No icon

திருத்தந்தை பிரான்சிஸ்

ஏதென்சின் புனித தியோனிசியு பள்ளியில் இளையோர் சந்திப்பு

டிசம்பர் 06 ஆம் தேதி திங்கள், திருத்தந்தையின் 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணத்தின் நிறைவு நாள். இத்திங்கள் உள்ளூர் நேரம் காலை 8.15 மணியளவில் திருப்பீடத் தூதரகத்தில், நாடாளுமன்றத் தலைவரைச் சந்தித்து கலந்துரையாடியபின்னர், அத்தூதரகத்தில் இந்நாள்களில் தனக்கு உதவிசெய்த அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் நன்றி கூறினார். பின்னர் அங்கிருந்து 9 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள ஊர்சுலைன் அருள்சகோதரிகளின் புனித தியோனிசியு பள்ளிக்குச் சென்று இளையோரைச் சந்தித்து உரையாற்றியானார். இளையோரின் ஆடல் பாடல்களோடு நடைபெற்ற இந்த சந்திப்பில், இளையோருக்கு மேய்ப்புப்பணியாற்றும் ஒருவரும், பிலிப்பீன்ஸ் நாட்டு இளம்பெண் கத்தரீனா பினிபினி அவர்களும், சிரியா நாட்டு 18 வயது நிரம்பிய அபோடு கேப்ரோ அவர்களும், டினோஸ் தீவின் அயோனோ விடாலி அவர்களும் தங்களின் சான்றுகளைத் திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வில் இளையோர் திருத்தந்தைக்குப் பரிசுப்பொருள்களையும் அளித்தனர். பாடலுடன் இந்த இளையோர் சந்திப்பு நிறைவுற்றது.   

ஊர்சுலைன் அருள்சகோதரிகள்

ஊர்சுலைன் அருள்சகோதரிகள், 1670 ஆம் ஆண்டில் கிரேக்க நாட்டிற்கு வந்து நாக்சோஸ்ல் ஒரு பள்ளியையும், ஓர் இல்லத்தையும் ஆரம்பித்தனர். அந்நாட்டில், வெளிநாட்டவர் ஒருவர் பள்ளி திறந்தது அதுவே முதன்முறையாகும். அச்சகோதரிகள், 1947 ஆம் ஆண்டில் ஏதென்சில் தொடங்கிய பள்ளி, 2 ஆம் உலகப் போரால் மூடப்பட்டது. பின்னர் 1959 ஆம் ஆண்டில் மீண்டும் அவர்கள் பள்ளியைத் திறந்தனர். அப்பள்ளியில் தற்போது மாணவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. புனித தியோனிசியு பள்ளியில் இளையோரைச் சந்தித்தபின், ஏதென்ஸ் பன்னாட்டு விமானநிலையம் சென்று கிரேக்க நாட்டினருக்கு நன்றி தெரிவித்து உரோம் நகருக்குப் திருத்தந்தை பிரான்சிஸ் புறப்பட்டார். இத்துடன், சைப்பிரசு குடியரசுக்கும், கிரேக்க நாட்டிற்கும், திருத்தந்தை மேற்கொண்ட 35வது வெளிநாட்டுத் திருத்தூதுப் பயணம் நிறைவுக்கு வந்தது. விமானப் பயணத்தில் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் பதிலளித்தார்.

ஏதென்ஸ் விமான நிலையத்தில் பிரியாவிடை

உரோம் சம்ப்பினோ விமானநிலையத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் உரோம் நேரம் பகல் 12.51 மணிக்கு வந்தடைந்தார். வத்திக்கானுக்குச் சென்ற வழியில், உரோம் மேரி மேஜர் அன்னை மரியா பெருங்கோவிலுக்குச் சென்று, அன்னை மரியாவுக்கு நன்றி மலர்களைச் சமர்ப்பித்தார். கத்தோலிக்கர் சிறுபான்மையினராக வாழ்கின்ற கிரேக்க நாட்டில், திருத்தந்தையின் இத்திருத்தூதுப் பயணம், கிறிஸ்தவ ஒன்றிப்புக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்ததாக, கிரேக்க கத்தோலிக்கர் கூறுகின்றனர். அக்கத்தோலிக்கரின் நம்பிக்கை நிறைவேறுவதாக.

Comment