடவுளின் அருளும் அமைதியும் உங்களுக்கு உரித்தாகுக! (உரோ 1:7) என, கிரேக்க நாட்டில் புனித பவுல் இருந்தபோது உரோம் மக்களுக்கு எழுதிய அதே வார்த்தைகளுடன் இன்று உங்களை வாழ்த்துகிறேன். இன்றைய நம் சந்திப்பு, அருளையும் அமைதியையும் புதுப்பிப்பதாக உள்ளதுநான் உரோம் நகரின் புகழ்பெற்ற திருத்தலங்கள் மற்றும் திருத்தூதர்களின், மறைச்சாட்சிகளின் கல்லறைகளில் செபித்தபோதெல்லாம், திருத்தூதர்கள் வழி நம்மிடையே நிலவும் உறவுகளை புதுப்பிக்கவும், உடன்பிறந்த நிலையுடன்கூடிய பிறரன்பை ஊக்குவிக்கவும், இம்மண்ணிற்கு தாழ்மையுடன் ஒரு திருப்பயணியாக வரவேண்டும் என ஆவல்கொள்வதுண்டு.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால், முதுபெரும் தந்தையே, நாமிருவரும் லெஸ்போஸ் தீவில் சந்தித்தோம். புலம்பெயர்ந்து வாழும் நம் சகோதரர், சகோதரிகளின் துயர்நிலைகளைக் கண்டோம்.

நாம் வாழும் இரு வேறு நிலப்பகுதிகளிலும், ஒலிவ மரம், பொதுவான ஒன்றாக உள்ளது. நம்மை இணைக்கும் இந்த மரங்களைக் குறித்து சிந்திக்கும்போது, நாம் நமக்குள் பகிரும் வேர்கள் குறித்து நான் எண்ணிப்பார்க்கிறேன். திருத்தூதர்களை அடித்தளமாகக் கொண்டு கட்டப்பட்டுள்ளீர்கள் (எபே 2:20) என புனித பவுலும் கூறுகிறார். ஆனால், பிற்காலங்களில், துயரம் தரும்விதமாக, நமக்குள் பிரிவினை ஏற்பட்டது. உலக அக்கறைகளால் விஷமாக மாறி, சந்தேகம் எனும் களைகளால் நாம் விலக்கி வைக்கப்பட்டு, ஒன்றிப்பை வளர்க்கத் தவறினோம். இயேசுவோடும் நற்செய்தியோடும் தொடர்பற்ற சில தீர்மானங்கள், மற்றும் நடவடிக்கைகளால், நம்மிடையே நிலவேண்டிய ஒன்றிப்பை, கத்தோலிக்க திருஅவை, பலவீனப்படுத்தியுள்ளது. பல கத்தோலிக்கர்களால் நிகழ்த்தப்பட்ட இந்த தவறுகளுக்காக, நான் இறைவனிடமும், நம் சகோதரர் சகோதரிகளிடமும் மீண்டுமொருமுறை மன்னிப்பை வேண்டுகிறேன்.

நம் நாடுகளில் பொதுவாகக் காணப்படும் ஒலிவ மரத்தைக் குறித்து எண்ணும்போது, அதன் இறுதி கனியான எண்ணெயைக் குறித்து பேசவிழைகிறேன். இது விலையுயர்ந்த கலங்களில் நிரப்பப்பட்டு பாதுகாக்கப்பட்டது. ஒலிவ எண்ணெய் இருளிலிருந்து வெளிச்சத்தைத் தர பயன்படுத்தப்பட்டது. நம்மைப் பொருத்தவரையில், இது, தூய ஆவியாரை நினைவூட்டுகிறது. நம் ஒன்றிப்பை நோக்கிய பாதையில் ஒளியூட்டவல்லவர் தூய ஆவியாரே.

தூய ஆவியார், அனைத்திற்கும் மேலாக, ஒன்றிப்பின் எண்ணெயாக உள்ளார். உடன்பிறந்தநிலையுடன்கூடிய ஒன்றிப்பு, கடவுளின் ஆசீரைக் கொணர்கிறது. “தலையினிலே ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம், தாடியினின்று வழிந்தோடியது” (தி.பா. 133:2), என திருப்பாடலில் வாசிக்கிறோம். நாமும் எவ்வித அச்சமும் இன்றி, ஒவ்வொருவரும் இறைவனைத் தொழவும், அடுத்திருப்பவருக்கு பணியாற்றவும், உதவுவோம். அதேவேளை, நாம் பிரிந்த நிலையில் வாழும்போது, உலகில் நற்செய்திக்கு எவ்விதம் சான்று பகரமுடியும் என்பது குறித்து சிந்திப்போம். நம்மில் ஒன்றிப்பு இல்லையெனில், கிறிஸ்துவின் அன்பை நம்மால் எப்படி பறைசாற்றமுடியும்?

தூய ஆவியார் ஞானத்தின் எண்ணெயாகவும் உள்ளார். இவ்வேளையில், கிரேக்க ஆர்த்தடாக்ஸ் திருஅவைக்கும் கத்தோலிக்க திருஅவைக்கும் இடையே, கலாச்சாரத் துறையில் நல்ல பலன் தரும் ஒத்துழைப்பு இடம்பெற்றுவருவதையும், இக்குழுவை 2019 ஆம் ஆண்டு நான் சந்தித்ததையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இறுதியாக சொல்லவேண்டுமானால், தூய ஆவியார், ஆறுதலின் எண்ணெயாக உள்ளார். இன்றும், பலவீனமானவர்கள், மற்றும் ஏழைகளின் துயர்களை உலகின் கவனத்திற்கு கொண்டுவரவேண்டும் என அவர் நம்மை வலியுறுத்துகிறர்.

நம் காயப்பட்ட உறவுகளைக் குணப்படுத்தவும், இறைஆறுதலை உலகிற்கு கொணரவும், நாம் ஒருவருக்கொருவர் செபிக்க வேண்டியுள்ளது. உயிர்த்த இயேசுவின் காயங்களில் நம்பிக்கையையும், இரக்கத்தையும், அன்பையும் கண்டனர் திருத்தூதர்கள். அதே நிலையை தூய ஆவியாரும் நமக்கு வழங்கட்டும். எதிர்மறை அனுபவங்களாலும், பழங்கால முன்சார்பு எண்ணங்களாலும் முடங்கிவிடாமல், உண்மை நிலைகளை, புதிய கண்கொண்டு நோக்குவோம்.

அன்பு சகோதர முதுபெரும் தந்தையே, முற்காலத்தைவிட தற்போது அதிகமாக காணப்படும் மறைசாட்சிகளும், இம்மண்ணின் புனிதர்களும், நம் ஒன்றிப்பின் பாதையில் நம்மோடு நடைபோடுவார்களாக. இவ்வுலகில், வேறுபட்ட கிறிஸ்தவ சபைகளில் வாழ்ந்தாலும் அவர்கள் அனைவரும் வானுலகில் ஒன்றிணைந்தே வாழ்கின்றனர். இறைவனின் எண்ணெயாக விளங்கும் தூய ஆவியார் நம்மீது பொழியப்படுமாறு இந்த புனிதர்களும் மறைச்சாட்சிகளும் நமக்காக இறைவனிடம் வேண்டுவார்களாக. ஒன்றிப்பை நோக்கிய ஆவலை நம்மில் தூண்டி, ஞானத்தால் நம்மை ஒளிர்வித்து, ஆறுதலால் நம்மைத் தூய ஆவியார் திருநிலைப்படுத்துவாராக.

Comment