No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஏதென்சு நகர் திருப்பலியில், திருத்தந்தையின் மறையுரை

டிசம்பர் 5 ஆம் தேதி ஞாயிறு மாலை, ஏதென்சு நகரின் மேகரான் இசை அரங்கத்தில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில், அவர் வழங்கிய மறையுரையின் சுருக்கம்:

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, திருவருகைக்காலத்தின் இரண்டாம் ஞாயிறு, திருமுழுக்கு யோவானை நமக்கு வழங்குகிறது. பாலைநிலத்தில் தோன்றிய யோவானையும், மனமாற்றத்தைக் குறித்து அவர் தந்த செய்தியையும் இன்றைய நற்செய்தி வலியுறுத்துகிறது. பாலைநிலம், மனமாற்றம் என்ற இவ்விரு சொற்களையும நாம் சிந்திப்போம்.

பாலைநிலம். நற்செய்தியாளர் லூக்கா, இப்பகுதியில், திபேரியு சீசர், ஆளுநர் பிலாத்து, ஏரோது ஆகிய அரசியல் தலைவர்களையும், அன்னா, கயபா என்ற மதத்தலைவர்களையும் அறிமுகம் செய்துவைக்கிறார். இச்சூழலில், நற்செய்தியாளர், பாலைநிலத்தில் வாழ்ந்துவந்த யோவான் கடவுளின் வாக்கைப் பெற்றதாகக் கூறியுள்ளார். (காண்க. லூக். 3:2) கடவுளின் வாக்கு, ஏனைய புகழ்பெற்றவர்களுக்கு வழங்கப்படாமல், யோவானுக்கு வழங்கப்படுகிறது. கடவுள் எப்போதும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறார். அவரது மீட்பின் செய்தி, எருசலேம், ஏதென்சு, உரோம் போன்ற பெரு நகரங்களில் துவங்காமல், பாலைநிலத்தில் துவங்கியது.

பாலைநிலத்தைப் பற்றி இன்னும் சற்று ஆழமாகச் சிந்திப்போம். முக்கியமான ஒரு செய்தியைக் கூற விழைவோர், புகழ்பெற்ற இடங்களில், மக்கள் கூடிவரும் இடங்களில், அச்செய்தியை பறைசாற்றுவர். ஆனால், கடவுளின் வழியை ஏற்பாடு செய்ய வந்திருந்த திருமுழுக்கு யோவான், பாலைநிலத்தில் தன் மீட்பின் செய்தியைப் பறைசாற்றுகிறார். இந்த அனுபவத்தை நாமும் வாழ்வில் அடைந்திருக்கிறோம். புகழில் நாம் மூழ்கியிருக்கும்போது, கடவுளால் நம்மை நெருங்கமுடியாது. ஆனால், பெரும் இடர்களின் நடுவே, கடவுள் நம்மிடம் வருகிறார். பாலைநிலம் போல மாறிவிடும் நம் உள்ளங்களுக்குள் ஆண்டவர் வருகிறார்.

அன்பு சகோதரர்களே, சகோதரிகளே, தனிப்பட்ட அளவிலும், நாடுகள் என்ற அளவிலும், நாம் பாலைநிலத்தில் இருப்பதுபோன்ற உணர்வை அவ்வப்போது பெறுகிறோம். இருப்பினும், அத்தகையைச் சூழல்களிலேயே ஆண்டவர் தன் இருப்பை நமக்கு உணர்த்துகிறார். தன் கருணையுடனும், கனிவுடனும் அவர் நம்மை நெருங்கி வருகிறார்: "அஞ்சாதே, நான் உன்னுடன் இருக்கிறேன்; கலங்காதே, நான் உன் கடவுள், நான் உனக்கு வலிமை அளிப்பேன்; உதவி செய்வேன்" (எச. 41:10) என்று கூறுகிறார். கடவுள் வந்து சந்திக்காத இடம் என்று எதுவும் இல்லை. எனவே, எந்த ஒரு கடினமானச் சூழலையும் கண்டு நாம் கலங்கவேண்டாம்.

தற்போது, மனமாற்றம் என்ற இரண்டாவது சொல்லை சிந்திப்போம். திருமுழுக்கு யோவான் வலியுறுத்திக் கூறிய இந்த உண்மையும், பாலைநிலம் போன்று, கடினமான உண்மை. மனமாற்றம் என்பது, உன்னத நிலையை அடைய நாம் மேற்கொள்ளும் முயற்சி என்ற கோணத்தில் எண்ணிப்பார்க்கிறோம். ஆனால், உன்னதமான எண்ணங்கள் கொண்டிருந்தாலும், அடிக்கடி நாம் தவறுகள் செய்கிறோம். இதையே புனித பவுல் இவ்வாறு கூறியுள்ளார்: "நன்மை செய்யும் விருப்பம் என்னிடம் இல்லாமல் இல்லை; அதைச் செய்யத்தான் முடியவில்லை. நான் விரும்பும் நன்மையைச் செய்வதில்லை; விரும்பாத தீமையையே செய்கிறேன்." (உரோமையர் 7:18-19)

மனமாற்றத்தைக் குறிக்க, நற்செய்தியில் பயன்படுத்தப்பட்டுள்ளமெட்டாநோயின்என்ற கிரேக்கச் சொல், இச்சொல்லின் பொருளை புரிந்துகொள்ள உதவியாக உள்ளது. இச்சொல்லைமெட்டாமற்றும், ’நோயின்என்று பதம்பிரித்து பொருள்கொண்டால், ’கடந்து சிந்திப்பதுஎன்ற பொருளை வழங்குகிறது. நாம் பொதுவாக சிந்திக்கும் பாணியைக் கடந்து சிந்திப்பது, மனமாற்றத்தை உருவாக்குகிறது.

திருமுழுக்கு யோவான், மனமாற்றத்திற்கு அழைக்கும்போது, நம்மை, நமது தற்போதையை நிலையிலிருந்துகடந்துசெல்ல அழைக்கிறார். கடவுள் அனைத்திற்கும் மேலானவர், பெரியவர் என்பதால், நாம், நமது சிறுமைத்தனத்தில் மூழ்கிப்போகாமல், கடந்து செல்வதற்கு யோவான் நம்மை அழைக்கிறார். ஆண்டவருக்கு நாம் முதலிடம் வழங்கும்போது, அனைத்தும் மாறுகின்றன. அதுவே உண்மையான மனமாற்றம்!

கடவுளோடு நாம் இருந்தால், அனைத்தும் மாறும் என்ற நம்பிக்கையைப் பெறுவதற்கு அவரிடம் கேட்போம். நமது அச்சங்களை அகற்றி, காயங்களை குணமாக்கி, நம் பாலைநிலத்தை நீரூற்றுகளாக மாற்றவேண்டும் என்று மன்றாடுவோம். பாலைநிலமாக மாறியுள்ள இன்றைய உலகம், இத்தகைய ஒரு நம்பிக்கைக்காக, தாகம் கொண்டுள்ளது.

அன்னை மரியாவைப்போல, நம்பிக்கை மற்றும் மகிழ்வை விதைப்பவர்களாக நாம் மாற, அந்த அன்னை நமக்கு உதவிகள் செய்வாராக! நாம் எந்த ஒரு பாலைநிலச் சூழலில் வாழ்ந்தாலும், அதனை, வாழ்வுதரும் அனுபவமாக மாற்ற, இறைவன் வரம் அருள்வாராக.

Comment